
உலக வரலாற்றுக்களை அறிந்து கொள்வதில் பலருக்கும் ஆர்வம் அதிகம் என்றே கூறலாம். அதிலும் நம்முடைய ஊரைப்பற்றியும், மாநிலத்தைப் பற்றியும், நாட்டைப் பற்றியுமான தேடுதல்கள் இன்றும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அந்தந்த மாநிலங்களின் வரலாறுக்களை இன்றும் அருங்காட்சியகங்கள் மூலம் எடுத்துக் கூறுவதில் அரசும் முனைப்பு காட்டி வருகிறது. அருங்காட்சியகங்கள், பழமையான நூலகங்கள், தொல்பொருள் ஆராய்ச்சிகள் என்று ஒரு குழு, தினம் தினம் புதிய வரலாற்றை நோக்கிய பயணித்தில் ஈடுபட்டு வருகிறது.
அப்படிப்பட்ட தேடுதலில் நமக்குத் தெரிந்த நம்ம ஊர் அருங்காட்சியகத்தைப் பற்றிய சில பதிவுகளை கூறுவதில் பெருமையடைகிறோம். வெறும் காகிதங்களில் மட்டும் இந்த வரலாற்றைப் பதிவிடாமல் நமது திருச்சி வாசகர்களின் மனதிலும் இது ஒரு அடையாளமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்தக் கட்டுரை.
ஒவ்வொரு மாநிலத்திலும், மாவட்டத்திலும் உள்ள அரியவகையான நிகழ்வுகளையும், மாகாணங்களை ஆண்ட அரசர்கள், குறுநில மன்னர்கள், அவர்களின் கட்டிடக்கலை, ஓவியம், போர்த் திறன், கலை வளர்ச்சி, என்று அனைத்தையும் அடுத்த தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக அவற்றைச் சேமித்து வைக்கும் பணியை கடந்த 150 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாடு, கர்நாடக, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒருங்கிணைந்த மாகாணத்தின் தலைநகரான சென்னையில் அறுவைப் பண்டுகா் பால்போர் என்பவரால் ஒரு அருங்காட்சியகம் துவங்கப்பட்டது.

அதன்பின் தான் மாநிலங்கள்தோறும், மாவட்டங்கள்தோறும் அந்தந்த பகுதிகளில் உள்ள வரலாற்றுப் பொருட்களையும், கட்டிடங்களையும், நினைவுச் சின்னங்களையும், பாதுகாக்கும் பணியில் அந்தந்த மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. அதேபோன்று தான் நம்முடைய திருச்சிக்கும் பல சிறப்பு அம்சங்கள் உண்டு. திருச்சியை ஆண்ட பல குறுநில மன்னர்கள், பேரரசுகள், தங்களுக்கான அடையாளத்தை விட்டுச் சென்றிருக்கின்றனர்.
அவை இன்றும் திருச்சியின் பெருமைகளைப் பறைசாற்றி வருகிறது என்றே கூறலாம். அதில் முக்கியமாக நம்முடைய வரலாறு அடங்கியிருப்பது திருச்சியில் உள்ள ராணி மங்கம்மாள் கொலு மண்டபத்தில் தான். இந்தக் கட்டிடமே ஒரு வரலாறு தான் அதிலும் தற்போது பல வரலாறுகளைத் தாங்கி அரசு அருங்காட்சியகம் இயங்கி வருகிறது.
இந்த அருங்காட்சியகம் கடந்த 1983ஆம் ஆண்டு முதல் 1998 வரை கண்டோன்மென்ட் பகுதியில் ஒரு வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து போதிய இடவசதி இல்லாததால் மலைக்கோட்டை பகுதியில் உள்ள ராணி மங்கம்மாள் கொலு மண்டபத்தில் அருங்காட்சியகம் மாற்றப்பட்டு இன்றுவரை அங்குச் செயல்பட்டு வருகிறது.

இந்த மண்டபத்திற்கு என்று ஒரு வரலாறு உண்டு அது…
1659ல் மதுரை நாயக்க மன்னராகச் சொக்கநாத நாயக்கர் பொறுப்பேற்ற காலத்தில் திருச்சி கோட்டையை கைப்பற்றப் படையெடுத்து வந்த முகமதியர் படைகளையும், பிஜப்பூர் சுல்தான் படைகளையும் எதிர்த்துப் போராட வேண்டி இருந்த நிலையில் திருச்சி முழுவதும் வறட்சியும், கடும் பஞ்சமும், நிலவியது. எனவே இருபிரச்சனைகளையும் சமாளிக்க தன்னுடைய தலைநகரை 1665ல் திருச்சிக்கு மாற்றினார்.
திருச்சி தலைநகரம் இயங்குவதற்கு ஏற்றவாறு அரண்மனையும், கொலு மண்டபத்தையும் சொக்கநாத நாயக்கர் திருச்சியில் கட்டினார். கட்டிடத்தை கட்டுதவற்கு நிதி தேவைப்பட்டதால் மக்களிடம் வரி சுமத்த கூடாது என்று முடிவு செய்தவர் மதுரை திருமலை நாயக்கர் மகாலில் இருந்து பல கட்டிட தளவாடங்களையும் அறைகலன்களையும் உடைத்து பெயா்தெடுத்து கொண்டுவந்து திருச்சியில் கட்டிடங்களை அமைத்தார்.
8880 சதுர அடி கொண்ட இந்தக் கட்டிடம் சங்ககால சோழர் முதல் பல்வேறு அரசு மரபுகள் அரண்மனையாகவும், கொலுமண்டபமாகவும் அமைத்து ஆட்சி புரிந்துள்ளனர். 1659 முதல் 1679 வரை சொக்கநாத நாயக்கர், 1679 முதல் 1680 வரை ருஸ்தம்கான், 1680 முதல் 1682 சொக்கநாத நாயக்கர், 1682 முதல் 1689 முத்து வீரப்ப நாயக்கர், 1689 முதல் 1706 இராணி மங்கம்மாள், 1706 முதல் 1732 விஜயரங்க சொக்கநாதர், 1732 முதல் 1736 இராணி மீனாட்சி, 1736 முதல் 1741 சந்தா சாகிபு, 1741 முதல் 1743 முராரி ராவ், 1743 முதல் 1801 முகம்மது அலியும், 1801 முதல் 1946 வரை ஆங்கிலேயர்கள் என்று பல மன்னர்களைக் கண்ட இத்தகைய பெருமை உடைய அரண்மனை இன்று பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து பொலிவிழந்து பழமையான கட்டடக்கலை அமைப்பு முறைகளுடன் திகழும் இக்கட்டிடத்தை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வண்ணம் அருங்காட்சியக துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. 1990 வரை நகா்மன்ற அறக்கட்டளையினரால் போதிய பராமரிப்பின்றி பயன்படுத்தப்பட்டு வந்தது.
தற்போது இந்த அருங்காட்சியகத்தில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஆயுதங்கள், பீரங்கி குண்டுகள், ஓவியங்கள், ஓலைச்சுவடிகள், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்சிலைகள், உலோக சிலைகள் முதுமக்கள் தாழி, இலட்சக்கணக்கான பழமையான கல்லாயுதங்கள், கோடிக் கணக்கான ஆண்டுகள் பழமையான உருகாப்பி வகைகள், காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல் புவியியல், விலங்கியல், தாவரவியல் மற்றும் மக்கள் மரபு இயல் காட்சி பொருட்களையும், மரச்சிற்பங்களையம், கலைபொருட்களையும், நாணயங்களையும், அஞ்சல் தலைகளையும், வளா்கலை ஓவியங்களையும் காணலாம்.
இந்த அருங்காட்சியகத்தில் தங்கம், வெள்ளியினால் ஆன எந்தச் சிற்பங்களும், பொருட்களும் இடம்பெறவில்லை. அதற்கான பாதுகாப்பு அம்சங்கள் இங்கு இல்லாததால் அவை அனைத்தும் கடந்த 2010ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரசவை மன்றமாகச் செயல்படும் பொருட்டுக் கட்டப்பட்ட கொலு மண்டபம் பொலிவில்லாமல் உள்ள நிலையில், பலருக்கு இப்படி ஒரு அருங்காட்சியகம் இருப்பதே தெரியவில்லை. பொதுமக்களின் வரத்துக் குறைவாக இருப்பதால் பராமரிப்பு என்பதும் சற்று கேள்விக்குறியாகத் தான் உள்ளது.
ஆனால் தற்போது போதிய அளவில் பராமரிப்பு இருந்தாலும், அவற்றை மேலும் தரம் உயர்த்த வேண்டும் என்றும், பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் அளவிற்கு மேம்படுத்தி அருங்காட்சியகத்தை மராமத்து செய்து அதனைப் பாதுகாக்க வேண்டும் என்பதும் திருச்சி வாசிகளின் கோரிக்கையாக உள்ளது.
