திருச்சி தினமலர் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியருமான திரு.ஆர்.ராகவன்

0
1

தமிழகத்தின் மலைக்கோட்டையை அடையாளமாகக் கொண்ட திருச்சி மாவட்டம், ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது, பல அடையாளங்களுடன் நிமிர்ந்து நிற்கிறது. இங்கே வாழ்ந்தவர்கள் ஏராளம். மக்கள் மனதிலும், பத்திரிகை உலகிலும் நிலைத்து நின்று, இன்றும் மக்களின் அடையாளங்களாக விளங்கியவர்களை ntrichy.com வார இதழ் மூலம் திரும்பிப் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில்…

Helios

10.10.2017 அன்று தினமலர் பங்குதாரரும், திருச்சி தினமலர் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியருமான திரு.ஆர்.ராகவன் (வயது 79) காலமானார். ஆர்.ஆர் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட அவர் எவ்வித இடைஞ்சலும் தராத நல்ல மனம் படைத்தவர், அவரின் மறைவு பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், தி.க. தலைவர் வீரமணி, டி.டி.வி.தினகரன், முன்னாள், இன்னாள் அமைச்சர்கள், ஏராளமான பணியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் ஆர்.ஆர்-க்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்தவாரம் அடையாளம் பகுதியில் மக்கள் போற்றிய மக்கத்தான ஊடக தலைவர் ராகவன் அவர்களுக்கு நம்ம திருச்சி வார இதழின் புகழஞ்சலி செலுத்துகிறது.


விழுதான ஆலமரம்..
தினமலர் நிறுவனர் திரு.ராமசுப்பையரின் 4-வது மகனான இவருக்கு திருமதி. செல்லம்மாள், டாக்டர் ஆர்.வெங்கடபதி, டாக்டர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் ஆர்.லட்சுமிபதி, ஆர்.சத்தியமூர்த்தி, எஸ்.லட்சுமி ஆகியோர் உடன் பிறந்தவர்கள். திரு.ராகவனுக்கு ஆர்.சுப்பலட்சுமி என்ற மனைவியும் டாக்டர் ஆர்.ஆர். ராமசுப்பு, ஆர்.ஆர். கோபால்ஜி ஆகிய மகன்களும் உள்ளனர். தினமலர் என்ற ஆலமரம் இன்று பல விழுதுகளுடன் பரவிப் பரந்து நிற்கிறதென்றால், அதன் முக்கிய காரணமே அதன் பலமான ஆணி வேரும் வேர்களுமான வாசகர்களும், விற்பனையாளர்களும்தான். தமிழகம் முழுவதும் பரவி இருக்கும் தினமலர் விற்பனையாளர்கள்தான் தினமலர் வளர்ச்சியின் இன்றைய நிலைக்கு சாட்சியாக விளங்குகின்றனர். இத்தகைய விற்பனையாளர்கள் குழுவை தினமலர் இதழுக்கு உருவாக்கியதில் பெரும் பங்கு திரு.டி.வி.ஆரின் 4-வது புதல்வர் திரு.ஆர்.ராகவன் அவர்களையே சேரும்.

பள்ளியில் படித்துக் கொண்டிருந்த திரு.ராகவன் 14-ம் வயதிலிருந்து அவருடைய தந்தையாரின் சில பொறுப்புகளை பகுதி நேரமாக பார்த்து வந்தார். 11-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்பு, நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் ஓராண்டு பட்டப்படிப்பு படித்தார். அனைத்துப் பாடங்களிலும் குறிப்பாக கணிதத்தில் முதலிடம் பெற்றார். இவ்வாறு நன்கு படித்துக் கொண்டிருந்த நிலையில் அவருடைய மற்ற சகோதரர்கள் படிப்பை முடித்துவிட்டு வெளிநாடுகளில் வேலைக்கு முயன்று கொண்டிருந்தனர். 1951-ல் திருவனந்தபுரத்தில் தினமலர் துவக்கப்பட்டிருந்தது.

இதனால் திரு.ராகவன் படிப்பை நிறுத்திவிட்டு தந்தையாரின் உத்தரவின் பேரில் அவருக்கு துணையாக 1954 முதல் தினமலர் வரவு, செலவு கணக்கு மற்றும் நிர்வாகத்தை பார்க்கச் சென்றுவிட்டார்.

திருச்சி பதிப்பு
திருச்சி பதிப்பு துவக்கப்பட்டபோது
திரு.டி.வி.ஆர். திரு.ராகவனை திருச்சிக்கு அழைத்துச் சென்று விற்பனை பிரிவைப் பார்க்கச் சொல்ல, அதன்படி திரு.ராகவன் திருச்சியில் விற்பனைப் பிரிவைக் கவனித்துக் கொண்டார்.

வடஆற்காடு, தென்ஆற்காடு மற்றும் சேலம் மாவட்டப் பகுதிகளில் தினமலர் விற்பனையை திரு.ராகவன் திறம்பட வளர்ச்சி பெறச் செய்திருந்தார். இதில் வடஆற்காடு பகுதி வேலூர் பதிப்பிலும், தென்ஆற்காடு பகுதி புதுச்சேரி பதிப்பிலும், சேலம் பகுதி ஈரோடு பதிப்பிலும் இணைக்கப்பட்டன.
திரு.ஆர்.ஆர் அவர்களைப் பற்றி, தினமலரில் வேலை பார்த்த சேது நாகராஜன் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ‘நல்லவர்கள் விளம்பரத்தை விரும்பியதில்லை’ என்று தலைப்பிட்டு பின்வருமாறு எழுதியுள்ளார்.

2

“அவரை 2000-க்கு முன் எனக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லை. மதுரை, கோயமுத்தூர் தினமலர் அலுவலகம் வரும்போது சில நிமிடங்கள் பேசுவார். 2000-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி அவரது அலுவலகத்திலேயே பணி.
கம்பீரமான குரல்; குழந்தை மனசு; மழலை சிரிப்பு; அவரிடம் ஏனோ தானோ என்று பேச முடியாது. மிகவும் யோசித்து பதில் சொல்லவேண்டும். ஷார்ப் ஆக கவனிப்பார். நம் பதிலில் இருக்கும் ஒரு தகவலில் இருந்தே கம்பீர குரலில் அவரிடம் ஒரு கேள்வி பிறக்கும். ஒரு சப்ஜெக்ட்டில் நமக்கு எந்த சந்தேகமும் வராத அளவுக்கு அவரது பேச்சு இருக்கும்.

பணிக்கு சேர்ந்து கொஞ்ச நாளிலேயே அவரிடம் பழகும் வாய்ப்பு. அவர் அலுவலகம் வந்ததும், ‘சேது எங்கே?’ என அழைப்பு வரும். வணிகர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என எல்லா தரப்புக்கும் செய்தி இடம்பெறுகிறதா என அலசுவார். ஆலோசனை தருவார்.

பல ஆண்டுகள் படித்து தெரிந்து கொள்ள வேண்டியதை சில மணிநேரங்களில் வரைபடங்களில் புரியவைப்பார். ஒரு பேப்பரும், பேனாவும் அவரிடம் இருந்தால் போதும்!.. பாரதத்தின் ஆறுகள், மலைத்தொடர்கள் எங்கே தொடங்கி எங்கே முடிகின்றன என பாதை பிசகாமல் விளங்க வைப்பார். வடகிழக்கு பருவமழையும், தென் மேற்கு பருவமழையும் எப்போது தொடங்கி, எப்போது முடியும் என விளக்குவார். எந்த பருவத்தில் எந்தெந்த ஆறுகளில் நீர் பெருக்கெடுக்கும் என்பார்.
சென்னை மாகாணம் – மைசூரு மாகாணங்கள் போட்ட காவிரி ஒப்பந்தங்கள் பற்றி விவரிப்பார். தடுப்பணைகள், ஏரிகள், குளங்கள் அதனால் பலன் பெரும் ஊர்களை பட்டியலிடுவார். நெல்மணிகள் பால் பிடிக்கும் பருவத்தையும், அது தவறினால் பதராகும் சோகத்தையும் சொல்வார். பூலோகத்தையும், வரலாறையும் போரடிக்காமல் புன்னகை மாறாமல் சொல்வார்.

காவிரியில் நீர் வரவேண்டும் என்றால் குடகு பகுதியில் பெய்யும் மழை நிலவரத்தை கவனிக்க சொல்வார். கர்நாடகாவின் ஹேரங்கி, ஹேமாவதி, கிருஷ்ண ராஜ சாகர் நீர்வரத்தை கவனித்து அணைகள் நிலவரம் வெளியிட சொல்வார். கபினியின் பின்னணி சொல்வார். தமிழகத்தில் பணியாற்றும் ஓவ்வொரு செய்தியாளரும் அறிந்து வைத்திருக்க வேண்டிய பூகோள பாடங்கள் அவை.

எல்லோரும் அறைக்குள் அமர்ந்து பணியாற்றிய காலங்களில், தமிழகம் எங்கும் பட்டி தொட்டி எங்கும் அலைந்து திரிந்து தினமலர் விற்பனை உயர அரை நூற்றாண்டுக்கும் மேல் அயராது உழைத்தவர். தமிழகத்தில் அவர் கால் படாத கிராமங்கள் இருக்க முடியாது. எந்த நெடுஞ்சாலையையும், அதன் அருகில் இருக்கும் கிராம சாலைகளையும், கிராமங்களையும், அங்கு இருந்த ஏஜெண்டுகளையும் துல்லியமாக சொல்வார்.

தேசம் எங்கும் அலைந்து பல ஆயிரக்கணக்கானோருக்கு வாழ்வளித்த அவரது ஆன்மா இப்போது இறைவன் திருவடிகளில் ஓய்வெடுக்கிறது. அவரது பேச்சு நகைச்சுவை இழையோடும் தருணங்களில் உடல் குலுங்க சிரிப்பார். கன்னங்களில் குழி விழும். கண்கள் சிரிக்கும். நல்லவர்கள் விளம்பரத்தை விரும்பியதில்லை. தன் மேல் வெளிச்சம் படவும் அனுமதித்ததில்லை. ஆர்.ஆர். என எல்லாராலும் பாசத்தோடு அழைக்கப்படும் ஸ்ரீ ஆர்.ராகவன் அவர்கள் கள்ளம் கபடம் இல்லாத நல்ல முதலாளி!” என பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்.

தினமலர் நிறுவனத்தில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி சீனியர் செய்தியாளர் ”ntrichy.com” இதழுக்காக பேசுகையில்,
“அவரிடம் யாரைக் குறை கூறினாலும் அதைக் காதில் வாங்கி கொள்ள மாட்டார். எதுவாக இருந்தாலும் நான் பார்த்து கொள்கிறேன் என்றுக்கூறி திருப்பி அனுப்பிவிடுவார்.

அதே போல் மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார். யாராக இருந்தாலும் நிறுவனத்தின் வளா்ச்சிக்கு நல்ல யோசனை கொடுப்பவா்களை அருகில் வைத்து கொள்வார். உதாரணத்திற்க்கு நான் தினமலர் முதல் பக்கத்தில் உள்ள தினமலர் என்ற தலைப்புடன் முழுவிளம்பரம் போடும்போது இரண்டாவது பக்கத்தில் தலைப்பு வைத்தால் நன்றாக இருக்கும் என்று நான் கூறினேன் அதை எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் உடனடியாக நடைமுறைப்படுத்தினார். நான் செய்தியாளாராக இருக்கும் போது பல மாவட்டங்களில் பணியாற்றி உள்ளேன். எங்கு சென்றாலும் நம்முடைய செய்தித்தாள் கிடைக்காத இடத்தை கேட்டுக் கொண்டே இருப்பார். எங்கு கிடைக்கவில்லையோ, அந்த இடத்தை குறித்து கொடுத்தால் அடுத்த நாள் அங்கு பேப்பர் கிடைக்கும். அவா் சிறந்த உழைப்பாளி அவர் எப்போதும் எங்களுடன் நீக்கமற நிறைந்திருப்பார்” என்று முடித்தார்.
கடந்த 45 வருடமாக விளம்பரத்தில் பணியாற்றிய ஒருவர் நம்ம திருச்சி இதழுக்காக பேசிய போது…
”ஒருநாள் என்னை அழைத்த ஆர்.ஆர், விளம்பரத்தோடு சேர்த்து எங்கெல்லாம் பேப்பர் கிடைக்கிறது. எங்கு கிடைக்கவில்லை என்பதை பார்த்தும், பேப்பார் கிடக்காத இடங்கள் குறித்து எழுதி வைத்துக்கொள் என்றார். அதன்படி நான் செயல்படவே, தினமும் என்னிடம் அறிக்கை பெற்றுக்கொண்டு அந்த கடைகளில் பேப்பா் கிடைக்க ஆட்களை நியமிப்பார். அதேபோன்று தினமும் காலை 4 மணிக்கு எழுந்து தலையில் முக்காடு போட்டு கொண்டு பேருந்து நிலையத்தில் பேப்பர் பிரிக்கும் இடங்களில் பயணிகள் போல அமர்ந்து கொண்டு பேப்பர்களை ஏஜெண்டுகள் சரியாக கொண்டு சேர்கிறார்களா? என்று பார்வையிட்டதுண்டு. தினமலர் நாளிதழ் இந்த அளவிற்கு மக்களிடம் சென்றதற்கு அவருடைய அயராது உழைப்புதான் காரணம். முதலாளி தொழிலாளி என்ற ஏற்ற தாழ்வு பார்க்க மாட்டார். யாராக இருந்தாலும் சகஜமாகவும், பாரபட்சமில்லாமலும் பேசக்கூடியவா், அதிகம் கோபப்படாத சுபாவம் அவரது இயல்பு. அவருடைய இழப்பு எங்களுக்கு பெறும் இழப்பு. எங்க எல்லாரையும் நன்றாக பார்த்துகொள்வார். அப்படிப்பட்டவர், எங்களுடன் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது” என்று கலங்கினார்.

3

Leave A Reply

Your email address will not be published.