
மாற்றம் ஒன்றே மாறாதது என்பது உலகறிந்த உண்மை. விஞ்ஞான மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக அனைத்துத் துறைகளிலும் எண்ணற்ற மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டுள்ளன. கண் மருத்துவத்துறையின் அனைத்து உட்பிரிவுகளும் முக்கியமாக கண் புரை அறுவை சிகிச்சை துறையில் அபரிதமான மேம்பாடு அடைந்து வருகிறது திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை.
உலக அளவில் வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளில் பார்வையிழப்பிற்கு மிக முக்கிய காரணம் கண் புரை ஆகும். எளிதில் சரி செய்யக்கூடிய இந்த பிரச்சினையால் இன்னும் பல்லாயிரம் மக்கள் பார்வையின்றி அல்லல் படுவது வருத்தம் தரும் விஷயமாகும்.
பல தையல்கள், பல நாட்கள் மருத்துவமனை வாசம். தடிமனான கண்ணாடி இப்படிப்பட்ட காலங்களில் இருந்து கண் புரை சிகிச்சை தற்போது பெரிதும் முன்னேற்றம் கண்டுள்ளது. மிக நுண்துளை அறுவை சிகிச்சையால் கண் புரையை கூழாக்கி வெளியேற்றி அதே துளையின் ஊடாக உள் விழியாடி (Intra Ocular Lense) பொருத்தப்படுவது இப்போது வாடிக்கை.
உணர்விழக்கும் ஊசிகள் கண்ணருகில் செலுத்தப்படாமல் மருந்து துளிகளை இட்டும் கண் புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

லேசர் கதிரியக்கத்தின் உதவியால் அறுவை சிகிச்சையில் சில முக்கிய செயல் முறைகளை முடித்து பின்பு கத்தியின்றி மீதமான செயல்முறைகளை அறுவை அறையில் செய்து முடிக்கும் முறை பல இடங்களில் தற்போது செயல்பட்டு வருகிறது.

அறுவை சிகிச்சையின் முறைமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு சற்றும் குறைவின்றி உள் விழியாடி (Intra Ocular Lense) அமைப்புகளிலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தூரப்பார்வை கிட்டப்பார்வை மற்றும் இடைப்பட்டத் தூரத்தில் உள்ள பார்வை. இவை எல்லாவற்றையும் கண்ணாடியின்றி தெளிவாக காண உதவும் பல்நோக்கு உள் விழியாடி (Intra Ocular Lense)தற்காலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கரு விழியின் அமைப்பின் காரணமாகவும் கண் புரை அகற்ற ஏற்படுத்தப்படும் கீறல் ஆறும் போது ஏற்படும் மாற்றங்களாலும் உரிச்சி பிழை (Astigmatism ) உண்டாகிறது. இதை மேற்கொள்ள டாரிக் உள் விழியாடி (Intra Ocular Lense) பயன்படுகிறது. கண் புரை அறுவை சிகிச்சையில் சாதாரணமாக கண்ணின் புரையோடின வில்லை அது அமைந்துள்ள உறையிலிருந்து நீக்கப்பட்டு அந்த உறையினுள் செயற்கை உள் விழியாடி (Intra Ocular Lense) பொருத்தப்படுகிறது.
சிலருக்கு வயதின் காரணமாகவோ அடிபட்டதின் விளைவாகவோ இந்த உறை வலிமையற்ற நிலையில் இருக்கலாம். அப்படிப்பட்ட சூழல்களில் பயன்படுத்த விழி வெண் கோளத்தில் பொருத்தப்படும் உள் விழியாடி (Intra Ocular Lense) பயன்பாட்டில் உள்ளன. இதையே தையல் இல்லாத முறையில் செய்யும் Glued உள் விழியாடி (Intra Ocular Lense) என்ற முறை பல இடங்களில் பின்பற்றப்படுகிறது.
மருத்துவமனையில் ஒரு சில மணி நேரங்கள் மட்டும் செலவழித்து இந்த சிகிச்சைகளை செய்து கொள்ளலாம் என்பது மற்றொரு சிறப்பு இவற்றையெல்லாம் தாண்டி கண் புரை அறுவை சிகிச்சையின் பிறகு ஏற்படும் பார்வை குறைபாடுகளை கண்ணாடிகளை கொண்டே, தொடுவில்லைகளை (Contact Lense) கொண்டோ லாசிக் அறுவை சிகிச்சையின் மூலமாகவோ சரி செய்ய முடியும்.
கண் புரை அறுவை சிகிச்சையை செய்ய பயந்து தள்ளிப் போட்ட காலங்கள் உருண்டோடி விட்டன. செம்மையான மற்றும் பாதுகாப்பான முறையில் கண் புரை அறுவை சிகிச்சையை மேற்கொண்டு மகிழ்வோடு வாழ்வோர் பலர். தெளிவான பார்வை உங்களை அழைக்கின்றது.
