சார் சென்னை, சென்னை…, வாங்க சார்… வாங்க சார்…

இரவில் மட்டும் கேட்கும் ஒரு ஏழையின் குரல்

0
gif 1

சார் சென்னைக்கு போறீங்களா, ஏசி ஸ்லீப்பா் வண்டி இருக்கு, சாதாரண ஸ்லீப்பா் வண்டி தயாரா இருக்கு காலையில 6 மணிக்கு சென்னைக்கு போய்விடும், டிக்கெட் 150 மட்டும் தான், வாங்க சார் ஒரு டிக்கெட்டுக்காக தான் காத்துகிட்டு இருக்கு நீங்க வந்துட்டா பஸ் கிளம்பிடும் என்ற இந்த வசனங்களை திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் தினமும் இரவு கேட்டு கொண்டே இருக்க முடியும்,

இந்த கூச்சலுடன் அணுகும் போது பல பயணிகளுக்கு அது எரிச்சலை உண்டாக்கும், பலர் அதை பெரிதாக எடுத்துகொள்ள மாட்டார்கள். ஒருசிலர் கடிந்துகொண்டு செல்வார்கள்.

இதெல்லாம் ஒருவேலையா என்று என்னலாம், அப்படிபட்ட இந்த தொழிலை நம்பி வாழும் ஒரு ஏழையின் சராசரி வாழ்க்கையை பற்றியது தான் இந்த கட்டுரை…

gif 3

அவர் பெயர் கருப்பையா, இனி அவர் நம்மிடம்..
எனக்கு சொந்த ஊர் திருச்சி தான், வீட்ல படிக்க வைக்க ஆள் இல்ல அதனால 8ஆம் வகுப்போடு படிப்ப நிறுத்திகிட்டேன், எனக்கு 14 வயசு இருக்கும் அப்ப இந்த தொழிலுக்கு வந்தேன், காலையில 9 மணிக்கு போனா மாலை 6 மணி வரைக்கும் தனியார் பேருந்துகளுக்கு பயணிகளை பிடித்து கொடுக்கும் வேலைதான்,

நான் இந்த தொழிலுக்கு வந்தபோது எனக்கு ஒருசீட் பிடிச்சு கொடுத்து 1 ரூபாய் கிடைக்கும், அது கொஞ்சம் கொஞ்சமா 5 ரூபாய் ஆச்சு, இப்ப 10 ரூபாய் ஆய்டுச்சு. ஒரு நாளைக்கு காலை, இரவு என்று பணியை செய்தால் மட்டுமே ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 500 ரூபாய் கிடைக்கும், அதுவும் ஒருசில நாட்கள்ல 50 ரூபாயோடு வீட்டிற்க்கு சென்றுள்ளேன்.

பணி செய்யும் இடங்களில்…
இந்த தொழிலில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும், நாம ஒருத்தர் கிட்ட சார் நீங்க சென்னையானு கேட்டு உறுதி செய்து அவரை அழைத்து கொண்டு நமக்குனு உரிய பேருந்துக்கு கூட்டிகிட்டு போனா நான் இங்க 300 ரூபாய்னு டிக்கெட் போடுவேன், ஆன பக்கத்துலயே நின்னுகிட்டு 280, 250 னு கூவி பயணிகளை அவங்கபக்கம் இழுத்துக்குவாங்க ஒருசிலர் சண்டை போடுவாங்க அவங்க 250 சொல்ராங்க நீங்க என்னடானா 300 சொல்றீங்கனு இது ஒரு பிரச்சனை, அதை சமாளிச்சா பஸ்குள்ள உக்காந்துருக்கவங்க பஸ்ச எப்ப எடுப்பிங்கனு சத்தம் போடுவாங்க, இதெல்லாம் பத்தாதுனு இந்த போலீஸ்காரங்க நைட்ல வரும்போது என்னைய திருடனு சொல்லி கொண்டுபோய் உக்கார வச்சுருக்காங்க, அதுலயும் பல நேரங்களில் கத்தி சம்பாதித்த காசும் போய்டும். எங்களுக்குனு எந்த பாதுகாப்பும் கிடையாது சார், நாங்க எங்க சங்கம் எதுவும் ஆரம்பித்துவிட்டால் பேருந்து முதலாளிகளுக்கு பிரச்சனையாகி விடுவேமோ என்றே சும்மா கூடி நின்னு பேசினாகூட திட்டுவாங்க, அதுவும் நீ இல்லனா 100 பேரு இந்த வேலைக்கு வருவாங்கனு வேற சொல்லுவாங்க,

gif 4

அதுவும் இப்பலாம் கல்லூரி படிக்கும் மாணவா்கள் இரவு நேரங்களில் மட்டும் இங்கவந்து ஒரு நைட் வேலை பார்த்தா 300 முதல் 500 வரை காசு கிடைக்கிறதா சம்பாதிச்சுட்டு அவங்க போய்டுவாங்க. இதெல்லாம் தாண்டி நாங்க நடையா, நடந்து கெஞ்சி கூத்தாடி ஒரு டிக்கெட் ஏத்தி 100,200 கையில வைச்சுகிட்டு கொஞ்சம் பேருந்து நடைபாதையில் அமர்ந்து உக்கார்ந்தா திருடா்கள் ஒருபக்கம், கொஞ்சம் உடம்பு அசதியா இருக்குனு உக்காந்தா போதும் அவ்வளவு தான் பாக்கெட்ல என்ன இருக்கோ காணாமல் போய்டும், என்னுடைய பாக்கெட்டில் இருந்துகூட காசு திருடுபோய்ருக்கு, வெறும் கையோட வீட்டுக்கு போய்ருக்கேன் என்று கூறுகிறார்.

குடும்ப வாழ்க்கை…
1996ல் திருமணம் ஆச்சு இப்ப எனக்கு இரண்டு பையன், ஒரு பொண்ணு, பெரிய பையன் கார் மெக்கானிக்கு வேலைக்கு போறாரு வாரம் 500 ரூபாய் கூலி வாங்கிகிட்டு இருக்காரு, அடுத்து ஒரு பொண்ணு அது 10 ஆம் வகுப்பு, அடுத்து ஒரு பையன் 9ஆம் வகுப்பு படிச்சுகிட்டு இருக்கு. கல்யாணத்துக்கு அப்புறமும் இந்த தொழிலை பாத்துகிட்டு இருக்கேன். ஒரு நாள் கூட நான் இரவில் என்னுடைய குடும்பத்தோடு வாழ்ந்தது இல்லை. ஆன எனக்கு ரொம்ப ஆசை என் குடும்பத்தோட என் பிள்ளைகளோட இரவு உணவருந்திவிட்டு அவர்களோடு பேசிவிட்டு உறங்க செல்ல வேண்டும் என்று நினைக்க மட்டும் தான் முடிகிறது.

25 வருசம் ஆச்சு நான் இரவில் உறங்கி, பகலில் என்னுடைய வருவாயை எதிர்பார்த்து காத்திருப்பார்கள் நான் இரவு பணிக்கு போய்ட்டு எதோ சம்பாதித்து கொண்டு வந்தாதான், எங்க வீட்ல அடுப்பு எரியும், அதுமட்டும் அல்ல மாதம் 3ஆயிரம் வாடகை, கரண்ட் பில், குழுவுக்கு பணம், வட்டிக்கு பணம் என்று இத்தனையையும் சமாளிக்க வேண்டும். நான் எனக்குனு 3 வருசத்துக்கு முன்னாடி ஒரு 3 செட் சட்டை பேண்ட் எடுத்தேன், அதை வைத்து தான் இன்று வரைக்கும் உடுத்தி வருகிறேன். இந்த தீபாவளிக்கு எங்களுக்குனு 1500 ரூபாய் கொடுத்தாங்க ஆன அது பத்தல எங்கவீட்ல எனக்கு புதுத்துணி எடுக்கலான கூட என் குடும்பத்துக்கு எடுத்து ஆகனும்ல வெளில பைனான்ஸ்ல 5ஆயிரம் கடன் வாங்கி இந்த தீபாவளியை கொண்டாடினோம்.

அன்னனைக்கு பொலப்புக்கு போனா தான் காசு, இல்லைனா எதுவுமே இல்ல, எனக்கும் ரொம்ப ஆசை தான் என் பிள்ளைகளோட ஒரு பத்து நாள் வெளியூர் கூட்டிகிட்டு கோவில் குளம்னு சுத்தனும்னு, ஆன எங்க போறது இங்க வாய்க்கும், வைத்துக்குமே சரியா இருக்கு சார் என்கிறார். நானும் ரொம்ப நாளா யோசிச்சுகிட்டு இருக்கேன் ஒரு நாளு நாள் வேலைக்கு போகாம வீட்ல படுத்து நல்லா தூங்க வேண்டும்.

கோரிக்கை….
என்னை போல இந்த பஸ்ஸாண்டுல சீனியா்கள்னு பாத்தா 5 பேர் இருக்காங்க எனக்கு தெரிஞ்சு என்கூட வேலை பார்த்தவங்கல்ள 30 பேர் இறந்துட்டாங்க. இப்பலாம் பொடி பசங்க தான் அதிகமா இருக்காங்க… எங்களுக்குனு எந்த சங்கமும் கிடையாது, நாங்க செத்தா எங்களுக்குனு ஒரு மாலை வாங்கி கொண்டுவந்து போட கூட ஆள் கிடையாதுங்க… நாங்க சங்கம் ஆரம்பிச்சா எங்க பிரச்சனை வந்துவிடுமோனு அந்த பஸ் முதலாளிகள் சங்கம்ற பேச்சே இருக்க கூடாதுனு கலைச்சு விட்டுறாங்க. மற்ற தொழில்களில் இருக்கவங்க செத்தா அந்த சங்கம் சார்பில் 50 ஆயிரமாவது கொடுப்பாங்க அதுகூட எங்களுக்கு கிடையாது.

எங்க வாழ்க்கை உயிர் இருக்கும் வரை இப்படி கத்திகிட்டே தான் இருக்கனும் அப்புறம் ஒரு நாள் செத்து போய்டனும் அவ்வளவு தான் எங்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட வாழ்க்கை. தொழிலாளா்களுக்கு குரல் கொடுக்கும் ஏதோ ஒரு கட்சி எங்களையும் தொழிலாளா்களாக அங்கீகரித்து எங்களையும் ஒரு சங்கமாக இணைத்து அங்கீகரித்து எங்களை போன்றவா்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்தால் போதும் என்ற கோரிக்கையை தாண்டி வேறு எதுவும் எங்களுக்கு தேவையில்லை. நான் நாளைக்கு செத்தா நான் வைத்திருக்கும் 2 லட்சம் கடன் மட்டுமே மிஞ்சும்,

வேற எதுவுமோ என்கிட்ட இல்ல சேமிப்பு என்பதே எதுவும் கிடையாது. அப்படி இருக்கும்போது எங்களுக்கான பணியை நாங்க வாழ்ற வாழ்நாள் முழுவதும் உறுதி செய்து கொடுத்தால் போதும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறார். இடைமறித்த அவா் சார் வேலைக்கு போக டைம் ஆச்சு நான் இன்னைக்கு போய் சென்னைக்கு டிக்கெட் ஏத்துனாதான் நாளைக்கு என் வீட்ல உலை கொதிக்கும்… சார் சென்னை சென்னை, சென்னை

gif 2

Leave A Reply

Your email address will not be published.