பிள்ளைகள் படிப்புக்காக ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தேன்

0
Business trichy

திருச்சி ஏர்ப்போர்ட் சாஸ்திரி நகர் பகுதியில் வசிப்பவர் செல்வி, ஆட்டோ டிரைவரான தனது கணவர் ராஜேந்திரன் நெஞ்சு வலி காரணமாக சில வருடங்களுக்கு முன்பு இறந்துபோனார். மூன்று பெண் குழந்தைகளின் தாயான இவர் அடுத்து தீர்க்கமான முடிவெடுத்தார்.

செல்வியை சந்தித்தோம்….
“நான் பிறந்ததிலிருந்தே யார்க்கிட்டயும் அதிகம் பேசமாட்டேன். அப்பா வீட்டுல நான்தான் பெரிய பொண்ணு, வீட்டில் இருந்த வறுமை காரணமாக 7வதுக்கும் மேல் படிக்க வைக்க முடியாதுன்னு சொல்ல. ஒருவருடம் வீட்டோடு இருந்தேன். அடுத்த வருடம் அடம்பிடிச்சி, பள்ளிக்கூடம் போனேன். ஆனாலும் பத்தாவதுக்கும் மேல் படிக்க முடியல. பத்தாவது பரிட்சை முடிந்த கையோடு கல்யாணம் பண்ணிக் கொடுத்தாங்க.

திருமணம் முடிந்தாலும், திருச்சியில் எந்த இடமும் தெரியாது. எங்க இறக்கி விட்டாலும் வீடு வர தெரியாமல் கஸ்டப்பட்டேன். இந்த காலம்தான் எனக்கு எல்லாத்தையும் கற்றுக்கொடுந்தது.

கல்யாண வாழ்க்கை நல்லபடியாக அமைந்தது. அவர் ஆட்டோ ஓட்டி எங்களை காப்பாற்றி வந்தார். எங்களுக்கு மூன்று பெண் குழந்தைகள். நான்தான் படிக்கல பிள்ளைகளை நல்லா படிக்க வைக்கனும் என முடிவெடுத்தோம். பெரிய பொண்ணு ராஜலெட்சுமி 12ம் வகுப்பில் 1176 மார்க் எடுத்தாள், பி.காம் படித்த அவருக்கு திருமணம் முடித்து வைத்தேன். அடுத்தவள் சங்கவி 880 எடுத்தார் காலேஜ் படித்து வருகிறார். கடைக்குட்டி ராதா ஈ.வேரா கல்லூரியில் படிக்கிறார். பிள்ளைகளும் எங்கள் நம்பிக்கையை வீணாக்காமல் நன்றாக படிக்கிறார்கள்.

இந்நிலையில்தான் அவருக்கு திடீர்ன்னு உடல்நிலை சரியில்லாமல் போனது. நெஞ்சு வலியால் அவதிப்பட்ட அவரை, மருத்துவமனைக்கு அழைச்சிக்கிட்டு அழைந்தேன். அப்போது என் கணவர், யாரையும் உதவிக்கு கூப்பிட வேண்டாம்னு நீயே ஆட்டோ ஓட்டு என எனக்கு ஆட்டோ ஓட்டக் கற்றுக்கொடுத்தார். கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டு, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வைத்தியம் பார்த்தோம். ஆனால் அவரை காப்பாற்ற முடியல.

அவர் இறந்தபிறகு வீட்டிலேயே இருக்கவும் முடியல, நான் வீட்டில் இருந்தால் பிள்ளைகள் படிப்பு கெட்டுபோகும் என்பதால் ஆட்டோ ஓட்ட முடிவெடுத்தேன். அவர் ஆட்டோ ஓட்டிய இடத்தில் எல்லாம் போய் ஆட்டோ ஓட்டப்போகிறேன்னு கேட்டப்போது, என்னை நம்பல.விடாமல் என்னோட முடிவை, அவர் ஆட்டோ ஓட்டிய ஆட்டோ தொழிலாளர் சங்கத்தில் பொறுப்பாளராக இருக்கும் அப்பாஸ், அழகப்பன், ராஜேந்திரன் உள்ளிட்ட அண்ணன்களிடம் சொன்னேன். அவங்களும் தயங்காமல் என்னை உற்சாகபடுத்தியதோடு, எனக்கு ஆட்டோ வாங்கிக் கொடுக்க உதவி செய்தார்கள். அடுத்து என் வீட்டு பத்திரத்தை அடகு வைத்து இந்த ஆட்டோவை வாங்கியிருக்கிறேன்.

Full Page

முதல்நாள் ஸ்டேண்டுல வண்டியை போட்டு நிற்கும்போது என்னை பார்த்து சிரிச்சாங்க, பிறகு நான் நடந்துகொள்ளும் முறையை பார்த்து அந்தபொண்ணு கஸ்டத்துக்காக உழைக்க வந்திருக்கு, நாம உதவனும் என எல்லோரும் உதவ ஆரமிச்சாங்க. இப்போ எல்லோரும் என் மேல பாசமாக இருக்கிறாங்க. நானும் மற்றவங்களைபோல அதிகமாக ஆசைப்படாமல், சவாரிக்கு எவ்வளவோ அதுதான் வாங்குவேன்.

இப்போ திருச்சியில் எனக்கு தெரியாத இடமே இல்லை. அந்தளவுக்கு என்னை காலம் மாற்றியிருக்கு. இந்த வேலையில் சில சவாரிக்கு வரும்போது என் மீது பரிதாபப்பட்டு கூடுதலாக காசு கொடுப்பாங்க. சிலர் குறைச்சி பேசுவாங்க. அவர்களிடம் சரியாக நடந்துகொள்வேன். சவாரிக்கு மேல கூடுதலாக வாங்கியதில்லை. அந்த உண்மைதான் என்னை இப்போதும் ஓட வைக்குது.

காலையில் 8 மணிக்கு ஆட்டோவை எடுத்தால் ராத்திரி 9 மணியாகிடும் வீடுவந்து சேர. அதுக்குமேல நம்மளால ஓட்ட முடியாது. தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்க வேண்டாம்னு நான் வீட்டுக்கு வந்துடுவேன்.

ஒரு நாள் சவாரிக்கு ஏறிய ஒருவர் போதையில் இருந்தார், அது எனக்கு தெரியாமல் வண்டியை எடுத்துட்டேன். கொஞ்சம் தூரம் போன பிறகுதான் அவர் குடித்து நிதானம் இல்லாமல் இருந்தது தெரிந்தது. நாம போவது காட்டுவழி பாதை என்பதால் எதற்கு வம்பு என யோசித்து, வண்டியை மெல்ல உருட்டியபடி நிறுத்திட்டு, அண்ண, வண்டியில எண்ணெய் இல்லை, எண்ணெய் போட்டால்தான் வண்டி போகும், நீங்க வேற வண்டியில போயிடுறீங்களா என மெல்ல பேசி அவரை இறக்கிவிட்டேன்.

அதுவரை போனதுக்கு காசு கொடுத்துட்டு, அடுத்த வண்டி எடுத்துக்கிட்டு போனார். நான் அவர்க்கிட்ட மல்லுக்கட்டி நின்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என யோசித்து பாருங்க. அப்படித்தான் சாதுர்யமாக நடந்துக்க வேண்டியிருக்கு என்றபடி சிரித்தார் செல்வி .

– செ. பிரியா
புகைப்படம் : த.விஜயலெட்சுமி,

Half page

Leave A Reply

Your email address will not be published.