”சுசி மாமி” அபி….

அலைவரிசையின் ஆளுமைகள்

0

உங்களது சொந்த ஊர், குடும்பம் பற்றி?
என்னுடைய முழு பெயர் அபிராமி. நான் பிறந்தது தஞ்சாவூரை அடுத்துள்ள திருவாரூர். அப்பா நாராயணன் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை பார்த்தார். அம்மா சந்திரா இல்லத்தரசி. எனக்கு நிறைய சுதந்திரம் கொடுத்து தைரியமாக வளர்த்தார்கள்.அதற்கு பிறகு என்னோட கல்யாண வாழ்க்கையும் எனக்கு ஊக்கமளிக்கின்ற விதமாத அமைந்தது. என்னுடைய மகன் தான் என்னுடைய பெரிய ஊன்றுக்கோல்.

பள்ளி, கல்லூரி குறித்து…
நான் 6ம் வகுப்பு படிக்கறப்போ அப்பாவுக்கு பணியிட மாற்றமா திருச்சி வந்தோம்.திருச்சி எனக்கு ஒரு பெரிய திருப்புமுனை தான். 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை சாவித்ரி வித்யாசாலாவிலும் (svs) 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு பெரியார் மணியாம்மையிலும் படித்தேன். சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் பி.காம், எம்.பி.ஏவும் பிஷப் ஹீபர் கல்லூரியில் எம்.பில்.லும் முடித்தேன்.

இந்த ஆர்.ஜே. ஆர்வம் எப்படி வந்தது?
என்னுடைய பள்ளிப்பருவத்திலேயே திருச்சியில் அபிராமி ஹோட்டலின் விளம்பர பலகை எந்த இடத்திலிருந்து பார்த்தாலும் தெரியும்,அதேப்போல் எனது பிறந்தநாள்
நவ 1 அதனால் நான் எப்போதுமே முதலாவதாக இருக்க வேண்டும் என்று விரும்புவேன். அதேபோல் எல்லா இடத்திலும் என்னுடைய பெயர் முதலில் இருக்கவேண்டும் , நமது பெயரை இந்த ஊரே உச்சரிக்கவேண்டும் என நினைப்பேன்.

முதலில் நான் பீ.காம் முடித்துவிட்டு ஏர்செல் வாடிக்கையாளர் சேவை மையத்தில் வேலைக்குச்சேர்ந்தேன்.பிறகு நான் எம்.பீ.ஏ படிக்கும் போது “ஆல் இந்தியா ரேடியோவில்(ALL INDIA RADIO)” வாணி சான்றிதழ் வகுப்பிற்கான தேர்வு நடைபெற்றது. அதில் நான் தேர்ச்சி பெற்று பகுதி நேர அறிவிப்பாளராக 2004-2008ம் ஆண்டு வரை வேலை பார்த்தேன், ஆல் இந்தியா ரேடியோ எனக்கு தாய் வீடு போன்றது.

சூரியன் FMல் உங்களது பங்கு…
2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தினகரன் நாளிதழில் “திருச்சியில் சூரியன் FM உதயம்” விருப்பமுள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று விளம்பரம் வந்தது. கிட்டத்தட்ட 1500 பேர் கலந்துகொண்ட அந்த நேர்காணலில் நானும் கலந்துகொண்டேன்.

நான் உள்ளே செல்லும்போது மாலை 6.45, திருச்சியை பற்றி பேசுங்கள் என்று என்னிடம் கேட்ட உடன் நான் கிராமத்து பாணியில் “என்ற மாமோய்… இம்மாம் பெரிய கோட்டை, இவ்ளோ பெரிய மலையை எப்படியா தூக்கிகொண்டு வச்சாக?” என்று பேசினேன்,

உடனே என்னை தேர்வு செய்தனர். பிறகு ஒரு வாரம் முழுக்க மதுரையில் என்னுடன் சேர்த்து 16 பேருக்கு எப்படி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது? எவ்வாறு வசனங்களை ஒருங்கிணைத்து பேசுவது? என பயிற்சி அளிக்கப்பட்டது.

அங்கே தான் “கிட்டு மாமா சுசி மாமி” என்கிற ஒரு நிகழ்ச்சி இருக்கிறது என்றும், அதில் என்னையும் எனது இணைத்தொகுப்பாளர் மணிகண்டபிரபுவையும் முயற்சிக்க செய்து, அந்த நிகழ்ச்சியை 2008ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி திருச்சி சூரியன் FMல் முதன்முதலாக எங்களுடைய நிகழ்ச்சி ஒளிபரப்பாகி, 4 முதல் 5 வருடம் வரை மிகப்பெரிய வெற்றியை கண்டது.

“ஊர் சுத்தலாம் வாங்க”,”கலாட்டா கிச்சன் சுந்தரி அக்கா” என்று மூன்று நிகழ்ச்சிகள் வழங்கிட்டு இருந்தேன்.

உங்களின் தற்போதைய நிகழ்ச்சி…
நான் எப்போதுமே தயாரிப்புத்துறையிலும் கிரியேட்டிவ் பகுதியிலும் ரொம்ப ஆர்வமாக இருப்பேன், அதனால் ஒன்றறை ஆண்டிலயே எனக்கு நிகழ்ச்சிப் பொருப்பாளராக பதவி உயர்வு கிடைத்தது, இப்போது மூத்த நிகழ்ச்சித் தயாரிப்பாளராக (senior programming producer) உள்ளேன் மற்றும் “கிசு கிசு கீதா மாமி” என்ற ஷோவை மாலை 4 மணி முதல் 5 மணி வரை தொகுத்து வழங்கி வருகிறேன்.

ஆர்.ஜே.வாக மறக்கமுடியாத நினைவுகள்…
“கிட்டு மாமா சுசி மாமி” ஷோவின் போது ஆர்.ஜே மணிகண்ட பிரபுவும் நானும் உண்மையான கணவன் -மனைவி என்ற எண்ணம் நேயர்களிடம் இருந்தது. அப்போது சிறிய குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை எங்களுடைய ஷோவிற்கு விசிறிகளாக இருந்தனர். அலுவலகத்திற்கே நேரில் வந்து பரிசுகள்,இனிப்புகள் கொடுப்பது என தினம் தினம் நிறைய நிகழ்வுகள் நடக்கும்.அதில் மறக்கவே முடியாத நிகழ்வு, ஒரு நாள் பார்வையற்ற ஒருத்தர் எங்களுடைய அலுவலகத்திற்கு வந்து எங்களது கைகளை பிடித்துக்கொண்டு நீங்கள் உண்மையான கணவன்–மனைவிதான். நீங்கள் சொல்வது பொய் நான் நம்பமாட்டேன் என்று சொன்னார்.அது தான் என்னை மிகவும் நெகிழவைத்த சம்பவம். அதற்கு பிறகு பாடகி ஜானகி அம்மாவின் தொலைபேசி எண் வாங்கி அவரிடம் எனக்காக சின்னத்தாயவள் பாடலை பாட சொல்லி கேட்டபோது சிறிதும் தயங்காமல் அவர் உடனே எனக்காக அந்த பாடலை பாடினார், அதுவும் என்னால் மறக்கவே முடியாது.

பாராட்டுகள்…
நான் ஒரு மூன்று வருடங்கள் “வணக்கம் திருச்சி” ஷோ வழங்கிட்டு இருந்தேன். அப்போ நிறைய சமூக பிரச்சனைகளை என்னுடைய ஷோவில் பேசினேன். அதன் விளைவாக கருமண்டபம் பகுதியில் சாலை அமைத்தார்கள், ரங்கத்தில் ரேசன் கார்டு வாங்கித்தர லஞ்சம் வாங்கிய தாசில்தாரை பற்றிய செய்தியை தைரியமாக என்னுடைய ஷோவில் தெரிவித்தேன். இதனால் எனக்கு நிறைய அதிகாரிகளிடமிருந்தும் பாராட்டுக்கள் வந்திருக்கிறது.

மறக்க முடியாத நேர்காணல் அனுபவம் பற்றி…
வேட்டைக்காரன் பட ரிலிஸான நேரத்தில் நடிகர் விஜய் முதன்முதலாக திருச்சி சூரியன் FMக்கு நேர்காணலுக்கு வந்திருந்தார், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அவருடன் ஒரு ஜாலியான நேர்காணல். பிறகு முனைவர் ஞானசம்மந்தம் அய்யா, பீ.ஜே.பியை சேர்ந்த தமிழிசை செளந்தராஜன், காங்கிரசை சேர்ந்த விஜயதாரணி நேர்காணல்கள் மறக்கமுடியாதவை.

ஆர்.ஜே.க்கள் எப்படி இருக்க வேண்டும்? அதற்கான தகுதியாக தாங்கள் நினைப்பது?
இப்போது உள்ள இளைஞர்களிடம் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் போல எல்லாமே உடனே கிடைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. நிறைய உழைப்பும், கற்றுக்கொள்வதன் மூலமாகத்தான் உயர முடியும், எல்லாரையும் போல யோசிக்காமல் மாத்தி யோசித்து புது புது விஷயங்களை செய்ய வேண்டும். ஒரு ஆர்.ஜேவுக்கான தகுதிகள் நல்ல குரல்வளம், உச்சரிப்பு, தற்போதய நிகழ்வுகள் பற்றிய அறிவு, நகைச்சுவையான பேச்சு, காலந்தவறாமை இவைகள்தான்.

எதை நோக்கியது உங்களது பயணம்?
நான் இப்போது பல இடங்களில் தன்னம்பிக்கைக்கான உரைகள் அளித்து வருகிறேன்.என்னை பொருத்தவரை கல்வியும், உணவும் ஒரு மனிதனின் அத்தியாவசியமானது. இது கிடைக்காமல் கஷ்டபடுகின்ற மாணவர்களுக்கு நான் ஏதோ ஒரு வகையில் உதவியாக இருக்கவேண்டும் என்பது தான்.

-சுபா ராஜேந்திரன்

Leave A Reply

Your email address will not be published.