திராவிட இயங்கங்களுக்கு வேராக இருந்தவர்-என். சங்கரன்

0
gif 1

திருச்சியின் அடையாளம். தமிழகத்தின் இரண்டாம் தலைநகரான ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் பல அடையாளங்களுடன் நிமிர்ந்து நின்றுள்ளது. இங்கே வாழ்ந்தவர்கள் ஏராளம். மக்கள் மனதில் நிலைத்து நின்ற பலர் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டங்களின் அடையாளங்களாக விளங்கினார்கள். அந்த அடையாளங்களை நம்ம திருச்சி வார இதழ் மூலம் திரும்பிப் பார்த்து வருகிறோம் அந்த வரிசையில்….

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திராவிட இயக்கங்களின் வேராக இருந்தவர்களில் என்.சங்கரன் குறிப்பிடத்தக்கவர். 1904 ஆம் ஆண்டு நடேசன் சின்னம்மாள் தம்பதிக்கு திருச்சிராப்பள்ளியில் பிறந்த இவர் உயர்நிலைப்பள்ளி முடித்து விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார்.
1903 முதல் நீதிக்கட்சியில் இணைந்து அக்கட்சியின் பி.டி.ராஜன், பொப்பிலி அரசர் பிட்டி தியாகராயர் ஆகியவர்களுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். தொடர்ந்து தந்தை பெரியாரின் அன்புக்குரியவராகி சுயமரியாதை இயக்கத்தை வளர்ப்பதில் பெரும் பங்காற்றினார்.

gif 4

தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக விழிப்புணர்வு கூட்டங்கள், சமபந்தி போஜனம் போன்ற நிகழ்ச்சிகளை ப.ஜீவானந்தம், நீலாவதி அம்மையார், பட்டுக்கோட்டை அழகிரிசாமி, அறிஞர் அண்ணா ஆகியோரைக் கொண்டு தொடர்ந்து நடத்தியவர். இவர் நடத்திய Sankaran Progressive Tutorials என்ற பள்ளியில் பாவேந்தர், நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன், எம்.எஸ்.வெங்கடாஜலம் முதலியோர் பணியாற்றியுள்ளார்கள்.
1935 இல் தந்தை பெரியார் தலைமையில் சீர்த்திருந்த மணம் செய்து கொண்டு திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளராகவும் தொண்டாற்றி 1949-ல் திராவிட முன்னேற்றக் கழகம் உருவாகிட உழைத்தவர்களில் சங்கரன் சிறப்பிடம் பெற்றவர். இம்மாவட்டத்தில் இவரது இல்லமே அக்காலத்தில் அறிஞர் அண்ணா, கலைஞர், நாவலர் முதலிய தி.மு.க தலைவர்களின் தங்கும் இருப்பிடமாக திகழ்ந்துள்ளது.

gif 3

1950-இல் முதல் மாவட்ட செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். அறிஞர் அண்ணா ஈ.வி.கே.சம்பத், பாவேந்தர் பாரதிதாசன், தியாகராஜ பாகவதர், ப.ஜீவானந்தம் முதலியவர்களோடு நெருங்கிய நட்பு பூண்டிருந்தார். பொதுவுடமை இயக்கத்தலைவர் டாங்கே, பி. இராமமூர்த்தி, ப.ஜீவானந்தம் ஆகியோரும் இவர் இல்லத்திலிருந்து கட்சிப் பணியாற்றியுள்ளனர். காங்கிரஸ் சோஸலிஸ்ட் கட்சி இம்மாவட்டத்தில் உருவாகிட சங்கரன் அவர்கள் அயராது உழைத்துள்ளார். 15 ஆண்டுகள் இவர் நகரமன்ற உறுப்பினராக இவரது பகுதியில் பல அரிய பணிகளை ஆற்றி வந்தார். இவர் வாழ்ந்த தெருவிற்கு சங்கரன் சாலை என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. சீத்தாலெட்சுமிராமசாமி கல்லூரியின் வளர்ச்சியிலும் இவரின் பங்கு அளப்பரியது. சங்கரன் அவர்களின் இளவல் சாம்ப மூர்த்தியும் திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டுள்ளார். சங்கரனது மகன் என்.எஸ்.அபேதானந்தம் காங்கிரஸ் இயக்கத்தில் முக்கிய தலைவராக உள்ளார்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.