திருச்சிக்குள் ஜப்பானிய ஓவிய கலை

0
1

ஓவியங்கள் என்றாலே வரலாறு தான் வார்த்தைகளால் குறிப்பிட முடியாத பல தகவல்களை ஓவியங்கள் மூலமாக பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த மக்கள், அரசா்கள், மன்னா்கள், பண்பாடு, கலாச்சாரம், ஒழுக்கம், என்று ஒவ்வொன்றையும் பிரதிபலிக்கும் ஒரு வரலாற்று சான்றுகள் தான் அவை. ஓவியத்தை படைக்கும் ஒவ்வொரு படைப்பாளிகளுக்குள்ளும் இருக்கும் உணா்வு பூர்வமான வெளிப்படையான பிரதிபலிப்பு தான் ஓவியம்.

அந்த ஓவியத்தில் ஒரு படைப்பாளியின் காதல், அன்பு, கோபம், மகிழ்ச்சி, துக்கம், சோர்வு, பசி, வறுமை, என்று ஒவ்வொரு உணர்வும் வெளிப்படும். அப்படிபட்ட அந்த ஓவியத்தின் மூலம் தான் பல வரலாற்று நினைவுகள் இன்றும் அழியாமல் பொக்கிஷங்களாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அப்படிபட்ட ஓவியத்தின் வளா்ச்சியில் ஆப்பிரிக்க ஓவியங்கள், இஸ்லாமிய ஓவியங்கள், இந்திய ஓவியங்கள், சீன ஓவியங்கள், ஜப்பானிய ஓவியங்கள் என்று வகுக்கப்பட்டுள்ளது.

அதிலும் இந்திய ஓவியங்கள் இலக்கியத்திலும், பாண்டியா் கால ஓவியமாகவும், பல்லவர் கால ஓவியமாகவும், சோழர் கால ஓவியமாகவும், விஜயநகர கால ஓவியமாகவும், நாயக்கா் கால ஓவியமாகவும், தமிழ் கோவில்களில் வரையபட்ட ஓவியங்கள் என்று அந்தந்த காலத்திற்க்கு ஏற்ப ஓவிய படைப்புகள் மாற்றம் அடைந்துள்ளன.

சுடுமண்ணில் ஆரம்பித்து பாறை, தோல், மர பலகை, சுண்ணாம்பு கல், சுவர், என்று கடந்து வந்தது இன்று அனிமேஷன் வரை சென்றுள்ளது ஓவியத்தின் அசுர வளா்ச்சி, மூலிகை சாறை கொண்டு வா்ணம் தீட்டப்பட்ட காலம் மாறி தற்போது கணி பொறியில் வா்ணம் பூசி அழகு பார்க்கும் நிலைக்கு நாம் வளா்ந்துவிட்டோம் என்றே கூறலாம்.

ஓவியத்தில் இந்தியா்கள் ஓவியம் மிக சிறப்பானதாக இன்றும் வரலாற்று ஆசிரியா்கள் கூறி வருகின்றனா். ஆனால் நம்முடைய ஓவியங்களை கடந்து வெளிநாட்டு ஓவியங்கள் தற்போது உள்ளே நுழைந்து நம்மை ரசிக்க வைத்து கொண்டிருக்கிறது. குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் ஜப்பானிய ஓவியம் அதிகளவில் வரவேற்பை பெற்றுள்ளது என்றே கூறலாம்.

ஜப்பானிய ஓவிய கலையை தொடர்ந்து மாணவா்களுக்கு கற்பித்து வரும் திருச்சி மாவட்ட அரசங்குடி அரசு பள்ளியின் ஓவிய ஆசிரியரான அருணபாலன் பேசுகையில்…

ஜப்பான் ஓவியம்
ஜப்பானிய மொழியில் கிரிகாமி, ஓரிகாமி என்று இந்த ஓவிய கலையை அழைக்கின்றனா். கிரிகாமி (கிரி என்பது வெட்டுதல், காமி என்றால் ஓட்டுதல்) என்பது பல பேப்பர்களை கொண்டு வடிவமைக்கப்படும் ஒரு ஓவியகலை, ஒரிகாமி என்பது ஒரே பேப்பரை கொண்டு வடிவமைக்கப்படும் ஓவிய கலையை தான் இப்படி அழைப்பார்கள். ஆங்கிலத்தில் இதற்கு பெயா் பாப்அப் என்று கூறுகிறார்கள்.

அதாவது ஒரு அட்டையை ஆதாரமாக கொண்டு அதில் வண்ண பேப்பர்களை நம்முடைய கற்பனைக்கு தகுந்தார் போல் வெட்டி, ஒட்டி அதனை அட்டைக்குள்ளே மடக்கி வைத்து அதனை ஒவ்வொரு முறையம் விரித்து பார்க்கும் போதும் நாம் நினைத்த கற்பனை அதில் வெளிப்படும். தற்போது இதுபோன்ற ஓவிய கலைக்கு அதிகளவில் வரவேற்பு உள்ளதாக கூறுகிறார்.

ஆசிரியா் பணி
எங்களுக்கு சொந்த ஊா் கும்பகோணம்.அப்பா கனகசபாபதி பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி கடந்த சில வருடங்களுக்கு முன் தான் மறைந்தார். கடந்த 30 வருடங்களுக்கு முன்பு திருச்சிக்கு வந்து குடியேறினோம். எனக்கு கவின் நுண் கலை கல்லூரியில் படிக்க வேண்டும் என்று ஆசை, ஆனால் அப்பா என்னை அனுப்ப மறுத்ததால் நான் ஓவியத்தில் டிப்ளமோ படித்துவிட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்த போது, 1996ஆம் ஆண்டு முதல் முதலாக பெரம்பலூர் அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிக்கு சோ்ந்தேன். அதன்பின் தேனீா்பட்டி, சிக்கந்தாம்பூா், துறையூர் என்று பல ஊர்களில் பணியாற்றிவிட்டு கடந்த 2000த்தில் கல்லணை அருகில் உள்ள அரசங்குடி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிக்கு வந்தேன்.

2

ஜப்பான் ஓவியத்தில் ஈடுபாடு
2001ஆம் ஆண்டு முதல் ஜப்பானிய ஓவிய கலையை நான் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். 3டி அனிமேஷன் என்று சொல்லக்கூடிய ஒரு மென்பொருளை கணிப்பொறி மூலம் பார்த்த நான் அதை கையால் உருவகப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று எண்ணி, முதலில் சிறிய அளவில் கைக்கு அடக்கமாக உள்ள மாதிரிகளை செய்ய ஆரம்பித்தேன்.

அதில் ஒரு பேப்பர் இருந்தால் போதும் அதனை மிக சுலபமாக செய்ய முடியும். சாதாரணமாக ஒரு சிறிய அளவிலான மாதிரியை செய்ய 10 ரூபாய் இருந்தால் போதும் அதை மிக நேர்த்தியாக செய்ய முடியும், ஒரு வகுப்பறை அளவிற்க்கு கூட செய்ய முடியும் அதன் அளவிற்க்கு தகுந்த செலவுகள் ஆகும். சாதாரணமாக ஒரு சிறிய அளவில் செய்யக்கூடியது என்றால் 10 நிமிடம் போதும், மாதிரியின் அளவு அதிகரிக்கும் போது 2 மணி நேரம், ஒரு நாள் கூட செலவாகும் எனவே இதில் ஆர்வம் இருப்பதால் தொடர்ந்து இதை செய்து வருகிறேன் என்று கூறினார்.

ஜப்பானிய ஓவியத்தின் வளா்ச்சி
திருச்சி பொறுத்தவரை இந்த ஜப்பானிய ஓவியத்தை நான் மட்டும் தான் செய்து வருகிறேன். என்னை போல இன்னும் பலரை உருவாக்கும் முயற்சியில் நான் ஈடுபட்டு வருகிறேன். தற்போது என்னடைய பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு இந்த கலையை முழுமையாக கற்று தருகிறேன். அவா்களம் பல மாதிரிகளை செய்து வருகிறார்கள். மேலும் திருச்சியில் உள்ள பல கல்லூரிகளில் ஒரு நாள் பயிற்சி பட்டறைகளை நடத்தி அதன் மூலம் இதுவரை வருடத்திற்க்கு 2ஆயிரம் மாணவா்களுக்கு கற்றுகொடுத்திருக்கிறேன் என்று கூறுகிறார். தமிழகத்தில் இந்த ஓவியத்தை முழுமையாக செய்பவா்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே உள்ளதாக கூறுகிறார்.

எதிர்கால திட்டம்
பள்ளியில் இருந்து ஒய்வு பெற்ற பின்னா் இதுபோன்ற படைப்புகளை கொண்டு ஒரு விற்பனை கூடம் அமைக்க திட்டமிட்டுள்ளேன். என்னுடைய படைப்பை தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்தின் இயக்குநா்கள் வந்து நேரில் பார்த்து பாராட்டு தெரிவித்துவிட்டு சென்றனா். தொடர்ந்து இதுபோன்ற முயற்சிகளை செய்ய சொல்லி ஊக்கப்படுத்தி உள்ளனா். அதேபோன்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகம் தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தி வருகின்றனா்.

என்னுடைய ஒரே பெண் குழந்தை தற்போது 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு கட்டிடகலையில் ஆர்வம் அதிகம் எனவே அவளும் சொந்தமாக முயற்சி செய்து தன்னுடைய சொந்த முயற்சியில் ஒரு மாதிரியை உருவாக்கி உள்ளார். எனவே இந்த கலையை பொறுத்தவரை தொடர்ந்து பல புதிய வடிவமைப்புகளை கொண்டு வர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று கூறினார்.

இதன் பயன்பாடு
ஜப்பானிய ஓவிய கலை மூலம் நாம் உருவாக்கும் மாதிரிகள் பெரிய அளவில் பேசப்படவில்லை. இருந்தாலும் நான் இதுவரை பெரிய அளவிலான 200க்கும் மேற்பட்டதை உருவாக்கி உள்ளேன். அதனை நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் சிறப்பு பரிசாக வழங்கி வருகிறேன். இதனை சிறந்த பரிசு பொருளாக பயன்படுத்தலாம். அதிலும் நாம் நினைக்கும் ஒவ்வொன்றையும் ஒரு அட்டைக்குள் காகிதங்களை கொண்டு வெட்டி ஒட்டி உருவாக்குவது என்பது நாளை நாம் அடைய போகும் இலக்கிற்கான அடித்தளமாக அமையும், இது ஒரு சுய வேலைவாய்ப்பாக கூட பயன்படுத்தலாம்.

எங்கள் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு இந்த பயிற்சியை கொடுத்து பல போட்டிகளில் தங்களுடைய படைப்புகளை காட்சிபடுத்தி பல பரிசுகளை வாங்கி வந்துள்ளனா்.

எனவே இதுவே எனக்கு ஒர பெரிய சந்தோஷசம் தான் என்று புன்னகையுடன் கூறுகிறார் மாற்றுத்திறனாளியான ஓவிய ஆசிரியா் அருணபாலன்.

தொடர்ந்து என்னுடைய படைப்புகளை நான் படைத்து கொண்டே இருப்பேன். திறமைக்கும், உழைப்புக்கும் என்றுமே அழிவு இல்லை.

3

Leave A Reply

Your email address will not be published.