சுதந்திரத்துக்கு முன்பே காங்கிரஸின் வளர்ச்சிக்கு பாடுபட்ட ஏ.ஜி. லூர்துசாமி பிள்ளை

திருச்சியின் அடையாளங்கள் -36

0
D1

திருச்சியின் அடையாளம். தமிழகத்தின் இரண்டாம் தலைநகரான ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் பல அடையாளங்களுடன் நிமிர்ந்து நின்றுள்ளது. இங்கே வாழ்ந்தவர்கள் ஏராளம். மக்கள் மனதில் நிலைத்து நின்ற பலர் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டங்களின் அடையாளங்களாக விளங்கினார்கள். அந்த அடையாளங்களை நம்ம திருச்சி வார இதழ் மூலம் திரும்பிப் பார்த்து வருகிறோம் அந்த வரிசையில்….

ஏ.ஜி.லூர்துசாமி பிள்ளை 12.6.1912இல் பாலக்கரையில் பிறந்தவர். இவர் தந்தை காண்ட்ராக்டர் ஞானாதிக்கம்பிள்ளை, தான் ஈட்டிய பொருளைத் தான் வாழ்ந்த பகுதி மக்களுக்காகப் பல நற்பணிகளுக்காக ஈந்த கொடை வள்ளல்.

ஏ.ஜி.லூர்துசாமி பிள்ளை பட்டங்கள் ஏதும் பெறவில்லையாயினும் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதவும் பேசவும் ஆற்றல் பெற்றவர். தந்தையின் தொழிலான காண்ட்ராக்ட் தொழில் தொடங்கி, மரவியாபாரம், சிகரெட் மொத்த வியாபாரம் ஆகிய தொழில்களில் முன்னணியில் விளங்கினார்.

D2
N2

சிறுவயதிலிருந்தே காங்கிரஸ் பேரியக்கத்தில் ஈடுபாடு கொண்டு சுதந்திரத்துக்கு முன்பே காங்கிரஸின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டார். டி.எஸ்.அருணாசலம், பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் அன்பைப் பெற்றவர். 1948இல் நகரமன்ற உறுப்பினராக இருந்தபோது தெப்பக்குளத்தில் தூர் எடுக்கும் பணியினை முன்னின்று செய்தவர்.

நகரமன்றத் தலைவராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றியபோது, இவரது தலைமையில் இந்நகரம் பல முன்னேற்றங்களைக் கண்டது. மரக்கடை, தில்லைநகர் போன்ற 8 இடங்களில் குடிநீர் மேல் நிலைத் தொட்டிகள் கட்டி நகரின் குடிநீர் பற்றாக்குறையைப் போக்கியவர்.

பட்டர்வொர்த் ரோட்டில் மிக நெருக்கமான இடத்தில் இருந்த பேருந்து நிலையத்தைத் தற்போதுள்ள இடத்திற்கு மாற்றியவர் இவரே. நகரில் நகரமன்றத்திற்குத் தற்போதுள்ள புதிய கட்டிடத்தை எழுப்பி நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடியவர். நகரின் தூய்மையைக் காக்க MASS Cleaning Scheme என்ற திட்டத்தின் மூலம் வாரந்தோறும் வார்டுகளில் குப்பைகள் அகற்றும் பணியை மிகச் செம்மையாகச் செய்தவர்.
இவரது மகன்கள் எல்.அடைக்கலராஜ், ஞானராஜ், பால்ராஜ், இருதயராஜ், மகள் எமிலி ரிச்சர்டு, இவர்களும் தந்தையைப் போலவே இந்நகரில் பல்வேறு அரசியல், பொதுப் பணிகளுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர்.

அடைக்கலராஜ் 3-முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். ஞானராஜ் மாவட்ட வியாபாரக் கழகத் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றி வியாபாரிகளின் நலனுக்காக அரசிடம் பல சலுகைகள் பெற்றுத் தந்தவர். திருமதி. எமிலி ரிச்சர்டு போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு இயக்கத் தலைவியாகவும் மாநகராட்சி துணை மேயராகவும் சுறுசுறுப்புடன் அரும்பணியாற்றியவர். இருதயராஜ் கிறிஸ்தவமக்கள் மேம்பாட்டிற்காகப் பாடுபட்டு வருகிறார்.

N3

Leave A Reply

Your email address will not be published.