நான் வாங்கிய பதக்கத்தை காட்டி பயிற்சி அளிக்கிறேன்

0
1

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் ஆக்கிரமித்த விளையாட்டுகளில் டேக்வான்டோ என்ற விளையாட்டும் ஒன்று, இது அடிப்படையாகக் கராத்தே மற்றும் குங்பூ போன்ற தற்காப்பு விளையாட்டுகளில் இருந்து பிரிந்தது தான் டேக்வான்டோ.

முதன்முதலாகக் கொரிய நாட்டைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஹாங் ஹி சோய் என்பவர் இந்தக் கலையை உருவாக்கினார். கொரியாவில் இதற்கு பெயர் சுபக் என்று அழைக்கின்றனர். தற்போது அந்த தற்காப்பு கலைக்குப் பெயர் டேக்வான்டோவாக மாறி உள்ளது.

வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்த விளையாட்டை வெளிநாட்டவர்களைவிடச் சிறப்பாக தமிழக மாணவர்கள் கற்று தேர்ந்துள்ளனர் என்றே கூறலாம். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறப்பு விளையாட்டுகளுக்கான விடுதியைத் துவங்கி வைத்தார். அதில் டேக்வான்டோவும் இடம்பெற்றுள்ளது.

இந்த விளையாட்டில் கடந்த 10 வருடங்களாகத் தொடர்ந்து தங்கபதக்கம் பெற்றுவரும் பரணி என்ற பெண் பயிற்சியாளரை நம்ம திருச்சி இதழ் சார்பாக சந்தித்தோம்.

அவர் நம்மிடம்… டேக்வான்டோ தற்காப்பு கலையை வளர்க்க வேண்டும் என்பதற்காகவும், இந்த விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கு என்று தமிழக அரசின் சார்பில் திருச்சி, கிருஷ்ணகிரி, கடலூர், பெரம்பலூர், விடுதிகள் திறக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது 250 மாணவர்கள் தங்கி படிப்பதோடு, இந்தக் கலையையும் பயின்று வருகின்றனர்.

அதேபோன்று வெளியில் இருந்து வரும் மற்ற மாணவர்களுக்கும் இலவசமாகக் கற்று கொடுக்கிறேன். மேலும் என்னிடம் விடுதியில் தங்கி பயிற்சி பெறும் மாணவர்கள் 15 பேர் உள்ளனர். அதில் சிறப்பாக விளையாடக் கூடிய மாணவர்கள் என்றால் ஐய்யனார், ரஞ்சித், ஆனந்த், கமலக்கண்ணன் உள்ளிட்ட இந்த மாணவர்கள் அனைவரையும் சர்வதேச அளவில் தங்கம் வாங்க வைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய இலக்கு என்று தெரிவித்தார்.

2

நான் எப்போதுமே மற்றவர்களை அடையாளமாகக் காண்பிக்க மாட்டேன். நான் எல்லாப் போட்டிகளிலும் வெற்றி பெற்று வாங்கும் தங்க பதக்கத்தைக் காட்டி தான் என்னுடைய மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பேன்.
இந்தப் போட்டியில் உடலும், மனசும் சீராக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே விளையாட முடியும், பொதுவாகவே ஒவ்வொரு மாணவர்களுக்கும் எந்த விளையாட்டு விளையாட முடியும் என்பதை நாங்கள் தெரிந்து வைத்து கொண்டு அதற்கு ஏற்ப அந்த விளையாட்டில் மாணவர்களை இணைத்து பயிற்சி அளிப்பது தான் எங்களுடைய வேலை என்று கூறுகிறார்.
எந்தப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்றாலும் 10 ஆயிரமும் அதற்கு மேலும் செலவாகும். ஆனால் எங்களுக்குப் பயண செலவு அதிகபட்சமாக வைத்தாலும் ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும். ஒரு போட்டிக்கு சென்றுவிட்டு வருவோம்.

இந்த விளையாட்டின் மீதான ஆர்வம் மாணவர்களுக்கு எப்போதுமே உண்டு. இந்த விளையாட்டைப் பொறுத்தவரை யாரையும் காயப்படுத்துதல், கோபம் என்று எதுவும் கிடையாது தன்னை தானே பாதுகாத்துக் கொள்வதன் அடிப்படை தான் இந்த விளையாட்டு.

எனவே தான் இந்த விளையாட்டை உலக நாடுகளின் ஒப்புதலுடன் 2000த்தில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் முதன்முதலாக இந்த விளையாட்டு இடம்பெற்றது. கால் மற்றும் கையை மட்டுமே கொண்டு தாக்கும் எதிர் போட்டியாளரை 3 நிமிடங்களுக்குள் எத்தனை முறை மார்பிலும், தலையிலும் உதைக்கிறார்களோ அத்தனை புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிப்பார்கள். எல்லா பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படும் என்று கூறுகிறார்.

அவரிடம் பயிற்சி பெறும் மாணவர் ஐய்யனாரிடம் பேசுகையில்… எனக்குச் சொந்த ஊரு விழுப்புரம் பக்கத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை தான். அப்பா கட்டிட கூலி தொழிலாளி. எங்க வீட்ல போதிய வசதி இல்லாததால் நான் அரசுப் பள்ளியில் தான் படித்து வந்தேன். எனக்கு டேக்வான்டோ மீது ஆர்வம் இருந்தது. என்னுடைய நேரத்தை மிச்சப்படுத்தி டேக்வான்டோ கற்று கொண்டேன் அதன்பின் நான் இங்கு விடுதியில் வந்து தங்கி பயிற்சி மற்றும் கல்வி கற்று வருகிறேன். தற்போது காஜாமியான் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறேன்.

என்னுடைய முதல் போட்டி தமிழகத்தில் உள்ள டெக்வான்டோ விடுதி அளவிலான போட்டியில் கலந்து கொண்டேன். முதன்முதலாக வெள்ளிப்பதக்கத்தை வென்றேன். அடுத்ததாக மண்டல அளவிலான போட்டியில் தங்கம், அதனைத் தொடர்ந்து தமிழக அரசு நடத்தும் மிக உயர்ந்த விளையாட்டு போட்டிகளான குடியரசு தினவிழா போட்டியிலும், பாரதியார் விளையாட்டு போட்டிகளிலும் கலந்து கொண்டு பதக்கம் வென்றேன். கடந்த வருடம் மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் தங்கம் வென்றேன்.

இந்தாண்டு மாநில அளவிலான போட்டியை தவிர மற்ற எல்லாப் போட்டிகளிலும் பங்கேற்று பதக்கம் வென்றேன். ஆனால் அடுத்த ஆண்டு நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பேன். என்னுடைய முதல் இலக்கு தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பது தான். அடுத்துதடுத்து போட்டிகளுக்கு என்னைத் தயார்படுத்தி கொண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது தான் என்னுடைய நீண்ட நாள் இலக்கு என்று கூறினார்.

-கிறிஸ்

3

Leave A Reply

Your email address will not be published.