ஜோயல் எனும் இறைவாக்கினன்

0
Business trichy

கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு அது. ‘ஐ ஸ்பெஷலிஸ்ட்’ ஆக இருக்கும் ஒரு தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறக்கிறது. அந்தக் குழந்தை ஒரு இயல்பான குழந்தையைப் போல் இல்லாமல் சிறப்புக் குழந்தையாக (Special Child) இருக்கிறது. முதல் குழந்தையே இப்படி ஆகிவிட்டதே என்ற வருத்தத்தில் கண்ணீர் வடிக்கின்றனர் அந்த தம்பதியினர். ஆனால், இன்றைக்கு அந்த குழந்தை ‘போஸி’ (BOCCE) எனப்படும் விளையாட்டில் கோல்டு, வெள்ளி என பல மெடல்களை வாங்கிக் குவித்து அவனது பெற்றோரை ஆனந்தக் கண்ணீர் விட வைத்திருக்கிறான்.

அந்த சிறப்புக் குழந்தையின் பெயர் ‘ஜோயல் சிபு வர்கி’…
இந்த சிறப்புக் குழந்தையை சூப்பர் குழந்தையாக உருவாக்கிய பெருமை ஜோயலின் அப்பா ‘சிபு வர்கி’ மற்றும் ஜோயலின் அம்மா ‘வினிதா ரேச்சல் ஃபிலிப்’ ஆகிய இருவரை மட்டுமே சேரும். ‘சிபு வர்கி’ திருச்சி வாசன் ஐ கேர் மருத்துவமனையில் சீஃப் சர்ஜனாக இருக்கிறார். ‘வினிதா ரேச்சல் ஃபிலிப்’ காவேரி மருத்துவமனையில் கன்சல்டன்ட் ஆக இருக்கிறார். பெற்றோர்கள் இருவரும் மெடிக்கல் ஃபீல்டில் இருப்பதால் ஜோயலை ஒரு சேலஞ்சாக எடுத்து வளர்த்திருக்கின்றனர். பெற்றோர் நினைத்ததை விட ஜோயல் பத்து மடங்கு தன்னுடைய திறமையால் இன்றைக்கு ஒரு செலிபிரிட்டியாக உருவாகியிருக்கிறார். ஜோயலின் வெற்றியைக் கண்டு அவரது சகோதரர்களான பெஞ்சமின் ஃபிலிப் வர்கி மற்றும் திமோதி செரியன் வர்கி ஆகியோரும் செம ஹேப்பி…

ஜோயல் மற்றும் அவரது குடும்பத்தினரை திருச்சி கிராப்பட்டியில் உள்ள அவர்களது இல்லத்தில் பனி ஒழுகிய ஒரு மாலைப் பொழுதில் சந்தித்தோம். கேரள ரசனையுடன் இழைக்கப்பட்டிருந்த அந்த வீட்டின் வரவேற்பரையில் ஜோயல் வாங்கிய மெடல்கள் மற்றும் கோப்பைகள் மேஜையில் நிரம்பி வழிந்திருந்தன. நாம் வீட்டிற்குள் நுழைந்த அடுத்த நிமிடமே ஜோயலின் குடும்பத்தினர் அனைவரும் ஹாலில் ஆஜர் ஆகினர்.

loan point

ஜோயலின் அம்மா ‘வினிதா ரேச்சல் ஃபிலிப்’ முதலில் பேச்சை ஆரம்பித்தார். “ஜோயல் பிறந்த உடனேயே அவன் ஒரு சாதாரணமான குழந்தை மாதிரி இல்லை. அவன் ஒரு ஸ்பெஷல் சைல்டுன்னு எங்களுக்கு தெரியவந்தது. கம்ப்ளீட் பாடி செக்கப் செஞ்சி அவனுக்கு உடம்புல வேற எந்த பிரச்சினையும் இல்லைன்னு கன்பர்ம் பண்ணுனோம். பொதுவாக ஸ்பெஷல் சைல்டுகளுக்கு ஹார்ட், கிட்னி, லிவர், கை, கால் போன்றவற்றில் பிரச்சினை இருக்கும். ஆனா, ஜோயலுக்கு அதுமாதிரியான எந்தப் பிரச்சினையும் இல்லை. அவனுக்கு முறையான ட்ரீட்மென்ட் கொடுத்தா அவனோட திறமைகளை வெளிய கொண்டுவர முடியும்னு நாங்க நம்பினோம்.

nammalvar

அந்த சமயத்துல திருச்சி ஹோலிகிராஸ் காலேஜ்க்குள்ள ஸ்பெஷல் சைல்டுகளுக்கான ‘பிளாஸம்’ன்னு ஒரு ஸ்கூல் இருந்துச்சி. 4 வயசுல ஜோயலை அந்த ஸ்கூல்ல சேர்த்துவிட்டோம். அங்க அவனுக்கு பிஸியோதெரபி, ஸ்பீச்தெரபி, சோஷியலாக எப்படி அடுத்தவர்களுடன் இன்ட்ராக்ட் செய்வது போன்ற தெரப்பிகளை கொடுத்தார்கள். அந்த ஸ்கூல்ல இருந்த பிரவீனா கார்மல் என்ற டீச்சரை ஜோயலுக்கு ரொம்ப புடிக்கும். அவங்க தான் ஜோயலின் திறமையை ஊக்குவித்து உற்சாகப்படுத்துனாங்க. அந்த டீச்சர் ‘பிளாஸம்’ ஸ்கூல்ல இருந்து வெளியவந்து ‘டால்ஃபின்’ன்னு சொந்தமாக ஒரு ஸ்பெஷல் ஸ்கூல் ஆரம்பிச்சாங்க. நான் அந்த டீச்சர் ஸ்கூலுக்கு தான் போவேன்னு ஜோயல் சொல்ல, ‘டாலிபிஃன்’ ஸ்கூலோட முதல் ஸ்டூடண்ட் ஆக ஜோயலை சேர்த்துவிட்டோம்.

பிரவீனா கார்மல் மேடம் தான் ஜோயலோட உடல் திறனுக்கு தகுந்த மாதிரி ‘போஸி’ங்கிற ஒரு இத்தாலியன் பால் விளையாட்டுல அவனை ஈடுபடுத்துனாங்க. ‘போஸி’ங்கிற இந்த விளையாட்டு திருச்சியில கிடையாது. சென்னையில இருந்து ஸ்பெஷலாக ஒரு கோச் ஏற்பாடு செஞ்சு ட்ரெய்னிங் கொடுத்தாங்க. அதுமட்டுமில்லாம சென்னை, ராஞ்சி, லக்னோ, ஹைதராபாத் என நிறைய கோச்சிங் கேம்ப்களுக்கு அனுப்பி அவனோட திறமையை வளர்த்தாங்க.

ஸ்கூல் லெவலில் ஆரம்பித்து ஸ்டேட் லெவல், நேஷனல் லெவல், இன்டர்நேஷனல் லெவலில் பல மெடல்களை ஜோயல் வாங்கியிருக்கிறான். 2009-ல் பாட்னாவில் நடைபெற்ற நேஷனல் லெவல் போட்டியில் சில்வர் மெடல், 2013-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் ஏசியா பசிபிக் கேம்ஸில் 4-வது மற்றும் 6-வது இடம், 2014-ல் திருச்சி நேஷனல் கல்லூரியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பிஷன் சிங் பேடி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கியமைக்கான விருது, 2016 அக்டோபரில் இந்தோனேஷியா ஜகார்த்தாவில் நடைபெற்ற ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸில் கோல்டு மற்றும் சில்வர், சமீபத்தில் பீகாரில் நடைபெற்ற 8-வது ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் நேஷனல் போட்டியில் கோல்டு மெடல் என ஜோயல் வாங்கிக் குவித்த மெடல்கள் ஏராளம். ஒரு ஸ்பெஷல் குழந்தையால் இது தான் செய்ய முடியும் என்பதை உடைத்து பல சாதனைகளை ஜோயல் செய்திருக்கிறான். இன்னும் அவன் பல மெடல்கள் வாங்குவான். அதற்காக என்றைக்கும் நாங்கள் அவனுக்கு உறுதுணையாக இருப்போம்”என நெகிழ்ச்சியடைந்தார்.

web designer

ஜோயலின் அப்பா சிபு வர்கியோ, “எங்களுக்கு முதல் குழந்தையாக ஜோயல் பிறந்தான். நாங்க ரெண்டு பேரும் மெடிக்கல் ஃபீல்டுல இருந்ததால இதை எமோஷனலாக பார்க்கலை. சேலஞ்சிங்காக எடுத்துக்கிட்டோம். ஆரம்பத்துல ஒரு மாசம் கொஞ்சம் எமோஷனலாக இருந்தது. அந்த எமோஷனும் கூட சுற்றியிருந்தவங்களால தான் வந்துச்சி. ஒருசில ரிலேட்டிவ்ஸ் அவனை ஃபங்ஷனுக்கு கூட்டிட்டு வரக்கூடாது. நீங்க வேணுமுன்னா வாங்கன்னு சொல்லியிருக்காங்க. அவனை பார்த்தா ஒரு பேட் லக் மாதிரி எல்லாரும் நினைப்பாங்க அவனை பின்னாடி கொண்டு போ, ஏன் முன்னாடி கொண்டு வர்றன்னு சொல்லியிருக்காங்க.

இந்த மாதிரி ஒரு ஸ்பெஷல் சைல்டு பிறந்தா, குழந்தை பிறந்த அடுத்த நாளே தெரபி ஸ்டார்ட் பண்ணனும். பொதுவாக ஒரு பெற்றோர்களுக்கு ஸ்பெஷல் சைல்டு இருந்தால் அவர்கள் அந்தக் குழந்தையின் திறமையை கண்டு வெளிக்கொண்டு வராமல் வீட்டிலேயே முடக்கிவிடுகின்றனர். ஒரு ஸ்பெஷல் சைல்டை கேரளா சொஸைட்டி ஏத்துக்கிறதோட, தமிழ்நாடு சொஸைட்டி 10 மடங்கு ஏத்துக்குறாங்க. நாங்க கேரளா போகாம இங்கயே செட்டில் ஆனதுக்கு அதுவும் ஒரு காரணம். அவன் பிறந்து ஒரு மாசம் வரைக்கும் ரொம்ப கஷ்டமாகத் தான் இருந்துச்சி. எதாவது ஃகேம்ல அவன் ஜெயிச்சிட்டா அவனோட தாத்தா, பாட்டி, சித்தப்பா, மாமாவுக்கு போன் பண்ணி ‘நான் வின் பண்ணிட்டேன்’னு அவனே சொல்லுவான். அவனால சரியா பேச முடியாது. ஆனா, அவன் என்ன பேசுறான், என்ன சொல்ல வர்றான்னு வழக்கமா கேக்குற ஆளுங்களுக்கு புரியும்.

மேடம் பிரவீனா கார்மல், ஸ்பெஷல் ஒலிபிக்ஸ் பாரத் ஸ்டேட் கோ-ஆர்டினேட்டர் பால் தேவ சகாயம், கோச் ஆறுமுகம் ஆகியோருக்கும் ஜோயலின் வெற்றியில் முக்கியப் பங்கு இருக்கு. இப்போ நாங்க அவனுக்கு ஃபுல் சப்போர்ட்டாக இருக்கோம். எங்களுக்கு வயசாகி முடியாத சூழ்நிலையில அவன் எப்படி சர்வைவல் பண்ணுவான், அவனுக்கு யார் சப்போர்ட் ஆக இருப்பாங்கன்னு நினைச்சா தான் கொஞ்ச வருத்தமாக இருக்கு.

கூடப் பிறந்த தம்பிங்ககிட்ட, ‘எங்களுக்கு அப்புறம் நீங்க ரெண்டு பேரும் தான் அவனை பார்த்துக்கணும்’னு சொல்லி வளர்த்துக்கிட்டு வர்றோம். ஜோயல் ஸ்போர்ட்ஸ் மட்டுமில்லாம, பாரதிதாசன் யுனிவர்சிட்டி ஸ்பெஷல் சில்ரன்ஸ்க்காக டிப்ளமோ கோர்ஸ் கொடுக்குறாங்க. அதுல ஜோயல் கம்ப்யூட்டர் எஜூகேஷன்ல டிப்ளமோ முடிச்சிருக்கான். அதுமட்டுமில்லாம அவங்க அம்மாவோட கிளினிங்ல ஹெல்ப் செஞ்சிக்கிட்டு , ஆப்டிக்கல் ஷாப்பையும் பாத்துக்குறான். வருங்காலத்துல யாரோட உதவியும் இல்லாம சுயமா இருக்கவும் ஜோயலால முடியும். அதுக்கான திறமைகளை அவன் வளர்த்துக்கிட்டு இருக்கான்.

நாங்க நினைச்சதோட இன்னைக்கு ஜோயல் 10 மடங்கு மேல போய் ஒரு செலிபிரிட்டி ஆகிட்டான். இதைப்போலவே ஸ்பெஷல் சைல்ட் வச்சிருக்க பெற்றோர்கள் அந்த குழந்தைக்கு இருக்கிற திறமையை கண்டுபிடிச்சி அதை ஃபோகஸ் பண்ணுணா அந்தக் குழந்தையால நிச்சயமாக சாதிக்க முடியும்” என பாஸிட்டிவ் நோட்டோடு முடித்தார்.

சிறப்புக் குழந்தையையும் சூப்பர் குழந்தையாக்க முடியும் என்பதற்கு சிபு வர்கி – வினிதா ரேச்சல் ஃபிலிப் ஒரு சான்று என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஜோயலைப் போன்ற மகனைப் பெற்றதற்கு பெற்றோராகிய நீங்களும், உங்களைப் போன்ற பெற்றோர் கிடைக்க ஜோயலும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

இன்னும் பல உயரங்களைத் தொட ‘ஜோயல் ஃபிலிப் வர்கி’யை
‘ntrichy.com’ வார இதழ் வாழ்த்துகிறது…

IAS academy

Leave A Reply

Your email address will not be published.