அன்று வேடிக்கையாளன் இன்று சாதனையாளன்

0
full

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்க வேண்டும். படிக்கும் பருவத்திலிருந்தே நான் என்னவாக ஆக வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான பயணத்தை தொடர்பவர்கள் என்றால் விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இங்குப் பலருக்கு லட்சியமே கிடையாது என்பது தான் உண்மை. ஒரு இலக்கை நோக்கி ஓடுவதற்கான வாழ்க்கை எப்போதும் சுயநலத்தோடு தான் இருக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அதேபோன்று வாழ்க்கையில் இலட்சியத்தை நிர்ணயிக்காமல் வாழ்க்கையின் ஓட்டத்திற்கு ஓடிக் கொண்டு இருப்பது என்பது இங்கு பலருக்கும் பழக்கப்பட்ட ஒன்று தான்.

அப்படி லட்சியம் என்பது இல்லாமல் இருந்தவர் ஒரு கூடை பந்து மைதானத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர் இன்று இந்தியாவிற்காக விளையாடும் அளவிற்கு வளர்ந்த சில சுவாரஸ்யமான தகவல்களைத் தான் “நம்ம திருச்சி” பதிவு செய்கிறது.

poster

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள மின்னத்தம்பட்டி கிராமத்துல பிறந்தவரு தான் ரமேஷ்(23).நம்ம திருச்சி இதழுக்காக அவரிடம் பேசிய போது…‘‘அப்பா, அம்மா எல்லாரும் விவசாயம் தான், கூட பிறந்தவர்கள் இரண்டு அண்ணன் ஒருவர் மேஸ்திரி, மற்றொருவர் எலக்ட்ரீசியன். நான் 3வது படித்துக் கொண்டிருக்கும் போது சைக்கிள் ஓட்டிகிட்டு போனபோது லாரியின் குறுக்கே விழுந்து என்னுடைய இடது காலை முழுமையாக இழந்தேன்.

அன்று முதல் ஒரு கால் இல்லாதது மனதளவில் எனக்குக் காயத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் எங்க கிராமத்து பசங்களோடு எல்லா விளையாட்டையும் விளையாடுவேன். அது மட்டும் தான் என்னை சற்று மன உறுதி உள்ள ஆளாக மாற்றியது. கிரிக்கெட், ஓட்டபந்தயம் என்று என்னை நான் எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள விரும்பினேன்.
இப்படியே காலம் ஓடியது பள்ளி படிப்பை முடித்தேன். அதன்பின் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சியை முடித்தேன்.

கடந்த 2016ல் தான் இளங்கலை உயிரியல் வேதியல் படித்து முடித்தேன். 2014ல் திருச்சி மாவட்ட ஊனமுற்றவர்கள் சங்க செயலாளர் மாரிகண்ணு அறிமுகமானார். அதன்பின் அவா் மூலம் ஊனமுற்றவா்களுக்கான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
அதற்கு முன்னதாகவே எனக்கு கூடைப்பந்தில் ஆர்வம் என்பதால் கல்லூரியில் நான் பயிற்சி எடுத்து வந்தேன். என்னுடைய வாழ்க்கை கல்லூரிக்குள்ளே முடிந்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

முதன் முதலாக 2014ல் சென்னை ஈகிள் கிளப்பில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியை நான் மைதானத்தில் அமர்ந்து ரசித்து வந்தேன். எனக்கு அந்த கிளப்பில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதை நான் பயன்படுத்தி கொண்டு திறமையை காட்டினேன். ஊனமுற்றோர் கூடைப்பந்து விளையாட்டு அணியில் இணைந்தேன். அவர்கள் நடத்திய எல்லாத் தேர்வு போட்டியிலும் வெற்றி பெற்று சிறந்த முதல் 5 வீரா்களில் ஒருவராக நான் தேர்வு செய்யப்பட்டு வேலூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஊனமுற்றோர் கூடைப்பந்து போட்டியில் விளையாடி தங்கப்பதக்கம் வென்றோம்.

ukr

அடுத்ததாக தமிழ்நாடு அளவில் எனக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. தேசிய அளவிலான உடல் ஊனமுற்றோருக்கான கூடைப்பந்து போட்டியானது சென்னையில் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு சார்பாக விளையாடினேன். அதில் 3வது இடத்தைப் பிடித்தோம்.

அதனைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் 3வது இடத்தைப் பிடித்தோம். மீண்டும் சென்னையில் நடைபெற்ற தேசிய போட்டியில் 3வது இடத்தை பிடித்தோம். இறுதியாக ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டேன்.

அந்தப்போட்டியில் 2ஆம் இடத்தைப் பிடித்து வெள்ளி பதக்கத்தை வென்றோம். தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் தொடர்ந்து எனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டே இருந்தேன். அது எனக்கு இந்திய அளவில் விளையாட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. இந்திய அளவில் விளையாட ஒவ்வொரு வருடமும் தேர்வு நடைபெறும். முதன் முதலாக 2017 மார்ச்சில் இந்தோனேசியாவில் ஊனமுற்றவர்களுக்கான சர்வதேச கூடைப் பந்து போட்டி நடைபெற்றது.

இந்தியா சார்பில் விளையாடி 3வது இடத்தை பிடித்தோம். வருகின்ற 2018 ஆம் ஆண்டிற்கான ஆசிய பாரா ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற உள்ளது. அதிலும் கலந்து கொண்டு எனது திறமையினை வெளிப்படுத்துவேன்.

எனக்கு உடல் ஊனம் என்பது சிறுவயதில் காயமாக, பாரமாக இருந்தாலும், எனக்குள் இருந்த தன்னம்பிக்கை முன்னேற வேண்டும், வளர வேண்டும், சாதனை புரிய வேண்டும் என்ற உத்வேகத்தை எனக்கு அளித்தது.

யாரும் சாதனையாளராக மாற முடியும் என்பதற்கு நானும் ஒரு உதாரணம். பல வகைகளில் எனக்கு ஊக்கம் அளித்த, உற்சாகப்படுத்திய என் நண்பர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், என் குடும்பத்தினர், அனைவரையும் எந்நாளும் என்னால் மறக்க இயலாது” என்றார்.

-கிறிஸ்

half 1

Leave A Reply

Your email address will not be published.