கடின உழைப்பிருந்தால் ஜெயிக்கலாம்-‘வி.எஸ்.டி. பாபு’

0
1 full

‘வாழ்க்கையில எல்லாருக்குமே சொல்றதுக்குன்னு ஒரு சோகக் கதை இருக்கும். ஆனால், ஒருசிலர்க்கு மட்டும் தான் தன்னோட வெற்றிக் கதையை சொல்ல வாய்ப்பு கிடைக்கும்’… அப்படி ஒரு மெக்கானிக்கா தன்னோட வாழ்க்கையை ஆரம்பிச்சி, இன்னைக்கு ஒரு பெரிய தொழிலதிபரா வளர்ந்து இருப்பவர் தான் ‘விஎஸ்டி பாபு’ என்றழைக்கப்படும் ‘சந்திரபாபு’…

திருச்சியிலிருந்து சென்னை செல்லும் பைபாஸில் சங்கிலியாண்டபுரத்தில் இருக்கிறது அவருடைய ஷோரூம்களான ‘கவி பர்னிச்சர்’ மற்றும் ‘கவி அக்ரோ ஏஜென்ஸி’…

திருச்சியிலே இல்லாத அளவிற்கு 20 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்டமாக பரந்து விரிந்திருக்கும் கவி பர்னிச்சரில், மொத்தம் மூன்று தளங்கள் இருக்கின்றன. அதில் தரைத்தளத்தில் 10 ஆயிரம் சதுர அடியில் கட்டில், பீரோ, டிரஸ்ஸிங் டேபிள், டைனிங் டேபிள் போன்றவைகளும், முதல் தளத்தில் உள்ள 10 ஆயிரம் சதுர அடியில் வெறும் ஷோஃபாக்கள் மட்டும் விதவிதமான டிசைன்களில் இருக்கின்றன. இரண்டாவது தளத்தில் கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்டவர்களைக் கொண்டு பர்னிச்சர்கள் சொந்தமாக தயாரிக்கப்படுகின்றன.

2 full

இதுமட்டுமல்லாமல், கவி ஆக்ரோ ஏஜென்ஸிக்காக பவர் டில்லர் மெஷின்கள், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், அவற்றுக்கு தேவையான உதிரிபாகங்கள் என அதை ஒரு 10 ஆயிரம் சதுர அடிக்கு குவித்து வைத்து மலைக்க வைத்திருக்கிறார் கவி பர்னிச்சர் மற்றும் கவி அக்ரோ ஏஜென்ஸியை நடத்தி வரும் ‘விஎஸ்டி பாபு’ என்றழைக்கப்படும் ‘சந்திரபாபு’.

கொளுத்தும் உச்சிவேளையில், ஒரு ஏ.சி அறைக்குள் நடந்தது நமக்கும் அவருக்குமான சந்திப்பு….

உங்களைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்க?
“என்னோட பேர் சந்திரபாபு. வயசு 57 ஆகுது. திருச்சி சின்னக்கடைத் தெரு தான் பூர்வீகம். அப்பா நாராயணன், அம்மா வீரம்மாள். நாங்க பாரம்பரியமா வசதியான குடும்பம் எல்லாம் இல்லை. எங்க அம்மா, அப்பா பொட்டிக்கடை, டீக்கடை தான் வச்சிருந்தாங்க. எனக்கு மொத்தம் அண்ணன், தம்பிங்கன்னு ஏழு பேர்; அக்கா, தங்கச்சின்னு ரெண்டு பேர். மொத்தம் எங்க வீட்டுல ஒன்பது பேர். கஷ்டப்பட்டு தான் எங்க அம்மா, அப்பா எங்க எல்லாத்தையும் வளர்த்தாங்க. இப்போ, நான் ஓரளவுக்கு பிசினஸ் செஞ்சி நல்ல நிலைமைக்கு வந்துட்டேன். கல்யாணமாகி எனக்கும் ரெண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க. ஏதோ கடவுள் புண்ணியத்துல வாழ்க்கை நல்லா போய்க்கிட்டு இருக்கு”.

உங்களோட ஆரம்ப கால வாழ்க்கை எப்படி?
“வீட்ல மொத்தம் ஒன்பது புள்ளைங்களை வச்சிக்கிட்டு எங்க அம்மா, அப்பா ரொம்ப கஷ்டப்பட்டாங்க. வீட்ல எப்பவுமே கஞ்சி தான். வீட்ல படுக்க கூட இடம் இருக்காது. தெருவுல தான் படுத்து தூங்குவோம். எனக்கு படிப்பு அவ்வளவா ஏறலை. 7-வது வரைக்கும் தான் படிச்சிருக்கேன். அதுவரைக்கும் எப்படி படிச்சேன்னு எனக்கே தெரியலை. ஒருகட்டத்துல எனக்கு படிப்பு வரலைன்னு, என்னோட அம்மா என்னை ஒரு லாரி பட்டறையில வேலைக்கு சேர்த்து விட்டாங்க. அங்க அப்படியே டீ, காபி வாங்கி குடுத்துக்கிட்டு தொழில் கத்துக்கிட்டேன்”.

பாபு என்கிற பெயருக்கு முன்னாடி ‘விஎஸ்டி’ என்கிற அடைமொழி வந்தது எப்படி?
“1979-ல் விஎஸ்டி மோட்டார்ஸில் வேலைக்கு சேர்ந்தேன். 6 மாசமா சம்பளமே இல்லை. 6 மாசத்துக்கு அப்புறமா 35 ரூபாய் சம்பளம் கொடுத்தாங்க. அப்படியே 1980-ல் மாசம் 200 ரூபாய் சம்பளம் கிடைச்சது. 1984 டைம்ல பவர் டில்லர் செக்‌ஷன்ல வேலை பார்க்க சொன்னாங்க. அப்போ, பவர் டில்லர் மெஷினை வயலுக்கு எடுத்துட்டு போய், அதை டெமோ செஞ்சு காட்டி சேல்ஸ் பண்ணுவேன். அப்படி நான் விஎஸ்டி மோட்டார்ஸ்ல கிட்டத்தட்ட 1991 வரைக்கும் வேலை பார்த்தேன். நான் விஎஸ்டி மோட்டார்ஸ்ல வேலை பார்த்ததால தான் என்னை எல்லாரும் விஎஸ்டி பாபுன்னு சொல்லி கூப்புடுறாங்க”.

சொந்தத் தொழில் ஐடியா எப்படி வந்துச்சி?
“அந்த டைம்ல ரெடிமேட் துணிக்கு மக்கள் கிட்ட அதிகமான மவுசு இருந்துச்சி. அப்போ, என்னோட நண்பர் ஒருத்தர் கொடுத்த யோசனையால, பாம்பே-க்கு போய் துணி வாங்கிட்டு வந்து தைச்சி வித்தோம். அது சரியா ஒர்க்கவுட் ஆகலை. அதுல கிட்டத்தட்ட 40 ஆயிரம் வரை நஷ்டமாயிடுச்சி. அதுக்கப்புறமா தான், விஎஸ்டி-ல வேலை பார்த்த அனுபவத்துல பவர் டில்லர்க்கு சர்வீஸ் செண்டர் வச்சேன். இரவு பகல் பார்க்காமல் நான் செஞ்ச கடின உழைப்பால் சில வருடங்களிலேயே ‘கவி பவர் டில்லர்’ன்னு என்னோட மகள் பெயரில் பவர் டில்லர் மெஷினை வெளிநாடுகள்ல இருந்து தயார் செஞ்சு இங்க டீலர் புடிச்சி விற்க ஆரம்பிச்சேன். அப்படி தான் என்னோட வளர்ச்சி ஆரம்பமானது”.

சொந்தமா பவர் டில்லர் மெஷின் எப்படி சாத்தியம் ஆச்சு?
“பவர் டில்லர் மெஷினுக்கு டீலர் தேவைன்னு பேப்பர்ல விளம்பரம் பார்த்தேன். அதை கொஞ்ச நாள் வாங்கி விற்பனை செஞ்சிக்கிட்டு இருந்தேன். அதுக்கப்புறமா சீனாவுக்கு போய், ஒரு கம்பெனியை நேர்ல பார்த்து, கவி பவர் டில்லர்ன்னு பேர் போட்டு செஞ்சி கொடுங்கன்னு சொல்லி இறக்குமதி செஞ்சி இந்தியா முழுக்க விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். என்னோட மெஷினுக்கு இந்தியா முழுக்க பல இடங்களில் இருந்து நல்ல வரவேற்பு கிடைச்சது. கேரளா, ஆந்திரா, ஒரிசான்னு பல இடங்கள்ல ஆபீஸ் போட்டு பவர் டில்லர் மெஷின்களை விற்பனை செஞ்சிக்கிட்டு வர்றேன். மழை பேயாததால் கொஞ்சம் பிஸ்னஸ் டல் ஆச்சு. இப்போ, ஒன்னும் பிரச்சினையில்லை சிறப்பா போய்க்கிட்டு இருக்கு”.

கவி பர்னிச்சர் எப்படி உருவானது?
பவர் டில்லர் விஷயமா சீனா போன சமயத்துல தான் அங்க பர்னிச்சர் மேல கவனம் வந்துச்சி. எக்கச்சக்கமான பர்னிச்சர்கள், விதவிதமான டிசைகள்ல இருந்துச்சி. ஒரு கண்டெய்னர்ல பர்னிச்சர் இறக்கி பார்ப்போம்னு செஞ்சேன். அதுக்கு நல்ல வரவேற்பு இருந்துச்சி. அப்படியே தொடர்ந்து செய்யப் போகத் தான் இன்னைக்கு கவி பர்னிச்சர் இப்படி வளர்ந்து நிக்குது. 2014-ல் பர்னிச்சரை இறக்கி பிசினஸ் பண்ண ஆரம்பிச்சேன். இப்போவரைக்கும் வியாபாரம் சிறப்பா போய்க்கிட்டு இருக்கு. இன்னைக்கு என்கிட்ட கிட்டத்தட்ட 40 பேர் வேலை பாக்குறாங்க”.

சீனாவுல இருந்து பர்னிச்சர் மற்றும் பவர் டில்லர் மெஷின்களை இறக்குமதி செய்றீங்க. அதோட குவாலிட்டி?
அதாவது சீனான்னு சொன்னாலே டியூப்ளிகேட்ன்னு ஒரு பிம்பம் இங்க உருவாகிடுச்சி. அங்க பைசாவுக்கு ஏத்த மாதிரி நல்ல தரமான பொருளும் கிடைக்குது. நான் எப்பவுமே எனக்கு பிடிச்சிருந்தா, தரமானதா இருந்தா மட்டும் தான் ஆர்டர் போட்டு வரவைப்பேன். அப்படி எனக்கு ஆரம்பத்துல வந்த ஷோஃபாக்கள் கொஞ்சம் குவாலிட்டி கம்மியா இருந்துச்சி. இப்போ, நானே ஷோஃபா, மரக்கட்டில், டைனிங் டேபிள், டிரஸ்ஸிங் டேபிள்ன்னு சொந்தமாக செய்ய ஆரம்பிச்சிட்டோம். ஆர்டர் கொடுக்குறவங்களுக்கு பிடிச்ச டிசைன், அளவுகளிலும் செஞ்சு தர்றோம். மற்ற பொருள் எல்லாம் வெளியில இருந்து வாங்குறோம். எங்ககிட்ட வாங்குற பர்னிச்சர்களுக்கு சர்வீஸூம் செஞ்சு தரோம். அதனால, எங்களை தேடி நிறைய பேர் வர்றாங்க”.

படிக்காம விட்டுட்டோமேன்னு என்னைக்காவது வருத்தப்பட்டு இருக்கீங்களா?
படிக்காம போய்ட்டோமேன்னு நான் என்னைக்குமே வருத்தப்பட்டது கிடையாது. நான் சரியா படிக்கலை. ஆனா, என்னோட ரெண்டு பொண்ணுங்களையும் நல்லா படிக்க வச்சிருக்கேன். பெரிய பொண்ணு சுஜிதா எம்.டி முடிச்சிட்டா. சின்னப்பொண்ணு கவிதா ஐ.ஏ.எஸ்க்கு படிச்சிக்கிட்டு இருக்கா. அதுமட்டுமில்லாம, யாராவது படிக்கணும்னு சொல்லி என்கிட்ட உதவி கேட்டு வர்றவங்களுக்கும் ஏதாவது செஞ்சிக்கிட்டு தான் இருக்கேன்.

கடந்த கால வாழ்க்கையை திரும்பி பார்க்கையில் என்ன தோணுது?
நான் சின்ன வயசுலயே பீச்ல சுண்டல் வித்தாலும் பரவாயில்லை. ஆனா, சொந்தமாகத் தான் பிசினஸ் செய்யணும்னு நெனச்சேன். ஆனா, இன்னைக்கு நான் எதிர்பார்க்காத அளவுக்கு எனக்கு எல்லாம் அமைஞ்சிருக்கு. என் மனைவியோட அக்கா பையன் அருள் தான் முழுக்க என் கூட இருந்து பிசினஸ்க்கு உதவி பண்றார். அதுமட்டுமில்லாம குடும்பத்துல மனைவி மற்றும் மகள்களோட சப்போர்ட், கொஞ்சம் கடின உழைப்பு இருந்தா வாழ்க்கையில எல்லாம் நல்லபடியா கிடைக்கும்கிறது தான் திரும்பி பார்க்கையில தோணுது.

-நவீன் இளங்கோவன்

3 half

Leave A Reply

Your email address will not be published.