
சின்னக்கம்மாளத்தெருவில் 11.4.1916 அன்று பாடகரான வை.முருகானந்தம் ஆச்சாரிக்கும் திருமதி. சின்னப்பொண்ணு அம்மாளுக்கும் ஒரே புதல்வராகப் பிறந்தவர் எம்.எம்.மாரியப்பா அவர்கள். 3ஆம் பாரத்திற்கு மேல் கல்வி கற்க வாய்ப்பில்லாத நிலையில் சுயமுயற்சியாலேயே எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டார். இளம் வயதிலேயே தனது தந்தையிடம் பக்திப் பாடல்கள், தேசியப் புரட்சிப் பாடல்கள், தேசத்தலைவர்களின் சுதந்திரப் போராட்ட கால வரலாற்றுப் பாடல்கள் போன்றவற்றைக் கற்றுக் கொண்டு தனது திறமையின் மூலம் கலைத்துறையில் அடி எடுத்து வைத்தார். முக்கியமாக இவரது நாடகப் பணிக்கு திருச்சிராப்பள்ளி டி.எஸ்.மாணிக்கம் பிள்ளை வழிகாட்டியாக இருந்தார்.
பாலபாரத நாடக சபாவில் முதலில் சேர்ந்து நடித்த இவர் பின்னர் மதுரை ஶ்ரீதேவி பால விநோத சங்கீத நாடக சபையார் நாடகக் குழுவில் சேர்ந்தும் நடித்துள்ளார். தாமே சொந்தமாக ஶ்ரீராஜராஜேஸ்வரி நாடக சபா, மூவேந்தர் நாடக சபா, ஓம் சக்திவேல் நாடக சபா, ராணிதுரை நாடகசபா, எம்.எம்.மாரியப்பா இசை நாடகக் கலைக்குழு எனப் பல நாடகக் கலைக்குழுக்களை நிறுவியும் தாமே சொந்தமாக பல நாடகங்களை எழுதியும், அந்நாடகங்களில் நடித்தும், பாடியும் தம் திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
சங்கரதாஸ் சுவாமிகளின் வள்ளி திருமணம் கோபாலகிருஷ்ண பாரதியின் பரமபக்த நந்தனார் மற்றும் பாமாவிஜயம், பவளக்கொடி, தூக்குத்தூக்கி போன்ற இசை நாடகங்களிலும், விரோதி, அசோகனின் காதலி போன்ற சரித்திர, சமூக நாடகங்களிலும் நடித்துள்ளார். இன்பவீடு, விரோதி, நாட்டுக்கு நல்லது போன்ற பல நாடகங்களை இவர் எழுதியும் உள்ளார். அல்லி விஜயம், ஜோதி அருணகிரிநாதர், ராஜா கோபிநாத் போன்ற திரைப்படங்களில் சிறு வேடங்களில் பாடியும் நடித்தும் உள்ளார்.
1942ஆம் வருடம் கோவை ஜுபிடர் பிக்ஸரில் மாதச் சம்பளத்திற்கு சேர்ந்து திரைப்பட உலகின் முதல் பின்னணிப் பாடகராக அறிமுகமானார்.


1947இல் தயாரிக்கப்பட்ட அமரர் எம்.ஜி.ஆரின் முதல் படமான ராஜகுமாரி திரைப்படத்தில் அவருக்காக முதன்முதல் பல பாடல்களை பின்னணி பாடியுள்ளார். நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கும் பின்னணிப் பாடியுள்ளார். கொலம்பியா, எச்.எம்.வி. மாஸ்டர் போன்ற கிராமபோன் இசைத்தட்டுக்கம்பெனிகளுக்காக இவர் ஸ்பெஷல் பாடல்களையும் பாடி இசைத்தட்டுக்களாக அவைகள் வந்துள்ளன.
இவரது தமிழ்ப்பணியைப் பாராட்டித் தந்தைப் பெரியார் 1945இல் தமிழ் இசைத் தென்றல் என்ற பட்டத்தினையும், சென்னை கவர்னர் சர்.ஆர்.சி. அவர்கள் தங்கப்பதக்கமும், பாராட்டும் 1948இல் திருவாரூர் முருகன் அடியார்கள் சார்பாக இசைமணி பட்டமும், திருச்சி ஐந்தொழிலாளர் சங்கம் சார்பாக 1959இல் கேடயமும் பாராட்டும், திருச்சி நற்றமிழ் சொற்பயிற்சி மன்றத்தினர் 1960இல் இயல் இசைத் தென்றல் பட்டமும் தந்துள்ளனர்.
தமிழ் அறிஞர்கள் பலரின் பாராட்டையும் மதிப்பையும் பெற்ற இவர், 1977இல் தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றம் சார்பில் கலைமாமணி பட்டமும் பொற்கிழியும் பெற்றுச் சிறப்பிக்கப்பட்டார். தமிழ்த் திரைப்பட உலகில் தமக்கென ஒரு தனிப் பாணியை வகுத்துக் கலை உலகில் பெரும் புகழ் எய்திய பாடகர், நடிகர் எம்.எம்.மாரியப்பா தம் 66ஆம் வயதில் 14.1.1982 அன்று சமயபுரத்தில் அமரரானார். 1984இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தில் இவரது உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது.
