கலைச்சிகாமணி விருது பெற்ற பேராசிரியர் ஹம்சா சி.எஸ். கமலபதி
திருச்சியின் அடையாளங்கள் -32

திருச்சியின் அடையாளம். தமிழகத்தின் இரண்டாம் தலைநகரான ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் பல அடையாளங்களுடன் நிமிர்ந்து நின்றுள்ளது. இங்கே வாழ்ந்தவர்கள் ஏராளம். மக்கள் மனதில் நிலைத்து நின்ற பலர் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டங்களின் அடையாளங்களாக விளங்கினார்கள். அந்த அடையாளங்களை ntrichy.com வார இதழ் மூலம் திரும்பிப் பார்த்து வருகிறோம் அந்த வரிசையில்…
.
ஆங்கிலத்துறை கல்லூரிப் பேராசிரியராக சிறந்த கல்வியாளராக, நிர்வாகத் திறன்மிக்க கல்லூரி முதல்வராகப் பணியாற்றிய பேராசிரியர் சி.எஸ்.கமலபதி அவர்கள் 1914இல் பிறந்தவர். வேலூர் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் ஹானர்ஸ் பட்டம் பெற்றவர். 1936இல் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய போது ஆங்கில மஹிளா சபாவினை நிறுவிடத் துணைநின்றவர். அப்போது தத்துவஞானி டாக்டர் இராதாகிருஷ்ணன், கவிக்குயில் சரோஜினி நாயுடு, தீரர் சத்தியமூர்த்தி, அன்னிபெஸண்ட் அம்மையார் ஆகியோருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றவர். சென்னையில் பைன் ஆர்ட்ஸ் அகாடமியை நிறுவி கர்நாடக மற்றும் தமிழ் நாடகங்கள் வளர்ச்சிக்கு உதவியவர்.
1939 முதல் 1947 வரை சிவில் பாதுகாப்புப் படையில் பம்பாய் ஹைதராபாத்தில் பயிற்சி பெற்றுள்ளார். 1947 முதல் 1950 வரை தேசியக் கல்லூரியில் ஆங்கிலத் துறையில் பணியாற்றியுள்ளார். 1950 முதல் 1970 வரை ஜமால் முகமது கல்லூரியின் ஆங்கிலத்துறை துணைப் பேராசிரியராக இருந்தவர். அக்காலக் கட்டத்தில் கல்லூரிகள், அகில இந்திய வானொலி, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளில் ஷேக்ஸ்பியர் நாடகங்களைத் துடிப்புடன் நடித்துள்ளார். ஆங்கிலக் கவிதைகள் 4,000 வரிகளுக்கு மேல் எழுதியுள்ளார்.


தி.மா.தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றிய போது ஷேக்ஸ்பியர் நாடகங்களைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இதற்காக அறிஞர் அண்ணாவால் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளார். “கலைச்சிகாமணி” என்ற விருதினை முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் இவருக்கு வழங்கியுள்ளார். இளைஞராக இருந்த காலத்தில் ராஜாஜியின் வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக யாத்திரையில் தொண்டராகப் பணியாற்றியுள்ளார். ராஜாஜி தலைமையில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல் போராட்டத்திலும் தீவிரப் பிரச்சாரம் செய்ததற்காக மெடல் பெற்றவர்.
இவர் சென்னையில் வாழ்ந்த காலத்தில் கோடம்பாக்கம் அரிஜன விடுதியில் 11-நாட்கள் தங்கியிருந்த மகாத்மா காந்திஅடிகளுக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்பினைப் பெற்றவர். அதேபோல் மலபாரில் தங்கியிருந்தபோது அங்கு ஓய்வெடுக்க வந்த முகமதலி ஜின்னாவோடும் பழகும் வாய்ப்பினையும் பெற்றார். 1970இல் பாய்லர் ஆலை கைலாசபுரத்தில் அறிவாலயம் என்ற மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளியை நிறுவி தொண்டாற்றினார்.
1978 முதல் 1981 வரை மகரிஷி தியான மையத்தை திருச்சிராப்பள்ளியில் நிறுவி தியானக்கலையை வளர்த்தார். 1981இல் Thapas என்ற ஆளுமை மேம்பாடு, பேச்சுப்பயிற்சி மையத்தை நிறுவி இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்தார். இந்நகரில் சிறந்த கல்வியாளராகவும், ஆங்கில நாடக நடிகராகவும், எழுத்தாளராகவும், கவிஞராகவும், சமூகப் பணியாளராகவும் வாழ்ந்த ஹம்சா சி.எஸ். கமலபதி அவர்கள் 2000இல் தில்லைநகரில் தன் இறுதிக் காலத்தில் வாழ்ந்து மறைந்தார்.
மீண்டும் அடுத்தவாரம் இன்னொரு ஆளுமை
குறித்து தெரிந்துகொள்வோம்…
முந்தைய தொகுப்புகளை
http://ntrichy.com இணையதளத்தை பார்க்கவும் .
