செங்கொடி இயக்கத்தின் செம்மலர்-கே.அனந்த நம்பியார்

0
1

செங்கொடி இயக்கத்தின் செம்மலரான கே.அனந்த நம்பியார், 1918ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி பிறந்தார். கேரள மாநிலம் செறுதாழம் கிராமத்தில் பிறந்தாலும் இவர் வாழ்ந்து மணம் வீசி மறைந்தது இந்த மலைக்கோட்டை மாநகரில் தான்.

இண்டர்மீடியட் வரை படித்த இவர் 1938ஆம் ஆண்டு முதல் பொன்மலை ரயில்வே பணிமனையில் எழுத்தராக பணியாற்றத் தொடங்கினார்.
பொன்மலையில் அப்போது இயங்கி வந்த தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கத்தில் இணைந்து சங்கப் பணியிலும் ஈடுபடலானார்.

பொன்மலை தொழிற்சங்க நிர்வாகிகளான எம்.கல்யாணசுந்தரம் உட்பட 7 பேர் யுத்த எதிர்ப்புப் பிரசுரங்களை வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டி 1940 ஆண்டு ஆங்கிலேய அரசு கைது செய்தது. அது முதல் தொழிற்சங்கப் பொறுப்புகளை ஏற்று ரகசியமாக அனந்த நம்பியார் பணியாற்றினார். இதை அறிந்த நிர்வாகம் இவரை மதுரைக்கு மாற்றியது.
மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களான என்.சங்கரய்யா, நாகு, எஸ்.பாலு போன்றோரது தோழமை நம்பியாரை தீவிரமான கம்யூனிஸ்ட்டாக மாற்றியது.

2

தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராக அப்போது இருந்த எஸ்.பரமசிவம் 1941இல் மரணமடைந்ததைத் தொடர்ந்து 1942இல் நம்பியார் சங்கத்தின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றார்.
1943ஆம் ஆண்டு நம்பியார் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு சங்கத்தின் முழுநேர ஊழியராகி மீண்டும் பொன்மலை வந்து வசிக்கத் தொடங்கினார். நம்பியார் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு சங்க உறுப்பினர்கள் எண்ணிக்கையும், கிளைகளும் அதிகரித்தன. பொன்மலை சங்கம் என்பது இந்திய தொழிற்சங்க வரலாற்றில் தனிஇடத்தைப் பெற்றது.

1940இல் நடைபெற்ற சென்னை மாகாண சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாக ஒதுக்கப்பட்ட ரயில்வே தொகுதியில் போட்டியிட்டு நம்பியார் வெற்றி பெற்றார். இதே ஆண்டில் ரயில்வே தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு உட்பட பல கோரிக்கைகளை முன் வைத்து கல்யாணசுந்தரம், அனந்த நம்பியார் தலைமையில் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொழிற்சங்கம் நடத்தியது.

போராட்டத்தை ஒடுக்கும் விதமாக ஆங்கில அதிகாரி ஹாரிசன் தலைமையில் தொழிலாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகமும், தடியடியும் நடத்தப்பட்டது. இதில் இறந்து விட்டார் என்று கருதும் விதமாக படுகாயமடைந்தார் நம்பியார்.

4

இப்போராட்டத்தில் நம்பியாரை முதற் குற்றவாளியாக்கி 273 பேர் மீது வழக்குகள் போடப்பட்டன. ஆனாலும் இறுதிவரை போராடி தொழிலாளர்களின் வெற்றிக்காக நம்பியார் பாடுபட்டார்.
வீரஞ் செறிந்த இப்போராட்டத்தின் மூலம் இவருக்கு இந்தியாவெங்குமுள்ள ரயில்வே தொழிலாளர் இடையே புகழ் பெருகியது.

1946இல் நடைபெற்ற கடற்படை எழுச்சியைத் தொடர்ந்து 1947இல் எம்.கல்யாணசுந்தரம், அனந்த நம்பியார் உட்பட 200க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிற்சங்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். நம்பியார் பாதுகாப்புக் கைதியாக வேலூரில் சிறைவைக்கப்பட்டு 1948இல் கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்டது.

நம்பியார் தலைமறைவாக இருந்து கொண்டு சங்கத்திற்கும், இயக்கத்திற்கும் வலு சேர்க்கும் வண்ணம் பாடுபட்டார். பின்னர் செங்கற்பட்டில் கைது செய்யப்பட்டு வேலூரில் சிறை வைக்கப்பட்டார். அப்போது சிறைக்குள்ளும் உண்ணாவிரதப் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தியுள்ளார்.

1950இல் இப்போராட்டத்தின் விளைவாக ஆயுதப் போலீசார் கடுமையான தாக்குதலை நடத்தினர். இதில் நம்பியாரின் வலதுகை உடைந்து போனது.
போராட்டம், சிறை, படுகாயம் என்ற நிலை நம்பியாரின் வாழ்நாள் முழுவதும் இருந்தது. 1958இல் ரயில்வே நிர்வாகம் தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கத்திற்கு அங்கீகாரம் தர மறுத்ததை எதிர்த்து தென்னகத்தை குலுக்கிய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
1962இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏற்பட்ட தத்துவார்த்தக் கருத்து மோதலைத் தொடர்ந்து காங்கிரஸ் அரசால் நம்பியார் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

1975இல் இந்திராகாந்தி கொண்டு வந்த அவசர கால சட்டமான மிசாவை எதிர்த்து குரல் கொடுத்ததால் கைது செய்யப்பட்டார். இந்தியக் குடியரசின் முதல் தேர்தலிலும் (1952) பின்னர் 1962, 1967 தேர்தல்களிலும் வெற்றி பெற்று 14 ஆண்டுகள் மக்களவையில் உறுப்பினராக இருந்துள்ளார். திருச்சிராப்பள்ளியில் மத்திய பேருந்து நிலையம் அமையவும், பெல், துப்பாக்கித் தொழிற்சாலை தொடங்கிடவும் பெருமுயற்சி எடுத்தவர்.

1964இல் கம்யூனிஸ்ட் கட்சி இரு கட்சிகளாக உடைந்த பின்பு அனந்த நம்பியார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து அதன் மாநிலக் குழு உறுப்பினராகி அதன் வளர்ச்சிக்கு பாடுபட்டார். மனிதநேயப் பண்பாளராகவும், காட்சிக்கு எளியவராகவும் ரயில்வே தொழிலாளர்களின் போர் முரசாகவும் திகழ்ந்தவர் நம்பியார். 1991இல் கரூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருச்சிராப்பள்ளி மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு செங்கொடியை ஏற்றி வைத்த இந்த செம்மலர் அதே ஆண்டு அக்டோபர் 11ந் தேதி உதிர்ந்தது.

3

Leave A Reply

Your email address will not be published.