தோல்வியை திருத்தி எழுத கத்துக்கணும்…

0
1

இசை என்பதை அளவிட முடியாது. உலகில் எல்லா உயிர்களையும் இசை இசைய வைக்கிறது. அறிவியலும், ஆன்மீகமும் காலம் காலமாக இசையை வளர்த்தெடுத்து வருகிறது. இசை என்பது மொழி, ஒரு அனுபவம். எந்த அளவுகோலாலும் அளக்க முடியாத பிரபஞ்சம் போன்றது என்கிறார் திருச்சி பெரியமிளகுபாறையைச் சேர்ந்த இளம் இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ.

அவரிடம் நம்ம திருச்சி சார்பில் பேசிய போது,

இசைத்துறையை தேர்ந்தெடுக்க குறிப்பிட்ட காரணம் என்ன?
இசைத் துறைக்கு வந்தது எதிர்பார்க்காத ஒன்று. இளம் வயதிலிருந்தே கீ போர்டு மீது ஒரு தனியாத காதல் உண்டு. காலப்போக்கில் எனது ஆர்வம் இசைத் துறைக்கு என்னை கொண்டு வந்துவிட்டது.

இள வயதில் எனது தாயாருடன் வீட்டிக்கு பக்கத்திலுள்ள சந்தியாகப்பர் ஆலயத்தில் பாட்டுப்பாடுவேன். அப்போதெல்லாம் கூட எனக்கு முழுமையாக கீ போர்டு வாசிக்கவும் பாட்டுப்பாடவும் தெரியாது. எல்லோரும் பாடும்போது அவர்களுடன் சேர்ந்து நானும் பாடி சமாளிப்பேன். ஆனால், காலப்போக்கில் அந்த ஆர்வம் தேவாலயத்தையும் தாண்டி இன்று இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

யாரின் இசை மீது ரொம்ப பிரியம்…
சந்தோஷ் நாராயணன் இசைமீது ஒரு வெறி உண்டு. என் அத்தை மகன் என்னிடம் கீபோர்டு கத்துக்க வந்தார். நான் ட்யூன் போட்டுக் கொண்டிருப்பதை பார்த்து அவர்தான் முதல் முதலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனைசந்திக்க வாய்ப்புஏற்படுத்தி தந்தார்.ஒரு நாள் சந்தோஷ் நாராயணனை சென்னையில் சந்தித்துஎனது ட்யூன்களை வாசிச்சு காமிச்சேன். அவருக்கு ரொம்ப பிடிச்சிடிச்சு.அதன் பிறகு அவரே எனக்கு தொடர்ந்து சப்போர்ட் பண்ணினார்.அவரோடே தொடர்ந்த எனது பயணம் முறைப்படி இசையமைக்கிறத எனக்கு உணர்த்துச்சு.

இதுவரை எத்தனை படங்களுக்கு இசை அமைத்திருக்கிறீர்கள்….
எனதுகல்லூரி காலங்களில்நிறைய குறும்படங்கள்இயக்கியிருக்கிறேன். அந்த படங்களுக்கெல்லாம் நானே இசையமைத்துக் கொள்வேன். அதுமட்டுமில்லாமல், கல்லூரிகளுக்கிடையேநடக்கும் குறும்படபோட்டிகளில் கலந்துகிட்டு வெற்றிபெற்றிருக்கேன். நான் இயக்கிய ‘கண்ணாடி பொம்மைகள்’. ‘உனக்குள் நான்’. உட்பட பல குறும்படங்கள் விருது வாங்கியிருக்கு. 70க்கும் மேற்பட்ட குறும் படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன்.

எதாவது ஆல்பம் பண்ணியிருக்கீங்களா?
இதுவரை நான்கு ஆல்பம் வெளியிட்டிருக்கிறேன். இன்னும் நிறைய பண்ணனும்…

திரைப்படங்களுக்கு இசையமைப்பது குறித்து?
இது வரைக்கும் சினிமா சான்ஸ் ஏதும் இல்லாம இருந்தேன். இப்பத்தான் ‘தங்க ரதம்’ முதல் திரைப்படம் கிடைச்சிருக்கு. அந்த படத்தில் நாலு பாட்டுகளுக்கு இசையமைத்திருக்கிறேன்.

2

திரையிசையில் உங்களது முதல் அனுபவம்…
எத்தனைதான் தன்னம்பிக்கையுடன் வளர முயன்றாலும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் கட்டாயம் ஆளாக வேண்டிவரும். மேலும் நம்மோட எல்லா முயற்சியும் வெற்றிபெறும்னு சொல்ல முடியாது. ஆனா அந்த தோல்வியிலிருந்து நாம பாடம் கத்துக்கலாம். ‘‘சினிமா துறையில் பெரிய ஆளா வருவதெல்லாம் ரொம் கஷ்டம், ஏற்கனவே அங்கு பல ஜாம்பவான்கள் இருக்காங்க. இதையெல்லாம் மீறி ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம்’’ என எனக்கு அவநம்பிக்கை ஊட்டியவர்களுக்கும், கேலி செய்தவர்களுக்கும் எனது வெற்றியை பரிசளிக்க நினைத்தேன். அது எனக்கு ஏற்படுத்திய நம்பிக்கையே உற்சாகத்தை அளித்தது.

வாய்ப்புகளுக்காக எப்படி காத்திருந்தீர்கள்…
எனக்கான வாய்ப்பாக நான் நினைப்பது சந்தோஷ் நாராயணன் சாரை என்னைக்கு சந்திச்சனோ அதுதான். அதன் பிறகு எனக்கு கிடைக்கும் வாய்ப்பெல்லாம் அவர் தந்ததாகவே நினைக்கிறேன். 7 வருடம் கழித்து கிடைத்திருக்கும் இந்த தங்க ரதம் திரைப்பட வாய்ப்பு கூட அவரும், படத்தின் இயக்குநருக்கும் ஒட்டன்சத்திரம் பாலமுருகனுக்கும் செலுத்தும் நன்றியாகத்தான் நினைக்கிறேன். இந்த படத்துக்கு இசையமைத்ததுல எனக்கு கிடைச்ச சம்பளம் இரண்டாயிரம் ரூபாய். ஆனா, அந்த பணம் தந்த பரம ஆனந்தம் சொல்லமுடியாது. அதுதான் என்னை அடுத்தக் கட்ட முயற்சிகளுக்கு தூண்டுகோலா இருந்துச்சு…

உங்களுடைய குடும்பம் பற்றி…
அப்பா ஆட்டோ டிரைவர். அம்மா வீட்டுல தான் இருக்காங்க. அண்ணன் சென்னையில ஆர்.ஜே.வா இருக்கிறார். இவங்க தான் என்னோட எல்லா வெற்றி தோல்வியிலயும் கூட இருந்தவங்க. இருக்கப்போறவங்க.

எங்க படிச்சீங்க…
என்னோட ஸ்கூல், காலேஜ் ரெண்டுமே திருச்சி செயின்ட் ஜோசப்தான்.வேதியியலில் முதுகலை படித்தேன். காலேஜ் படிக்கும் போது கல்லூரி நுண்கலை மன்ற செயலாளராக இருந்தேன். இவையெல்லாம் மறக்கமுடியாதவை.

இளைஞர்களுக்கு ஏதாவது…
வாழ்க்கையில் தோல்வி என்பதை கண்டு வருத்தப்படக்கூடாது. தோல்வியை திருத்தி எழுத கத்துக்கணும். வாய்ப்புகளுக்கு காத்திருக்காமல் அதை உருவாக்கனும். வெற்றிகளில் திருப்தியடையாதவனே மேலும் அதனை தக்க வைக்கமுடியும்.

தமிழக அரசியல் சூழல் குறித்து…
தமிழகத்தில் சரியான தலைவர்கள் இல்லாததால் தவறுகள் தொடர்கின்றன. இன்றைய இளைய சமுதாயத்தினர் அரசியலில் ஈடுபட முனைப்பு காட்ட வேண்டும். சட்ட, திட்டங்களை குறை கூறிக் கொண்டிருக்காமல் அதனை உருவாக்கும், திட்டமிடும் அரசியல்வாதிகளாகவும், அதிகாரிகளாகவும் இளைஞர்கள் மாற முயல வேண்டும். நாளைய தமிழகம் மட்டுமல்ல இந்தியாவும் இளைஞர்கள் கையில் தான்.

தற்போதைய சூழலில் ரஜினி, கமல், விஜய் யாருடைய அரசியல் தலையீடு சரி…
அரசியல் தனிப்பட்ட துறையல்ல. அதில் யார் வேண்டுமானாலும் ஈடுபடலாம். தப்பில்ல. நல்லது பண்ணனும்னு நெனக்கிற யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நல்லது செய்யாதவங்களை மக்களே தூக்கியெறிஞ்சுடுவாங்க..

-ஜெ.கே.

3

Leave A Reply

Your email address will not be published.