வெளிநாட்டில் பயணிப்பது மகிழ்ச்சி

0
1

“எப்பவும் மதிய உணவு முடிஞ்சதுக்கு பின்னே ஆரம்பிக்கிற போட்டி இரவு உணவு நேரம்வரை நீடிக்கும், அவ்வளவு நேரமும், வித்தியாசமா வியூகத்த அமைக்க யோசிச்சா மட்டும் தான் அட்லீஸ்ட் கேம்ம நம்ம கண்ட்ரோல்லயாவது வச்சிக்க முடியும். எதிர்தரப்புல விளையாடுரவரோட அடுத்தடுத்து மூவ்ஸ் எப்படி இருக்கும்ன்னு அவரோட மனநிலையில் இருந்து கொஞ்சமாவது யோசிச்சுகணும். அதேநேரத்தில, ஆட்டத்தின் போது அவங்கள திணரவைக்கிற மாதிரி நம்ம மூவ்ஸ் இருந்தாதான் கொஞ்சமாவது ரிலாக்ஸா மூச்சேவிட முடியும்… “என்ற அர்த்தமான அதேநேரம் சீரியசான அட்வைஸ்களுடன் ஆரம்பித்தார் செஸ் குயின் ஜெனித்தா ஆண்ட்டோ…

திருச்சி பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த இவர் தன்னை ஒரு மாற்றுத்திறனாளியாக ஒருபோதும் வெளிப்படுத்திக்கொள்ள நினைக்காதவர். இதுவரை மாற்றுத்திறனாளிகள் தனிநபர் செஸ் போட்டியில் ஐந்து முறை தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவர் தற்போது என்ன செய்கிறார், அவரது அடுத்த மூவ் என்ன என்பதை அறிய அவரது வீட்டிற்கு சென்றோம்.நம்மை கண்டவுடன் செஸ் பயிற்சியில் மும்முரமாக இருந்தவர் நம்மிடம் பேச அமர்ந்தார்.

“என் அப்பா பேர் கனிகை இருதயராஜ். முன்பு, ஆசிரியராக பணிபுரிந்தார். இப்போது அவருக்கு வயதாகிட்டதால பகுதி நேரமா மாணவர்களுக்கு பாடம் சொல்லி தர்றாரு. அம்மா ஜெயராணி. எனக்கு ஒரு அக்கா,அண்ணா இருக்காங்க. என்மேல என் வீட்டில எல்லோருமே அதிக அக்கறை செலுத்துவாங்க. அதுலயும் குறிப்பாக, என் அக்கா பொண்ணுங்க என் மேலே ரொம்ப பாசம் வச்சிருக்காங்க.

2

” நான் என்னுடைய முதல் வகுப்புல இருந்து எட்டாம் வகுப்பு வரை இயல்பா பள்ளிக்கு சென்றுதான் படிச்சேன். ஆனால், அதன்பிறகு எட்டாம் வகுப்புல இருந்து பி.காம் வரைக்கும் வீட்டிலிருந்தே படிச்சுக்கிட்டேன். ”

தங்களுடைய முதல் போட்டி அனுபவம்?
1995ல் நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது நடந்த பள்ளிகளுக்கு இடையேயான செஸ் போட்டியிலதான் நான் முதல்முறையா கலந்துக்கிட்டேன், அந்த போட்டியில் ஜெயிச்சு முதல்பரிசும் வாங்கினேன். என் வாழ்க்கையில் இப்போது கிடைக்கிற வெற்றிகளுக்கு அடித்தளமாக இருந்தது அந்த போட்டிதான்.

செஸ் மீதான ஆர்வம் எப்படி, உங்கள் முதல் கோச் ?
நான் நிறைய கோச்கூட வொர்க் பண்ணியிருக்கேன்.ஆனால், என்னுடைய முதல் கோச்சும் எனக்கு ரொம்ப பிடிச்ச கோச்சும் என் அப்பாதான். நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது எனக்கு முதல்முறையா செஸ் விளையாட்டு கத்துக்கொடுத்தாரு.

அப்பாவுக்கு விளையாட்டுதுறை மீதான ஆர்வம் அதிகம்,அதுனால எனக்கு ஏதுவா செஸ் விளையாட்டின் மீதான தனித்துவத்தையும்,
புரிதலையும் அழகா சொல்லி கொடுத்தாரு. அப்பாதான் என்னுடைய முதல் குரு, ஆனால், இப்போலாம் எனக்கு நானே பயிற்சி எடுத்துக்கிறேன். அப்பாவை தொந்தரவு செய்றதில்லை.

உங்களுடைய வெற்றி ரகசியம் சொல்லுங்க?
கேள்வியை கேட்டவுடன் நன்றாக சிரிக்க ஆரம்பித்தார். சிரித்துக் கொண்டே, “அப்படியெல்லாம் எதுவுமில்லைங்க. ஆர்வம்தாங்க எல்லாமே!!!. தினமும் எட்டு மணிநேரம் பயிற்சி,செஸ் தொடர்பான புத்தகங்கள் படிப்பேன். அதனால நிறைய சிந்தனை தோன்றும், புது புது ஆட்ட வியூகம் தோன்றும்.

4

போட்டிகளுக்காக வெளியூர், வெளிநாட்டு பயணங்கள் போக வேண்டியிருக்கும், அங்கு நடக்கும் போட்டிகளுக்கான செலவுகள் எல்லாமே அப்பா தான் பார்த்துப்பார். எல்லாப் போட்டிகளுக்கும் என்கூடவே இருப்பார். எப்பவும் ஆட்ட நுணுக்கங்களை சொல்லித்தருவார்.என்னுடைய வெற்றி இரகசியமும் ஆர்வமும் என் அப்பாவும்தான்.

நம்நாட்டில் நடக்கும் போட்டிகளுக்கும் வெளிநாட்டில் நடக்கும் போட்டிகளுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கா?
நிறையவே இருக்குங்க. வெளிநாட்டுட்டில் கொஞ்சம் சுமுகமாக என்னால பயணிக்க முடியும். அங்க யாருமே என்னைன்னு மட்டும் இல்லை யாரையும் மாற்றுத்திறனாளி என்ற பார்வைல பார்க்கமாட்டாங்க.ஆனால், இங்கே நம்மளை பார்க்கற பார்வையே வித்தியாசமாக இருக்கும். அதுனால, எனக்கு வெளிநாட்டு பயணங்கள் போட்டிகள் மீதான ஆர்வம் அதிகம் என மலர்ந்த முகத்துடன் புன்னகைத்தார் செஸ் குயின்.

நீங்கள் மிகவும் ரசித்த போட்டி அனுபவம்?
எதை சொல்றதுனே தெரியலை என்றவர். உடனே, சொல்றேன் கேளுங்க. இந்த வருடம் 2017 ஆம் ஆண்டுக்கான 17ஆவது மாற்றுத்திறனாளிகள் தனிநபர் செஸ் போட்டி ஸ்லோவாகியா நாட்டில் நடைபெற்றுது. அதில் பங்கேற்று வெற்றிப்பெற்றது ஆனந்தமான அழகிய தருணம் … எட்டாவது ரவுண்டில் நான் எதிர்த்து ஆடிய நபர் ஏற்கனவே ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர். ஏற்கனவே, அவர்கூடவே நிறைய போட்டிகளில் விளையாடியிருக்கேன்.

அப்படி விளையாடுறப்போலாம் ஒண்ணு டிரா பண்ணுவேன்,இல்லை தோற்றுவிடுவேன். ஆனால், இந்த முறை அவரை வென்றபோது, அவரும் அதற்கு முன்போட்டிகளில் என்னுடன் விளையாடி தோற்ற போட்டியாளர்களும் என் வெற்றியைப் பார்த்து என்னை கட்டித்தழுவி பாராட்டியது என் வாழ்வில் மறக்க முடியாதது.நான் ஜெயித்தபோது நம் நாட்டு தேசிய கீதம் இசைத்தாங்க என் வெற்றியை உணரவைத்த தருணமும் அதுதான் . 2013 லிருந்து 2017 வரை தொடர்ந்து சாம்பியன் ஆனதும் மறக்க முடியாத ஒரு அனுபவம்தான்.

விஸ்வநாதன் ஆனந்த் அவர்களை சந்தித்த
அனுபவங்கள் எப்படி இருந்தது?
என் ரோல்மாடல் பாபி பிஷரும், விஸ்வநாதன் ஆனந்த் இவங்க ரெண்டு பேரும்தான். அவங்க வீட்டுக்கு போய்கூட சார பார்த்தேன். விஸ்வநாதன் சார் திருச்சிக்கு சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்தார்,
அப்போது பேசிட்டு இருக்கும்போது
” நான் மட்டும் பைவ் டைம் வேல்டு சாம்பியன் கிடையாது.இங்க ஜெனிதாவும் இருக்காங்க” என்று சார் சொல்லும்போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

புதுசா செஸ் விளையாட வருபவர்களுக்கு ஜெனித்தாவின் அட்வைஸ் என்ன?
புதுசா செஸ் விளையாட வர்ற நிறைய பேர் உடனே ஜெயிக்கணும்னு நினைக்கிறாங்க. செஸ் வந்து முதல் நாள் பரீட்சைக்கு படிச்சிட்டு போய் எழுதிடுற மாதிரி ஒரே நாளில் கற்க முடியாது. நிறைய கத்துக்கனும், ஞாபகம் வச்சிக்கணும், அதுமட்டுமல்லாமல் நிறைய அனுபவங்களும் தேவைப்படும்,செஸ் விளையாட்டு மூளைக்கு நல்ல பயிற்சி, சுயமாக சிந்தித்து எதிர் வரும் விளைவுகளை வியூகம் கொண்டு வெற்றிபெற தூண்டும்.

தங்களின் எதிர்கால செக் என்ன?
என்னை திருச்சி மாவட்ட “தூய்மை இந்தியா ” திட்டத்துக்கு தூதுவராக பணியாற்றிருக்காங்க. அந்த திட்டத்துக்கு என்னால் இயன்ற பங்களிப்பை செய்ய ஆசைப்படுறேன். அதற்கடுத்து நான் ‘கிராண்ட்மாஸ்டர்’ ஆகணும்ங்கறதுதான் என்னுடைய மிகப்பெரிய இலட்சியமே. அதைநோக்கிதான் இப்போ பயணிச்சிட்டு இருக்கேன்.2018ம் இந்த ஆண்டுக்கான ‘கிராண்ட்மாஸ்டர்’ க்கு போகலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். அதுக்கு அரசாங்கம் உதவி பண்ணா நிச்சயம் நல்லா இருக்கும்.

உங்களின் பொழுதுபோக்கு என்ன?
நான் எப்போதாவது படங்கள் பார்ப்பேன். குறிப்பாக, பயோபிக் ஜானர்தான் நான் விரும்பி பார்ப்பேன்.அந்த மாதிரி படங்கள் பார்க்கும்போது அதில் இருந்து ஏதாவது கத்துக்கலாம். இதுதாங்க என்னுடைய பொழுதுபோக்கு என்றவர் மீண்டும் செஸ் விளையாட தயாராகும் முன் இந்த ஆண்டின்2018 கிராண்ட்மாஸ்டர் ஆக வாழ்த்துக்களை கூறி செஸ் குயினிடம் இருந்து விடைப்பெற்றோம்.

3

Leave A Reply

Your email address will not be published.