விளையாட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம்-கிருத்திகா தேவி

0
1 full

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிற்குள் வந்த விளையாட்டுகளில் இறகுப்பந்து விளையாட்டும் ஒன்று ஆங்கிலேய படை வீரா்கள் தங்களுடைய பொழுதுபோக்கு விளையாட்டாக இதைப் பின்பற்றி வந்துள்ளனர்.

இறகுப் பந்து விளையாட்டு குறித்து பல்வேறு பதிவுகள் குறிப்பிடப்படுகிறது. ஒருசிலர் இது தமிழ்நாட்டில் உள்ள தஞ்சையில் தோன்றியது என்று கூறுகின்றனர். மேலும் சிலர் பூனேவில் தோன்றியது என்றும், இன்னும்சிலர் இங்கிலாந்தில் தோன்றியது என்றும் கூறுகிறார்கள். அது எங்குத் தோன்றியிருந்தாலும் பெண்களின் பங்களிப்பு இந்த விளையாட்டில் அதிகமாகி உள்ளது. இந்திய வீராங்கனைகளாக உள்ள சிந்து, சாய்னா, உள்ளிட்ட பல பெண்கள் இந்த இறகுப்பந்து போட்டியாளர்களாக தற்போது சாதனை படைத்து வருகின்றனர்.
இறகுப்பந்து போட்டியில் தனக்கான இடத்தைப் பிடிக்க முயற்சி செய்து வரும் திருச்சியை சேர்ந்த கிருத்திகாதேவி நம் இதழுக்கு அளித்த பேட்டியில்…

திருச்சி கேகே நகரில் உள்ள எஸ்பிஐஓஏ பள்ளியில் தான் படித்தேன். எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் கண்டிப்பாக ஏதாவது ஒரு விளையாட்டில் பங்கெடுக்க வேண்டும். 6 மற்றும் 7ஆம் வகுப்புகளில் அத்லட்டிக், அதன்பின் எங்களுடைய உடற்கல்வி ஆசிரியை சாந்தி ஊக்கப்படுத்தியதால் இறகு பந்து போட்டியைத் தேர்வு செய்தேன்.

2 full

8ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை குறிக்கோள் என்று எதுவுமே இல்லாமல் விளையாடினேன், ஆனால் 11ஆம் வகுப்பில் தான் என்னுடைய இறகுப்பந்து விளையாட்டு பயிற்சியாளர் ராஜிவ்காந்தியிடம் பயிற்சிக்கு அனுப்பி வைத்தனர். குறிக்கோளே இல்லாமல் விளையாடிய எனக்கு ஒரு உண்மையான விளையாட்டைக் கற்றுக் கொடுத்தவர் என்னுடைய பயிற்சியாளர் ராஜிவ்காந்தி தான். அதேபோல் அப்பா விஜயகுமார் ஒரு பிஸினஸ் மேன் அவருடைய முழு ஒத்துழைப்பும், முழு வழிகாட்டுதலும் தான் நான் இன்று தேசிய அளவில் பதக்கம் வாங்கும் அளவிற்கு வளர்ந்துள்ளேன் என்று கூறுகிறார்.

நான் முறையாகப் பயிற்சி எடுத்துக் கொண்ட பிறகு 100க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். அதில் 60 போட்டிகளில் நான் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளேன். முதலில் மண்டல அளவிலான போட்டி, மாவட்ட அளவில், மாநில அளவில், தேசிய அளவில் என்று நான் விளையாடி உள்ளேன், தேசிய அளவில் விளையாடும் போது ரொம்ப கஷ்டப்பட்டு விளையாட வேண்டிய நிலையை உணர்ந்தேன். அதற்குக் காரணம் பெண்களின் உடல்ரீதியான பிரச்சனை, மனரீதியான பிரச்சனை என்று எல்லாவற்றையும் தாண்டி, விளையாடப் போனால் அங்கு என்னுடன் போட்டியிடுபவர்கள் பலமானவர்களாக இருப்பார்கள்.

அதிலும் டெல்லி, ஆந்திரா, கேரளா மாநில போட்டியாளர்கள் பலமானவர்களாக இருப்பார்கள். முதன்முதலாக பள்ளி அளவில் மண்டல போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வாங்கினேன், அதன் பின் பல போட்டிகளில் பங்கேற்று தோல்வியும் அடைந்துள்ளேன், வெண்கல பதக்கங்களும் வாங்கி உள்ளேன்.

அதில் முக்கியமானது 2015ல் ஸ்கூல் கேம்ஸ் பெடரேசன் ஆப் இந்தியா சார்பில் சண்டிகரில் நடைபெற்ற போட்டியில் 19வயதிற்கு குறைவான பிரிவில் விளையாடி வெண்கல பதக்கத்தை பெற்றேன். கடைசியாக 2016ல் ஜம்மு காஷ்மீரில் பெண்களுக்கான தேசிய அளவிலான போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றேன். மேலும் கடந்த அக்டோபரில் பெங்களுரில் நடைபெற்ற மூத்த வயதினருக்கான தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு ரேங்க் பட்டியலில் இடம்பிடித்து உள்ளேன். அடுத்து வருகின்ற ஜனவரி 2018ல் தேசிய அளவிலான திறந்தவெளி போட்டியானது நடைபெற உள்ளது. அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகக் கூறுகிறார்.

நான் தற்போது டிஆர்பி பொறியியல் கல்லூரியில் சிவில் படித்து வருகிறேன். என்னுடைய படிப்பு முடித்து நான் வெளியேறுவதற்குள் உலக அளவில் சிறந்த போட்டியாளராக வேண்டும் என்பது தான் என்னுடைய இலக்கு. கண்டிப்பாக நான் என்னுடைய அப்பா, பயிற்சியாளருடன் என்னுடைய இலக்கை அடைவேன். இந்த விளையாட்டு எனக்கு ஒரு நல்ல வேலை வாய்ப்பைத் தந்தாலும் என்னுடைய விருப்பம் முழுமையாக இந்த விளையாட்டை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டும் என்பது தான். எனவே என்னுடைய பெற்றோர்கள் இதற்கு கண்டிப்பாக அவர்களுடைய ஒத்துழைப்பைக் கொடுப்பார்கள் என்று மன உறுதியுடன் கூறுகிறார்.
பயிற்சியாளர் ராஜீவ்காந்தியிடம் பேசுகையில்…

ஒரு காலத்தில் பணக்காரர்கள் மட்டுமே விளையாடிக் கொண்டிருந்த விளையாட்டு காலப்போக்கில் அந்த நிலைமாறி தற்போது வீதிகளில் பிள்ளைகள் விளையாட ஆரம்பித்துவிட்டனா். தற்போது என்னிடம் 50 மாணவர்கள் பயிற்சி எடுத்துக்கொண்டு வருகிறார்கள். அவர்களை நான் கண்காணித்து தான் தேர்வு செய்வேன். ஏன் என்றால் உடம்பு குறைய வேண்டும் பொழுதுபோக்கிற்காக விளையாட வேண்டும் என்று வருபவர்களுக்கு பயிற்சி கொடுப்பதில்லை. விளையாட்டிற்கு என்ற மரியாதையுடன் வரும் ஒரு சாதாரணமானவர்களை கூட நான் வெற்றியாளராக மாற்றுவேன் என்று கூறுகிறார்.

இந்த விளையாட்டில் 10 வயதிற்கு குறைவான போட்டிகள், 10 முதல் 19 வயது வரையிலான போட்டிகள், 19 வயதிற்கு மேல் சீனியர் லெவல் போட்டிகள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிற்கான விளையாட்டு என்பதால் எங்களுடைய இலக்கு ஒலிம்பிக் தான். பெரும்பாலும் தமிழக வீரர்களுக்கு டெல்லி, ஆந்திரா, கேரளா மாநிலங்கள் பலமான போட்டியாளர்களாக இருப்பதற்குக் காரணம் இறகு பந்து போட்டிக்கு என்று அங்கு அகாடமிகள் உள்ளது.

அவற்றில் பயிற்சி எடுக்கும் வீரா்கள் நாள் முழுவதும் பயிற்சி மேற்கொள்கிறார்கள். ஆனால் இங்குக் கல்லூரிகளுக்கு சென்றுவிட்டு தங்களுக்கு கிடைக்கும் நேரங்களில் பயிற்சி எடுக்கிறார்கள்.
உடல் அளவிலான முன்னேற்றங்களிலும் பல மாறுதல்கள் உண்டு, இங்குப் பயிற்சி எடுக்கும் நேரங்களில் நன்றாக விளையாடக் கூடிய வீரா்கள் போட்டி என்று வரும்போது மனதளவில் ஒரு பயத்தை உண்டாக்கி கொள்கின்றனர். அதிலும் தங்களுடன் போட்டியிடும் போட்டியாளர்களை பட்டியலில் பார்த்த உடனே ஒரு 20 சதவீத தோல்வியை நினைத்துக் கொள்கிறார்கள்.

இந்தப் போட்டிக்கு என்று நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் இதைப் பொழுதுபோக்கிற்காக விளையாடக் கூடாது, கடந்த 10 வருடங்களில் மற்ற மாநிலங்களில் உள்ள போட்டியாளர்களுக்கு நாமும் ஒரு பலமானவர்களாக உள்ளோம் என்பதை உணர வைத்துள்ளோம். அதுவே இந்த விளையாட்டிற்கு கிடைத்த பெருமை தான், ஆனாலும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் அளவிற்கு திறமையானவர்கள் தமிழகத்தில் இருந்து செல்ல வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை கண்டிப்பாக அதை என்னுடைய பயிற்சியின் மூலம் உருவாக்க முயற்சி செய்வேன் என்று கூறுகிறார்.

தற்போது தனி போட்டியாளராக கிருத்திகாதேவியும், பிரியதர்ஷினி என்ற எம்.இ படிக்கும் மாணவியையும் தயார்படுத்தி வருகிறேன். அதேபோன்று இருவரும் இணைந்து இரட்டையர் பிரிவில் தொடர்ந்து விளையாடுவதற்கான அளவிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வைப்பது தான் என்னுடைய இலக்கு என்று கூறுகிறார்.

-கிறிஸ்

3 half

Leave A Reply

Your email address will not be published.