என் பிறப்பு என்னாலேயே மறுகட்டமைப்பு செய்யப்பட்டது

0
1

இன்றைய உலகத்துல வாழறது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. போட்டி, பொறாமை, ஏற்றத்தாழ்வுகள் என ஏகப்பட்ட தடைகளைத் தாண்டி இங்கு வாழ்வதே சிரமமாக இருக்கிறது. அப்படிப்பட்ட உலகத்தில், ஒரு திருநங்கை பல தடைகளை கடந்து போராடி ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார். அவர் தான் பிரகாஷ் என்றழைக்கப்பட்ட ‘கஜோல்’…

சொந்தமாக பியூட்டி பார்லர், திருநங்கைகளின் நலனுக்காக ‘சேஃப்’ எனும் அமைப்பை நடத்தி வருவது, தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தின் உறுப்பினர் என பிஸியாக இருந்தவரை, நேரில் சந்தித்து ஒரு கப் காபியோடு பேச்சை ஆரம்பித்தோம்.

“என்னோட அம்மா, அப்பா எனக்கு வச்ச பேர் பிரகாஷ். ஆனா, எனக்குள்ள ஒரு உணர்வு, ‘நீ பையன் கிடையாது’ன்னு சொல்லிக்கிட்டு இருந்துச்சி. அப்போ, நான் யாருங்கிற தேடலில் இறங்குனப்ப தான் எனக்குள்ள இருந்த பெண்மை வெளிப்பட ஆரம்பிச்சது. அப்போதே நான் என் பேரை ‘கஜோல்’ன்னு மாத்திக்கிட்டேன். பேர் மட்டுமல்லாமல், இப்பொழுது நான் ஒரு முழு பெண்ணாக இருப்பதாக உணர்கிறேன்” என வெட்கம் கலந்த புன்னகையோடு பேச ஆரம்பித்தார்.

4

“நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே திருச்சி தான். என் கூட பிறந்தது மொத்தம் நாலு பேரு. அதுல நான் தான் கடைக்குட்டி. ஒரு சாதாரண மிடில் கிளாஸ் ஃபேமிலியில பிறந்தாலும், வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக போய்க்கிட்டு இருந்துச்சி. நான் 4-வது, 5-வது படிக்குற சமயத்துல இருந்தே எனக்குள்ள பெண் தன்மை இருந்தது. நான் எப்பவும் பொம்பளைப் பசங்களோட தான் விளையாடிக்கிட்டு இருப்பேன். பொண்ணுங்களோட முடி, டிரஸ் எல்லாம் பார்த்தா எனக்குபொறாமையா இருக்கும். அம்மா தலையில வச்சிட்டு தூக்கிப்போட்ட பூவை, யாருக்கும் தெரியாம எடுத்துட்டு போய் தனி அறையில என் தலையில வச்சி ரசிச்சிக்குவேன். ஒரு சின்னக் குழந்தையா இருந்த சமயத்துல, எனக்கு அதைப் பத்தி எதுவுமே தெரியலை.

நான் 5-வது வரைக்கும் கோ-எஜூகேஷன் ஸ்கூல்ல தான் படிச்சேன். திருச்சி அண்ணா சிலைக்கு பக்கத்துல இருக்க ஈ.ஆர்.மேல் நிலைப்பள்ளியில் என்னை 6-வது சேர்த்து விட்டுட்டாங்க. அது பாய்ஸ் ஸ்கூல். அவ்ளோ பசங்களுக்கு மத்தியில ஒரு பொண்ணு மட்டும் தனியா இருக்குற மாதிரி எனக்கு ஒரே கூச்சமா இருந்துச்சி. அப்புறம் செயின்ட் ஜோசப் காலேஜ்ல பி.காம் சேர்ந்தேன். நான் காலேஜ் போற வரைக்கும், இந்த உலகத்துலயே இந்த மாதியான கேரக்டர் எனக்கு மட்டும் தான் இருக்குன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். ஆனா, காலேஜ்ல என்கூட படிச்ச ஒருசில ஸ்டூடன்ஸ் என்னோட நடை, செயலை எல்லாம் பார்த்து என்னை அடையாளம் கண்டுக்கிட்டாங்க. காலேஜ்ல எல்லா கல்ச்சுரல் ஈவன்ட்லயும் கலந்துக்குவேன். எனக்கு பொண்ணுங்க மாதிரி சேலை கட்டிக்கிட்டு பரதநாட்டியம் ஆடுறது ரொம்ப புடிக்கும். காலேஜ்ல டான்ஸ் புரோகிராம்னா முதல் ஆளா, கலந்துக்குவேன். அந்தவகையில், செயின்ட் ஜோசப் காலேஜ் தான் எனக்குள்ள இருந்த பெண் தன்மையை வெளிக் கொண்டு வந்துச்சி.

ஒருகட்டத்துல, உடலளவுல பையனாகவும், மனதளவில் பெண்ணாகவும் என்னால ரெட்டை வேஷம் போட முடியலை. அந்த டைம்ல என்னோட திருநங்கை ஃப்ரெண்ட் வீட்டை வீட்டு ஓடிப் போய்ட்டாங்க. அவங்க இருந்த இடத்தை தேடிப் போய் நான் பாக்குறப்ப, அவங்க சேலையெல்லாம் கட்டிக்கிட்டு ஒரு முழு பெண்ணாக என் முன்னாடி நின்னாங்க. எனக்கும் அதே மாதிரியான ஆசை வந்துச்சி. ஆப்ரேஷன் செஞ்சி பெண்ணாக மாறிடலாம்னா, அதுக்கு நிறைய செலவு ஆகும்னு சொன்னாங்க. அந்த டைம்ல விழுப்புரம் பக்கத்துல ஒரு கிராமத்துல, எந்தவித பாதுகாப்பும் இன்றி ஆண் குறியை அகற்றி, முழுமையான திருநங்கையாக மாற்றும் சடங்கு செய்யும் ஆட்கள் ஒருசிலர் இருந்தாங்க. அதைக் கேள்விப்பட்ட உடனேயே எனக்கு பயம் வந்துடுச்சி.

2

அதாவது, ‘போத்திராஜ் மாதா’ எனப்படும் சாமி குஜராத்தில் இருக்கிறது. அந்தக் கடவுள் தான் எங்களுக்கு பிரதான தெய்வம். அந்தக் கடவுளை விடிய விடிய ஆட்டம் பாட்டத்துடன் வணங்கிவிட்டு அதிகாலை 3 மணியளவில், தான் அந்த சடங்கு நடைபெறும். அதுவரைக்கும் மனதளவில் சடங்கிற்கு உட்படுபவரை தயார் பண்ணுவாங்க. வாயில துணியை திணித்து, ஆண் குறியை கத்தியைக் கொண்டு வெட்டிடுவாங்க. இந்த சடங்கின் போது உடம்புல இருக்க பாதி ரத்தம் போயிடும்.

இந்த சடங்கு செய்வதற்கு முன்னாலேயே, பக்கத்தில் ஒரு குழியை தயார் நிலையில் வெட்டி வைத்திருப்பார்கள். சடங்கில் ஏதேனும் தவறு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால், அந்தக் குழியில் அந்த திருநங்கையை தள்ளிவிட்டு புதைத்துவிடுவார்கள். வயசானவங்க. ‘தாயம்மா’ எனப்படும் அந்த சடங்கு முறை இன்னும் 5 சதவிகிதம் புழக்கத்தில் இருக்கிறது.

இந்தமாதிரி வலியை பொறுத்துக்கிட்டு இந்த சடங்கை செஞ்சிக்கிட்டவங்க, கடவுளோட மறுபிறவின்னு திருநங்கை சமுதாயத்தில் பார்க்கப்படுது. அதனால்,அவங்க ஏதாவது சொன்னா, வாழ்த்துனா, பலிச்சிடும்கிற நம்பிக்கை இந்த சமுதாயத்தில் இருக்கு. ஆரம்பத்துல திண்டுக்கல் பக்கத்துல ஒரு டாக்டரே ஆண் உறுப்பை அகற்றும் வேலையை யாருக்கும் தெரியாம செஞ்சிக்கிட்டு இருந்தாரு.

ஆனா, எனக்கு இந்த சடங்கின் மேலும், முறையான பாதுகாப்பு இல்லாததைக் கண்டும் மிகவும் பயமாக இருந்தது. எனவே, பல தேடுதலுக்குப் பிறகு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் முறையாக சிகிச்சைப் பெற்று, என்னுடைய பிறப்பை மறுவடிவமைப்பு செய்திருக்கிறேன். இப்படி ஒரு ஆப்ரேஷன் செஞ்சிக்கிட்டதை நான் கொஞ்ச நாளா யாருக்கிட்டயுமே சொல்லலை. வீட்டுல இந்த விஷயத்தை சொன்னதும், ஆரம்பத்துல கொஞ்சம் எதிர்ப்பு இருந்துச்சி. அப்புறம் என்னை ஏத்துக்கிட்டாங்க.

திருநங்கை சமுதாயம்னா இப்படித்தான் இருக்கும்ங்குற ஒரு பரவலான பிம்பம் இங்க இருக்கு. அப்படிப்பட்ட சமுதாயத்துல நான் தனியாத் தெரியணும்னு நான் இன்னைக்கு வரைக்கும் செயல்பட்டுக்கிட்டு இருக்கேன். சொந்தமாக பியூட்டி பார்லர் வச்சிருக்கேன். திருநங்கைகளின் நலன் மற்றும் உரிமைகளைப் பெறுவதற்காக ‘சேஃப்’ எனும் அமைப்பினை நடத்தி வருகிறேன். இதுமட்டுமல்லாமல், திருநங்கைகளின் வளர்ச்சி மற்றும் மாற்றம் குறித்து செயல்படும் ‘தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தில்’ நானும் ஒரு உறுப்பினராக இருக்கிறேன்.

திருநங்கை சமுதாயத்தைச் சேர்ந்த பலரும், இன்றைக்கு தமிழகத்தில் பல துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அரசும் திருநங்கைகளுக்கான உதவிக்களைச் செய்து வருகின்றது. திருநங்கை சமுதாயத்தின் மீதான பிம்பம் மாறிவருகிறது” என்றார்.

சந்திப்பு: கிருஷ்வின்

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்