கல்வி சீலர் சாரநாதன்

திருச்சியின் அடையாளங்கள்-35

0
D1

திருச்சியின் அடையாளம். தமிழகத்தின் இரண்டாம் தலைநகரான ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் பல அடையாளங்களுடன் நிமிர்ந்து நின்றுள்ளது. இங்கே வாழ்ந்தவர்கள் ஏராளம். மக்கள் மனதில் நிலைத்து நின்ற பலர் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டங்களின் அடையாளங்களாக விளங்கினார்கள். அந்த அடையாளங்களை ntrichy.com வார இதழ் மூலம் திரும்பிப் பார்த்து வருகிறோம் அந்த வரிசையில்….

“பிரச்சனைக்குரிய சூழ்நிலையில் ஒரு விந்தையான பிறப்பு” என்று தனது பிறப்பினைப்பற்றி கூறும் சாரநாதன் 1892ஆம் ஆண்டில் ஜனவரி 6ம் தேதி கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருச்சேறை எனும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை வேங்கட சேசாத்திரி நாதாச்சாரியார் புகழ்வாய்ந்த வேத விற்பன்னர். இளமையிலேயே தந்தையை இழந்த இவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள காருக்குறிச்சி கிராமத்தில் பல ஆண்டுகள் வாழ்ந்து வந்துள்ளார். மெட்ரிகுலேஷன் தேர்வில் மாவட்டத்தின் முதல் மாணவராகவும் பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. பட்டமும் பெற்றவர்.

திருச்சிராப்பள்ளி புனித வளனார் கல்லூரியில் பயிற்றுநராக முதன்முதல் பணியில் சேர்ந்தார். அப்போது எம்.ஏ.பட்டம் பெற்றார். பின்னர் 1914இல் நெல்லை இந்து கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகவும் 1918இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப் பேராசிரியராகவும் திருச்சிராப்பள்ளியில் 1919இல் தேசியக்கல்லூரியில் ஆங்கிலத்துறையின் தலைவராகவும் 1921ஆம் ஆண்டில் அக்கல்லூரியின் முதல்வராகவும் பொறுப்பேற்றார்.

D2

தேசியக்கல்லூரியில் இவர் ஆற்றியப் பணி மகத்தானது. கல்லூரியின் வளர்ச்சிக்காகவும், மாணவர்களின் கல்விக்காகவும் அல்லும் பகலும் அயராது உழைத்துள்ளார்.

N2


அகில இந்திய அளவில் கல்வியாளர்களிடையே சாரநாதனின் கல்விப்பணி அக்காலத்தில் பேசப்பட்டது. இவர், தான் பெற்ற மாதச் சம்பளத்தில் பாதித்தொகையை ஏழை மாணவர்களின் கல்விக்காகக் கொடுத்து உதவி வந்தார். 1930ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு 6 ஆண்டுகள் திறம்படப் பணியாற்றினார். 1947ஆம் ஆண்டில் முதல்வர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

சாரநாதன், அக்காலத்தில் தன்னுடைய எழுச்சிமிக்க எழுத்துக்களினாலும், கவிதைகளினாலும் மாணவர்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டி வளர்த்தார். இதனால் ஆங்கில அரசால் பெரிதும் கண்காணிக்கப்பட்டு வந்தார்.

சாரநாதன் மிகச்சிறந்த ஒரு படைப்பிலக்கிய கர்த்தா ஆவார். தமிழில் கட்டளைக் கலித்துறையிலும், ஆங்கிலத்திலும் நூற்றுக்கணக்கான கவிதைகளை இயற்றியுள்ளார்.

“இலக்கியத்திறனாய்வு”, “கலைத்துறைக் கட்டுரைகள்,” கல்வி பற்றிய கட்டுரைகள், சுயசரிதை போன்ற ஆங்கில நூல்களையும், வாழ்க்கைச் சிற்பம், நம் நாகரீகம், கல்வி, சில பேரறிஞர்கள், சமூகப் பிரச்னைகள் போன்ற தமிழ் நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய தினசரி நாட்குறிப்பை “சிந்தனைச் சுடர்” என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும், தமிழிலும் வெளியிட்டுள்ளார்.

பல துறைகளிலும் பல கோணங்களிலும் தனது சிந்தனைகளை நூலாக வெளியிட்டுள்ள நூலாசிரியராகவும், கருத்துமிக்க கவிஞராகவும், கண்டிப்பான கல்லூரி முதல்வராகவும், பழகுவற்கு இனிய பண்பாளராகவும் திகழ்ந்தவர் கல்விச்சீலர் சாரநாதன்.

N3

Leave A Reply

Your email address will not be published.