
திருச்சியின் அடையாளம். தமிழகத்தின் இரண்டாம் தலைநகரான ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் பல அடையாளங்களுடன் நிமிர்ந்து நின்றுள்ளது. இங்கே வாழ்ந்தவர்கள் ஏராளம். மக்கள் மனதில் நிலைத்து நின்ற பலர் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டங்களின் அடையாளங்களாக விளங்கினார்கள். அந்த அடையாளங்களை நம்ம திருச்சி வார இதழ் மூலம் திரும்பிப் பார்த்து வருகிறோம் அந்த வரிசையில்….
தமிழ் இலக்கிய வரலாற்றில் பழமைக்கும் புதுமைக்கும் ஒரு பாலமாக விளங்கியவர்
கி.வா.ஜகந்நாதன் அவர்கள்.
1906ஆம் ஆண்டில் கிருஷ்ணராயபுரம் கிராமத்தில் வாசுதேவ அய்யரின் மகனாகப் பிறந்தவர். இளமையிலேயே தமிழில் இனிய கவிதைகள் இயற்றும் திறன் பெற்றிருந்தார். குளித்தலையில் உயர்நிலைக் கல்வியைக் கற்றார். சிறுவயதில் சில காலம் மோகனூரில் இவர் குடும்பம் தங்கியிருந்த போது அங்குள்ள முருகன் கோவிலுக்கு கி.வா.ஜ. அடிக்கடி செல்வார். காந்தமலை முருகன் மீது அழகிய பாடல்கள் இயற்றியுள்ளார்.
சந்நியாசி வாழ்க்கை மேற்கொள்ள விரும்பிச் சென்ற இவரை மகாமகோபாத்தியாய உ.வே.சாமிநாதரிடம் தமிழ் கற்கச் செல்லுமாறு இவரது குரு இவரைப் பணித்தார். இதனால் இவர் சென்னை சென்று உ.வே.சாவிடம் தலைமாணாக்கராகத் தமிழ் இலக்கண இலக்கியங்களையும், சங்க இலக்கியங்களையும் சிற்றிலக்கியங்களையும் கசடறக் கற்றார்.
உ.வே.சாவின் தமிழ்ப் புலமைக்கும் ஆற்றலுக்கும் ஏற்றம் தரும் வண்ணம் அவரது மாணவர் கி.வா.ஜ. பிற்காலத்தில் தம் குருவின் புகழை நிலைநிறுத்தினார். கி.வா.ஜ. அவர்கள் சிறிது காலம் ஒரு பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்துள்ளார். பின்னர் 1932ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட கலைமகள் இலக்கிய இதழுக்கு உ.வே.சாவின் சிபாரிசினால் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 50 ஆண்டுகள் கலைமகள் இதழை திறம்பட நடத்தியுள்ளார்.


கி.வா.ஜ. அவர்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட தமிழ்நூல்களை எழுதியுள்ளார். திருமுறைகள், திருப்புகழ் போன்றவற்றோடு திருக்குறள் விளக்கம், கம்பராமாயண விளக்கக்கதைகள் மற்றும் சிறுகதைகள், பழமொழிகள், நாடோடிப் பாடல்கள், சிலேடைப் பாடல்கள் முதலியவற்றை எளியமுறையிலும் சிறுவர்களுக்கு ஏற்றவகையிலும் பல நூல்களாக எழுதியுள்ளார். மிகச்சிறந்த சொற்பொழிவாளராகவும் கி.வா.ஜ. விளங்கினார்.

திருமுறைகளையும், திருப்புகழையும் எளிய இனிய சொற்பொழிவுகளாக ஆற்றியுள்ளார். பள்ளி, கல்லூரி மற்றும் பல்வேறு இலக்கிய அமைப்புகளிலும் பங்கு கொண்டு தனது நாவன்மை மிக்க பேச்சால் எல்லோரையும் கவர்ந்துள்ளார். தமிழகம் மட்டுமின்றி, பிரான்ஸ், ஜெர்மனி, லண்டன், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் இவர் சென்று தமிழையும், இலக்கியத்தையும் போற்றி பேசியுள்ளார். பிரான்சில் நடந்த இரண்டாவது உலகத் தமிழ்மாநாடு சிறப்புற நடைபெறச் செய்ததில் இவருக்கும் பங்குண்டு.
வாகீசக்கலாநிதி, கலைமாமணி, தமிழ்க்கவிபூஷணம் போன்ற பட்டங்கள் இவரது சான்றாண்மையை விளக்கும் வண்ணம் தரப்பட்டன. தமிழ் மூதறிஞராகவும், ஆன்மீக இலக்கியச் சொற்பொழிவாளராகவும், திகழ்ந்த கி.வா.ஜகந்நாதன் சுமார் 88 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து தமிழ்த்தொண்டு புரிந்துள்ளார். 1994ஆம் ஆண்டில் கி.வா.ஜ. இயற்கை எய்தினார்.
