
தமிழகத்தின் இரண்டாம் தலைநகரான ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் பல அடையாளங்களுடன் நிமிர்ந்து நின்றுள்ளது. இங்கே வாழ்ந்தவர்கள் ஏராளம். மக்கள் மனதில் நிலைத்து நின்ற பலர் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டங்களின் அடையாளங்களாக விளங்கினார்கள். அந்த அடையாளங்களை நம்ம திருச்சி வார இதழ் மூலம் திரும்பிப் பார்த்து வருகிறோம் அந்த வரிசையில்…
.
நாதஸ்வர இசை உலகில் புகழ்பெற்று விளங்கிய சின்ன மௌலானா நீண்டகாலம் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்திருந்தாலும் இவர் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள காரவாடி என்னும் கிராமத்தில் 1924இல் பிறந்தவர். இவர் தந்தை ஷேக் காசிம் சாகிப்பும் மிகச் சிறந்த நாதஸ்வர வித்வானாக விளங்கியவர். தஞ்சாவூர் பாணி இசைமரபில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட ஷேக் சின்ன மௌலானா தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோவில் ராஜம், துரைக்கண்ணு, சகோதரர்களிடம் பல காலம் பயிற்சி பெற்றார்.
தமிழகத்தில் மட்டுமின்றி இலங்கை, கனடா, நியூயார்க், ஹாங்காங், சோவியத் ரஷ்யா, மேற்கு ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளிலும் இவர் சென்று தனது நாதஸ்வர இசைக்கச்சேரியை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். அமெரிக்காவில் உள்ள வாசகர் காலேஜ் 1973ஆம் ஆண்டில் இவருக்கு “நாதஸ்வர ஆச்சாரியா” என்ற பட்டத்தை வழங்கியுள்ளது.
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நடைபெற்ற பல அகில உலக அரசு நிகழ்ச்சிகளிலும், இவரது நாதஸ்வர ஒலி பன்னாட்டவரையும் ஈர்த்தது. குறிப்பாக 1972இல் டெல்லியில் நடைபெற்ற இந்திய சுதந்திரதின வெள்ளி விழா – மத்திய அரசு நிகழ்ச்சி, டெல்லியில் நடைபெற்ற தென் ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு முதலிய அகில உலக அரசியல் தலைவர்கள், அறிஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் எல்லாம் ஷேக் சின்ன மௌலானாவின் நாதஸ்வர இசை ஒலித்துள்ளது.


இசைக் கச்சேரி தவிர நாதஸ்வர இசை நுணுக்கங்களைப் பற்றிய கருத்தரங்குகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தலைமை ஏற்றுச் சிறப்பித்துள்ளார். தமிழ்நாடு அரசின் அரசு இசைக் கலைஞராகவும், திருவையாறு அரசு இசைக் கல்லூரியின் சிறப்புப் பேராசிரியராகவும் இவர் நியமிக்கப்பட்டார்.

தான் வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் “சாரதா நாதஸ்வர சங்கீத ஆஸ்ரமம்” என்ற அமைப்பினை நிறுவி நாதஸ்வர இசைப்பயிற்சியையும் கர்நாடக இசையின் நுணுக்கங்களையும் இளம் தலைமுறையினருக்குக் கற்பித்து வந்தார்.
இன்றும் இவரது பேரர்கள், எஸ்.காசிம், எஸ்.பாபு ஆகியோர் நாதஸ்வர இசைக்கலையில் மிகவும் தேர்ச்சி பெற்று விளங்குகிறார்கள்.
ஷேக் சின்ன மெளலானாவுக்கு 1977இல் பத்மஸ்ரீ விருதினை மத்திய அரசும், 1976இல் கலைமாமணி விருதினைத் தமிழக அரசும் ‘’கானகலா ப்ரமபூர்ண” என்ற விருதினை ஆந்திர சங்கீத நாடக அகாடமியும், மற்றும் ஆந்திர பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் அளித்தும் இவரை பாராட்டியுள்ளன. நாதஸ்வர இசை உலகில் தனக்கென தனித்தொரு இடத்தைத் தக்கவைத்திருந்த ஷேக் சின்ன மௌலானா, 1999 ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி இயற்கை எய்தினார்.
