தலையாட்டி பொம்மைகள் தந்து கொண்டிருக்கும் தன்னம்பிக்கை…

தொழில் முனைவரான பேராசிரியை

0

இந்தியான்னாலே – வெளிநாட்டினர் விரும்பிபார்ப்பது நம் கோவில்களையும் நம்ம நாட்டு கலாச்சாரத்தையும் தான்.
அப்படிப்பட்ட அசத்தும் கலாச்சாரம் நம் நாட்டு கைவினைப் பொருட்களில் அதுவும் தமிழ்நாட்டு பெண்கள் கைகளில் இருக்குன்னா அது மிகையாகாது. நாம் தலைநிமிர்ந்து பார்க்கிற அயல் நாட்டினரை, நமக்கு தலையாட்ட வைக்கிற புது முயற்சில அசைக்கமுடியாத தன்னம்பிக்கையோட களமிறங்கியிருக்காங்க திருச்சியைச் சேர்ந்த கீதாகுணா (37). தொடர்ந்து அவர்களிடம் பேசினோம்…

பொம்மைகள் செய்ய எப்போது ஆரம்பிச்சீங்க?
எப்படிப்பட்ட வழிமுறைகள் கையாண்டீங்க?
நான் பொம்மைகள் செய்ய ஆரம்பித்து மூன்று வருஷம் ஆச்சி,முதல்ல என் வீட்டிலேயே 12 பெண்கள் சேர்ந்த ஒரு குழுவோட இந்த டான்சிங்டால்கள் செய்ய ஆரம்பிச்சேன். ஆனா இப்போ என்கிட்ட முழுசா 120பேருக்கு இதுல நேர்முகமாகவும்,மறைமுகமாகவும் என்னால் வேலை கொடுக்க முடிகிறது. என்கிட்ட வேலைப்பார்க்கிற எல்லோருமே பெண்கள் தான். அதுவே எங்கள் கூடுதல் சிறப்பு.

எப்படிப்பட்ட பொம்மைகள் தயாரிக்கிறீர்கள்?
டான்சிங் டால்கள்,தலையாட்டி பொம்மைகள், தாத்தா-பாட்டி பொம்மைகள், தஞ்சை தலையாட்டி பொம்மைகள் தயாரிக்கிறோம். இவற்றில் அதிக முக்கியத்துவம் தலையாட்டி பொம்மைகளுக்கே.

‌சந்தா 1

பொம்மைகளுக்கான மூலப்பொருள்கள் எப்படி வாங்குறீங்க? எப்படிப்பட்டதை வாங்குறீங்க?
இதற்கான மூலப்பொருட்கள் பாண்டிச்சேரியில் தரமானதாக கிடைக்குது. இந்த அழகிய டான்சிங் டால்கள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் தயாரிக்க நான்கு வழிமுறைகள கடந்து உருவாக்குறோம். நான்கு நாட்களில் குறைந்தபட்சம் பொம்மைகள் நல்லமுறையில் சிறப்பாக தயாராகிவிடும்.

இப்படி கைகளாலயே முழுக்க முழுக்க செய்யக்கூடிய பொம்மைகளை தயாரிக்க கைப்பக்குவமோ, கைராசியோ தேவையில்லை. 6 மாதம் முழுப்பயிற்சி மட்டும் போதும்.

உங்கள் கணவர், குழந்தைகள் பற்றி…
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். பள்ளி செல்கிறார்கள். என் கணவர் ஒரு யுபிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தில் வேலைபார்க்கிறார். எனது முயற்சிகள் அனைத்துக்கும் என் கணவர் ஆதரவு எப்போதும் உண்டு. அதுவே, என்னை மேலும் மேலும் உயரத் தூண்டுகிறது.

சந்தா 2

பொம்மைகள் தயாரிப்பில் ஈடுபடும் முன்…
திருச்சியில் இருக்கக்கூடிய புகழ்பெற்ற பொறியியல் கல்லூரி பேராசிரியரா பணியாற்றினேன்.


பணியாற்றியபோது கிடைத்த சம்பளத்தின் மகிழ்ச்சியைவிட, இயற்கைக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இயல்பா கிடைக்கக் கூடிய இந்த தொழிலுக்கான வருமானம் என்னை பக்குவப்படுத்துகிறது.

இயற்கையாலும் நம் நாட்டு பொருட்களாலும் கவரப்பட்ட நான் எத்தனை வருஷம் ஆனாலும், வியக்க வைக்கக் கூடிய கிரியேட்டிவிட்டியால் சூழப்பட்ட இந்த பொம்மைகள் உற்பத்தியையே உயர்வாக நினைக்கிறேன். ஆனா, ஆரம்பகாலத்தில இந்த பொம்மைகள் உருவாக்குறத பூர்வீகமா பண்ணுறவங்க, கைவினை பொம்மைகளோட உற்பத்தி நுணுக்கங்களை சொல்லித்தர மறுக்குறாங்க.

“ஏம்மா படிச்ச பொண்ணா இருக்க, இந்த வேலை எதுக்குமா உனக்கு போய் பிழைக்கிற வழியப்பாரும்மான்னு’’ புத்திமதி சொன்னாங்க, ஆனா, ஏன் இந்த டால் விற்பனையோட யுத்திகள தெரிஞ்சுக்க மறுக்குறாங்கன்னு நினைக்கும் போது வருத்தமா இருக்கு.

இன்று ஒரு பொம்மையோட விலை ரூ.200 லிருந்து ரூ.2500 வரை விற்பனையாகிறது. இதனால் எங்கள் மாத வருமானம் லாபம் 5 முதல் 8 லட்சம் வரை உள்ளது. இன்னக்கி நான் 3 கிளைகள் ஆரம்பித்து 2 யூனிட் போட்டு பெண்களுக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தொழில் செய்து வருகிறேன்.

இன்னும் மவுசு அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது.

வெளிநாடுகளில் வாங்குறாங்களா?
வாங்குறாங்களாவா… விரும்பி வாங்குறாங்க. நாங்கள் உருவாக்கக் கூடிய டான்சிங் டால்கள், தாத்தா- பாட்டி பொம்மைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளும் இன்று ஆஸ்திரேலியா, கனடா, மலேசியா, சிங்கப்பூர் மக்களின் வீடுகளில் அழகுப்படுத்தக்கூடிய பொருளாக விளங்குகிறது. டான்சிங் டால்கள், தலையாட்டி பொம்மைகளது வருமானம் வருத்தப்பட வைக்கல, மாறா விற்பனை வியப்படையவே வைக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.