தனது சொற்பொழிவால் மக்கள் மனதை ஈர்த்த பேராசிரியர் இரா.இராதாகிருஷ்ணன்

0
D1

பட்டிமன்ற இலக்கிய வடிவத்தின் வாயிலாக கம்பன் காவியத்தையும் பெரியபுராணத்தின் கருத்துகளையும் தமிழகம் எங்கும் மேடைகளில் பரப்பிய பேரா.இராதாகிருஷ்ணன் கும்பகோணத்தில் ஒரு சிற்றூரில் பிறந்தவர். ஆனாலும் அவர் வாழ்ந்தது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தான். இவரது தந்தை இராமச்சந்திரஅய்யர் காஞ்சி சங்கரமடம் மகாபெரியவரிடம் கஜானா பொறுப்பு வகித்தவர்.

கும்பகோணம் கல்லூரியில் முதலில் பி.ஏ. பெளதீகப்படிப்பும், பின்னர் பி.ஏ. தமிழ் இலக்கியமும் பயின்றார். கும்பகோணம் டவுன் உயர்நிலைப்பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக சிலஆண்டுகள் பணியாற்றினார். 1951 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரியில் டூயூட்டராக 3 ஆண்டுகள் பணியாற்றி பின்பு விரிவுரையாளராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் விளங்கினார். தமிழ் இலக்கியத்தின் மீது கொண்ட ஈடுபாட்டால் நாவன்மை மிக்க பேச்சாளராகத் திகழ்ந்தவர். அக்காலத்தில் தவத்திரு குன்றக்குடிஅடிகளார் அறிமுகம் செய்த பட்டிமன்றக் கலையை இம்மாவட்டத்தில் வேரூன்றி வளரச்செய்த பிதாமகராகவும் இவரே திகழ்ந்தார்.

கி.வா.ஜகந்நாதனை மானசீகக் குருவாக ஏற்று அவர் வழியில் இலக்கியத்தில் சாதனை படைத்தவர். திருமுருகாற்றுப்படைக்கு இவர் எழுதிய உரை அறிஞர் பெருமக்களால் இன்றளவும் போற்றப்படுகிறது. கம்பன் காவியத்தைப் புதியமுறையில் அணுகிப் புதியகோணங்களில் உரை கூறியவர். காந்தியநெறியில் வாழ்ந்தவர். சாதிவேறுபாடுகளால் மனிதர்கள் பிளவுபடக் கூடாது என்ற மேலான சமூக ஈடுபாடு கொண்டவர். அதற்கேற்பத்தான் பிராமணராயிருந்தும் தன் இல்லத்தில் அரிஜன மாணவர்களும் தங்கிப்படிக்க இடமும், பொருளும் அளித்து உதவியவர். தான் ஈட்டியபொருள் அனைத்தையும் எளியவர்களுக்குக் கொடுத்து உதவிய பெருமகனார்.

D2
N2

திருச்சியில் 1955ஆம் ஆண்டு சுவாமி சித்பவானந்தர் தலைமையில் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் தொடக்கி வைக்க, சைவப் பெருநாவலர் திரு.அ.நடேச முதலியார் நிகழ்த்திய உரையுடன் திருக்குறள் கழகத்தை உருவாக்கித் தமிழ்ப் பேராசிரியர்களையும், தமிழ்க் கவிஞர்கள், புலவர்களையும் அழைத்து வாரத்தில் இரண்டு நாள்கள், தமிழ் இலக்கியங்களைப் பற்றிய சொற்பொழிவுகளை நிகழ்த்தச் செய்தவர்.
கம்பராமாயணம், தவிர வில்லிபாரதம், பெரியபுராணம், கந்தபுராணம், திருவிளையாடல் புராணம், சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், சிந்தாமணி, சைவசித்தாந்தம், சைவத் திருமுறைகள், அருளிச் செயல் வியாக்கியானங்கள், அருணகிரிநாதர் நூல்கள், பட்டினத்தார், தாயுமானவர், பாடல்கள்,திருவருட்பா, பாரதியார் கவிதைகள் இவற்றின் சொற்சுவை, பொருட்சுவை, மற்றும் நயவுரைகளை மிகவும் இயல்பாக, விளையாட்டாக எடுத்துரைப்பதில் கைதேர்ந்தவர்.

இவர் தம் பேச்சுவன்மையில் ஈர்க்கப்பட்டு இவரால் பயிற்றுவிக்கப்பட்ட பலர் இன்று தமிழகத்தின் பட்டிமன்ற மேடைகளில் வெற்றிக்கொடி நாட்டி வருகின்றார்கள். நாவுக்கரசர் சோ.சத்தியசீலன், அ.வ.ராஜகோபாலன், புலவர் இராமமூர்த்தி, புலவர் திருவேங்கடம், முனைவர் சேகர், புலவர்.மாது இவர்களில் சிலர். புலவர்.மாது, பேரா.இராதாகிருஷ்ணன் அவர்களின் மகன் ஆவார். ஒருமுறை சென்னை கம்பன் கழகத்தில் அவர் பேசப் போகும்போது அவரது தோற்றத்தை வைத்து இவர் என்ன பேசிவிடப் போகிறார் என அங்கிருந்த நீதிபதிகள், அமைச்சர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள், பேராசிரியர்கள் அனைவரும் ஆர்வமின்றி மேடையை பார்க்காமல் அங்கும்இங்கும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஓர் அரை மணி நேரம்தான் அத்தனை பேரும் மகிழ்ச்சியுடனும் ஆரவாரத்துடனும், கைத்தட்டி நிறைவாக எழுந்து நின்று பாராட்டியதை ஓரிரு நாட்களில் ஆனந்தவிகடன் வார இதழ் இவரது புகைப்படத்துடன் வெளியிட்டது.

திருச்சி மட்டுமல்லாது இராமேஸ்வரம், புதுக்கோட்டை, வேலூர், குளித்தலை, மும்பை, கொல்கத்தா, ஸ்ரீலங்கா முதலிய நாடுகளில் தனது சொற்பொழிவினால் மக்கள் மனதை ஈர்த்தவர். ஆனால் அவரது உரையின் ஒலிப்பேழைகள் உலகெங்கும் உள்ளன.

N3

Leave A Reply

Your email address will not be published.