குழந்தை பாக்கியம் தரும் குங்குமவல்லி

கடவுள் என்றாலே ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு நம்பிக்கை உண்டு. அதிலும் ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகள் கேட்காத நம்பிக்கை மட்டும் தான் இங்குப் பலரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம். உளவியல் ரீதியாக ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய பிரச்சனைக்கான தீர்வு இங்கு தான் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். அப்படி அறிவியலையும் பொய்யாக்கும் பல சமயம் சார்ந்த கோவில்கள் இங்கு உள்ளது. அதில் ஒன்றைப்பற்றி தான் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம்.
பலநூறு வருடங்களுக்கு முன்பு உறையூரை ஆட்சி செய்து கொண்டிருந்த சூரவாதித்த சோழன் இந்திரன் மற்றும் நாகராஜனின் அனுமதியோடு நாககன்னிகைகளில் ஒரு பெண்ணான காந்திமதி என்பவரை மணந்தார். சிவ பக்தியில் மிகவும் சிறந்து விளங்கிய அப்பெண் திருச்சிரல் மலையில் எழுந்தருளியிருந்த தாயுமான சுவாமியை வழிபாடு செய்து வந்தார். மிகுந்த பக்தி உடையவராக இருந்த காந்திமதி கர்ப்பவதியானாள். அந்தக் காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து தன்னால் தாயுமானவரைத் தரிசிக்க முடியாமல் போனதை நினைத்து கண்ணீர் விட்டு பிரார்த்தனை செய்துள்ளார்.
வேண்டுதலைக் கேட்ட தாயுமானவர் இறங்கி ரிஷபாரூடமாக
(பசுவின் மேல் அமர்ந்து இருக்கும் சிவன்) காட்சி தந்து, உன்னுடைய மகப்பேறு காலம் வரை நீ என்னை இதே இடத்தில் தரிசிக்கலாம் எனக்கூறி நாககன்னிக்குக் காட்சி அளித்துள்ளார். இறைவழிபாட்டிற்காகச் சென்ற சாரமாமுனிவா் நந்தவனம் பகுதிக்கு பூப்பறிக்க சென்றபோது இந்தக் காட்சியை பார்த்ததாக கூறப்படுகிறது.

காந்திமதி அம்மையின் நினைவாகத் தான் ஒவ்வொரு வருடமும் தை மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை கர்ப்பமாக உள்ள பெண்களுக்காகவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமணத் தடை நீங்கவும் பொன், காப்பு, வெள்ளிக்காப்பு, வேப்பிலைக்காப்பு உள்ளிட்டவை அணிவித்துச் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தக் கோவில் உருவான காலங்களில் இருந்தே இது கும்குமவல்லி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இக்கோவிலை நிர்வகித்து வரும் பரம்பரை அறங்காவலர் கருணாமூர்த்தி பிள்ளையின் துணைவியார் சித்ரா கருணாமூர்த்தி பேசுகையில்….
இந்தக் கோவில் வளாகத்திற்குள் சிவன், பாதாள காளி, வராகி, அஷ்ட பைரவர், நவக்கிரக கல்யாண திருக்கோலம் உள்ளிட்ட கோவில்கள் அடங்கி உள்ளது.

இங்குப் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர். குறிப்பாக தான்தோன்றீஸ்வரராக அமைந்துள்ள சிவனிடம் திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும், சுகப்பிரசவம் ஆகவும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
அதேபோன்று பில்லி சூனியம், ஏவல், என்று எந்தப் பிரச்சனையையும் தீர்த்து வைக்கும் பாதாளகாளியை நோக்கியும் பலர் இங்கு வந்து செல்கின்றனர். ஒவ்வொரு மாதமும் இரண்டு பிரதேச பூஜைகளும், பௌர்ணமி பூஜை அன்னதானத்துடன் நடைபெறும்.
300 வருடத்திற்கு முன்பு உருவமற்ற நிலையில் வேப்பரமத்தடியில் வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. நாளடைவில் பூஜை குறைந்ததால் அப்பகுதி மக்களின் கனவில் தோன்றி தான் பாதாளத்தில் குடியேறியதாக காளி தெரிவித்ததாகவும், அதன்பின் தான் பாதாள காளிக்கு கோவில் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறுகிறார். மற்றொரு சிறப்பு பாதாளம் முதல் ஆகாயம் வரை ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ள ஒரே கோவில் இது தான்.
வாரத்தில் திங்கட்கிழமை சிவனுக்குப் பூஜையும், வியாழன் தட்சிணாமூர்த்திக்கும், வெள்ளிக்கிழமை வாய் பேச முடியாதவர்களுக்கு காளியிடம் பூஜை செய்து இஞ்சி மற்றும் தேன் கலந்த சாறு கொடுத்து வருகிறோம். கடந்த 18 வருடங்களாக இந்தச் சாறு கொடுக்கப்பட்டு வருகிறது. பேச முடியாதவர்கள் இங்கு வந்து நல்ல முன்னேற்றத்தை பெற்றுள்ளனர். பலர் குணமடைந்தும் உள்ளதாகக் கூறுகிறார்.
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் இறுதியில் துவங்கி மார்கழி மற்றும் தை மாதத்தில் 48 நாட்கள் பெண்களுக்கு என்று மண்டல பூஜையை நடத்தி வருகிறோம். இந்தாண்டும் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
கோவில் குருக்கள் ஹரி ஹர சுப்ரமணியம் கூறுகையில்…
திருச்சியில் ஒரு பத்திரிக்கையின் விளம்பர பிரிவில் பணியாற்றியவர் அவருடைய மகளுக்குச் சுக பிரசவம் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். அறுவைசிகிச்சை செய்து தான் குழந்தையை எடுக்க முடியும் என்று கூறி அறுவைசிகிச்சைக்கான ஆயத்தபணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் அவர் பூஜை செய்து வைத்திருந்த குங்குமத்தை மகளின் நெற்றியில் வைத்த சில மணி நேரங்களில் சுகப்பிரசவம் நடைபெற்றுள்ளது. அவர் தான் முதன் முதலாக இக்கோவிலைப் பற்றி வெளியே கொண்டு வந்தார்.
அதன்பின் பலர் இந்தக் கோவிலை நோக்கி வரத் துவங்கினார்கள். இதேபோல, ஒரு குடும்பத்தை சேர்ந்த மாமியார் மற்றும் மருமகள் இக்கோவிலுக்கு ஒருவருக்கொருவர் தெரியாமல் வந்து குழந்தை பாக்கியம் வேண்டித் தொடர்ந்து பூஜை செய்து வந்தார்கள். இருவரிடமும் பிரசாதம் அளித்ததின் பலனாக, மருமகளுக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது.
