என் தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்தேன்

வழக்கறிஞர் ஜெயந்திராணி

0
full

ஒரு கல்லூரி விழா ஒன்றில் கணீர் குரலில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்கொள்வது எப்படி, பெண்களின் உரிமைகள், குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை தடுப்பது எப்படி என்று பேசிக்கொண்டிருந்தார் வழக்கறிஞர் ஜெயந்திராணி. சமூக மற்றும் குழந்தைகள் நல ஆர்வலர். சுயமரியாதை கொள்கையில் தீவிர பற்றாளரான ஜெயந்திராணி தன் தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்தவர் என தமிழகம் முழுதும் அறியப்பட்டவர். ‘நம்ம திருச்சி’ வார இதழுக்காக அவரை சந்தித்தோம்.

யார் அந்த ஜெயந்திராணி என்று அறிமுகம் செய்யுங்களேன்?

“ஜெயந்திராணி, ஒரு சாதாரண பெண். சேலத்தில் நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்த பெண். எங்க பெற்றோர்களுக்கு பிறந்த முதல் பெண் குழந்தை. எங்க அப்பா விவசாயியாகவும், வழக்கறிஞராகவும் இருந்தார். கல்வியும், அறிவும், தன்னம்பிக்கையும் இருந்தால்தான், வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் வாழ முடியும் என்ற போதனையோடு வளர்த்தார்கள். சேலத்தில் அப்போது பிரபலமான ‘பாத்திமா கான்வென்டில்’ பள்ளி படிப்பை முடித்தேன். மாணவியாக இருந்தபோதே பல போட்டிகளில் பங்குபெற்றேன். பள்ளியில் அனைத்து நிகழ்வுகளிலும் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். படிப்பு மட்டுமின்றி பல நிகழ்வுகளில் ஈடுபடுத்திக் கொண்டதால், பள்ளியில் ‘ஜெயந்திராணி ஃபேமஸ்.

poster

தந்தை வழக்கறிஞர்.. அதனால் வழக்கறிஞர் ஆனீர்களா?

‘இல்லவே இல்லை.. எனக்கு மருத்துவம் படிக்க சீட் கிடைத்தும், மருத்துவத்தில் ஆர்வம் இல்லாததால் அதை நிராகரித்தேன். சயன்டிஸ்ட் ஆக வேண்டும்.. சயன்ஸ் படிக்க வேண்டும் என்ற ஆசையை என் தந்தையிடம் தெரிவித்தேன். அதனால், சென்னையில் ‘எத்திராஜ்’ பெண்கள் கல்லூரியில் B.Sc. வேதியியல் படிப்பில் சேர்த்துவிட்டார். என் திறமைகளை முழுமையாக வளர்த்துக் கொள்ள இக்கல்லூரி மிகவும் உறுதுணையாக இருந்தது. அப்போதே கல்லூரி ‘துணைத்தலைவராக’ (Vice-Chairman) தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றேன். B.Sc.படிப்பு முடித்தவுடன், M.Sc. வேதியியல் அந்த கல்லூரியில் இல்லாததால், யோசனையில் இருந்தபோது, சட்டப்படிப்புக்கு விண்ணப்பித்தேன். திருச்சி சட்ட கல்லூரியில் இடம் கிடைத்தது. அப்படித்தான் திருச்சிக்கு வந்தேன்.

படிப்புக்காக திருச்சிக்கு வந்து, திருச்சியிலேயே செட்டில் ஆகிட்டீங்க.. திருச்சி வாழ்க்கை எப்படி?

சும்மா சொல்லக்கூடாது.. இன்னைக்கு நான் வளர்ந்து வழக்கறிஞர் தொழில் மற்றும் பல துறைகளில் கால் ஊன்ற எனக்கு எல்லா வகையிலும் உதவியது, இந்த திருச்சிதான். சட்டக்கல்லூரியில் படிக்கும் போதே, பல சவால்கள். தன்னம்பிக்கையோடு, என் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு, சுங்கத்துறையில் பப்ளிக் பிராசிக்கியூட்டராகவும், வாகன சட்ட நிபுணருமாக இருந்த சுந்தரநாதன் கிட்ட 6 வருஷம் ஜீனியராக பிராக்டிஸ் செய்தேன்.

திருச்சி உங்களுக்கு பல வழிகளில் கால் ஊன்ற காரணமாக இருந்துள்ளது என்று சொன்னீர்களே.. எப்படி?

இங்க வந்து சட்டக்கல்லூரியில் சேர்ந்து, ஹாஸ்டலில் தங்கி, டவுன் பஸ்ல போறதுன்னு, பெரிய போராட்டம் தான். அப்போ தான் பெண்களுக்கு தனியாக இருக்கைகள் வேண்டும்னு கலெக்டர் கிட்ட போய் மனு அளித்து அது நடைமுறைக்கு வந்திச்சி.. பஸ்ல சில்லறை கொடுக்காவிட்டால் உரிமையோடு தட்டிக் கேட்பது.. அப்புறம் நான் தெரிஞ்சிக்கிட்டது, காவலர்கள் கிட்ட பயம் மட்டும் தான் இருக்கும்.. ஆனால வழக்கறிஞர்கள் கிட்ட மரியாதை கலந்த பயம் இருக்குதுன்னு… தனியா பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சதும், இலவச சட்ட உதவி மையத்துக்கு, நிறைய பெண்கள் ஜீவனாம்சம் கேட்டு மனு அளித்ததை பார்த்தேன்.

பெண்கள் மட்டுமல்லாது குழந்தைகளும் படுகிற கஷ்டங்கள் நிறைய தெரிய வந்தது.. அதனால பெண்களுக்காகவும், குழந்தைகளின் உரிமை மற்றும் நலனுக்காகவும், என்னுடைய பார்வை திரும்பியது.. என் நண்பர்கள் பலர் மூலமாக பல தொண்டு நிறுவனங்களின் அறிமுகம் கிடைத்தது.

பெண்கள் நலம்.. பெண்கள் உரிமை.. குழந்தைகள் நலம்..
என்ன செய்ய ஆரம்பிச்சீங்க..?

நான் சொன்னேன்ல… பல தொண்டு நிறுவனங்களின் அறிமுகம் கிடைச்சதுடன்… அவங்க மூலமா, பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் மற்றும் உரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், நிறைய கூட்டங்கள், கருத்தரங்குகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பேச ஆரம்பிச்சேன். குறிப்பா.. கல்லூரிகளில் சமூகப்பணி கற்கும் மாணவர்களுக்கு என் பங்கு அதிகமாக இருந்தது. மேலும் வளர் இளம் பருவ பெண்களிடத்தில் நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பணியாற்றினேன். வழக்கறிஞர் என்ற வகையில், நிறைய பெண்கள் என்னிடம் ஆலோசனைக்காகவும், வழக்குக்காகவும் வந்தாங்க… பல பெண்களுக்கு வழிகாட்டியாகவும், தன் துன்பத்திலிருந்து விடுபட என்னால் முடிந்த அளவில் உதவியுள்ளேன்.

பெண் வழக்கறிஞர் பணி எப்படி இருந்தது… இருக்குது?

ukr

வழக்கறிஞர் பணி என்பது எல்லாருக்கும் ஒரே மாதிரித்தான். ஆனால் பெண் வழக்கறிஞர் பணி என்பது மிகவும் சவாலாகத் தான் இருக்கிறது. நான் பிராக்டீஸ் பண்ண ஆரம்பித்த போது, ஒரு சிலர் (சுமார் 8 பேர்) தான் வழக்கறிஞர்களில் பெண்கள். அதற்கப்புறம், பல பெண்கள் பணி செய்ய ஆரம்பித்தார்கள்… எங்களுக்கென்று ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தி… முதன்முறையாக பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தை ஏற்படுத்தி, அதன் முதல் தோற்றுவித்த செயலாளராக (Founder Secretary) இருந்தேன். எங்களுக்கென்று கட்டிடம் திரு.ரெங்கராஜன் குமாரமங்கலம் அவர்களால் கட்டித்தரப்பட்டது.

பெண் வழக்கறிஞராக எதை சவாலாக எண்ணுகிறீர்கள்?

வாழ்க்கை என்பதே சவால் தான். வழக்கறிஞர் என்ற தகுதி இருப்பதால் மட்டுமே, நமக்கு எல்லா விதத்திலும் கை கொடுக்கும் என்றில்லை. எங்கள் உரிமைக்காக, எங்கள் தேவைக்காக… போராடி கொண்டிருக்கிறோம். பொதுவாகவே பெண்கள் எல்லா பணியிலும் சிறந்து விளங்கும் ஆற்றல் உடையவர்கள் தான். ஆனால் பெண்களை முடக்க, ஒடுக்க, பல ஆயதங்களை பயன்படுத்தினாலும் ஒழுக்கக் கொலை (Character Assasination) அவற்றை சமாளிப்பது என்பது ஒரு சவால்தான்.

வீட்டு வேலை செய்யும் பெண் முதல் நாட்டின் பிரதம மந்திரியாக இருந்தாலும், பெண் என்ற காரணத்தினால் பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். எங்களுக்கென்று வழக்குகள் வருவது கூட, பல தடைகளை தாண்டி தான் வருகிறது.. ஆகவே, வாழ்க்கையிலும், பொதுவாழ்விலும், பணியிலும் ஒவ்வொரு நாளும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

சமூகப்பணியில் ஈடுபாடு எப்படி வந்தது? நான் பள்ளியில் இருந்தபோதே, ஹெல்ப் ஏஜ் இந்தியா (Helpage India) என்ற அமைப்பு எனக்கு அறிமுகமானது அவ்வமைப்பில் ஈடுபட்டு செயலாற்றியதால் சிறு வயதிலிருந்தே சமூகப்பணி மீது ஈடுபாடு வளர்ந்தது. வழக்கறிஞர் பணி செய்ய ஆரம்பித்தவுடன் பல தொண்டு நிறுவனங்களோடு தொடர்பு ஏற்பட்டு, நானும் என்னால் இயன்ற வகையில், குறிப்பாக பெண்கள், குழந்தைகள், எய்ட்ஸ் நோயாளிகள், முதியவர்கள், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயலாற்றினேன். ஒரு பெண்ணாக, பெண் வழக்கறிஞராக பெண்களின் உரிமைக்காகவும், அவர்களின் துன்பங்களை போக்கும் வகையில் செயலாற்றுவது மிகவும் மன நிறைவை அளித்தும், ஒரு கட்டத்தில் நானே, ‘PARENTS TRUST’ என்ற அமைப்பை ஏற்படுத்தி வளர் இளம் பருவ மாணவிகளுக்கும், முதியவர்களுக்கும், பெண்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

இதுவரை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சாதித்ததாக… அல்லது மைல்க்கல்லாக நினைப்பது எதை?

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் உரிமைகளை மட்டுமே மையப்படுத்தி நான் செயலாற்றியதன் நிமித்தமாக நான் திருச்சி மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தில் தலைமை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டேன். சுமார் 5 வருட காலம் (2007-2012) பல குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்திய அனுபவம், அக்குழந்தைகளை மீட்டு, மறுவாழ்வு மற்றும் கல்வி அளித்தது மன நிறைவுதான். தமிழகத்திலேயே முதன்முதலாக குழந்தை திருமணத்திற்காக FIR என் முயற்சியில் பதிவு செய்யப்பட்டது. பல குழந்தைகள் திருமணத்தில் இருந்து மீட்கப்பட்டு, முதுகலை வரைக்கும் படித்து முடித்தவர்களும் இருக்கிறார்கள். பல துறை அலுவல்களையும் ஒருங்கிணைத்து இக்குழுமத்தில் செயலாற்றியது. மேலும், தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு செயலாற்றியது. இந்தியாவிலேயே, தமிழகத்தின் இவ்வாணையம் மூலமாக அரசுக்கு குழந்தைகளுக்கான உரிமைகள் மற்றும் பாதுகாப்பு கொள்கை உருவாக்கி, வரைவு அறிக்கை (Recomandation) அளித்ததும் ஒரு சாதனையே.

உங்கள் குடும்பம் மற்றும் பொழுதுபோக்கு என்ன?

என் குடும்பம் மிகச் சிறிய குடும்பம்… நானும் என் கணவர் மட்டும் தான்.. நான் அவருக்கு குழந்தையாகவும், அவர் எனக்கு குழந்தையாகவும் உள்ளார். அவரும் சட்டம் படித்தவராக இருந்தாலும், வழக்கறிஞராக இல்லாமல், தொண்டு நிறுவனங்களுக்கு ஆலோசகராக (Consultant) உள்ளார். எனக்கு பொழுதுபோக்கு என்பது பழைய பாடல்களை கேட்பதும், அதிகமாக புத்தகங்களை படிப்பதும் தான். மேலும் எனக்கு மன நிறைவை தருவது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரச்சனைகளில் ஈடுபட்டு அவர்களுக்கு தீர்வை கிடைக்க செய்வதுதான்..

குழந்தைகள் நலன் மற்றும் உரிமைகளுக்காக செயலாற்றும் நீங்கள், தற்போது குழந்தைகளின் நிலை என்ன.. அவங்களுக்கு என்ன செய்ய வேண்டும்…

குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்கள்.. குழந்தைகளோடு அதிகமாக பேசுங்கள்… வேலை, பணம், தொழில், டிவி என்று நேரம் செலவிடும் போது, குழந்தைகளுடன் செலவிடும் நேரம் எவ்வளவு என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.. குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். தேவையான ஆசைகளை நிறைவேற்ற வேண்டும். கல்வி மட்டுமல்லாது, பல துறைகளில் அவர்களின் ஆர்வத்தை ஊக்கப்படுத்த வேண்டும். கல்வி மட்டுமே சிறந்த, சாதனையாளர்களாக மாற்றாது… கல்வியோடு, பொது அறிவு, சேவை, தேசபக்தி, சமூக சிந்தனை ஆகியவற்றையும் உணர்ந்து கொள்ள ஊக்கமளிக்க வேண்டும்.

இறுதியாக பெண்களுக்கு சொல்ல விரும்புவது…

பெண்கள் தான் சக்தி… பெண்களுக்கு பெரும் ஆற்றல் உண்டு… அவர்களுக்கென்று தனியாக எந்த பணி வரைமுறையும் இல்லை. சாதனையாளர்களாக பெண்கள் திகழ, பல சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும்… ஆனால், பெண்கள் மனம் உடைந்து போகாமல், மன உறுதியுடன், தன்னம்பிக்கையோடு பணி செய்தால், செயலாற்றினால், ஒவ்வொரு பெண்ணுக்கும் சாதனை என்பது சுலபமே… அனைத்து பெண்களும் கல்வியோடு, துணிச்சலும், சவால் மற்றும் விமர்சனத்தை எதிர்கொள்ளும் பக்குவத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையும். மனஉறுதியும் நிறைந்த பெண் வழக்கறிஞர் திருமதி. ஜெயந்திராணி அவர்களிடம் நன்றி சொல்லி விடைபெற்றோம்.

half 1

Leave A Reply

Your email address will not be published.