ஆசிரியப்பணியே என் உயிர் மூச்சு- நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்

0
1 full

நாம் சந்தித்த ஆசிரியை நம்மிடம் பேச துவங்கிய போதே… கிட்டதட்ட 7 மணி நேரம் உயிருக்கு போராடி, 18 அறுவை சிகிச்சைகள் செய்து ஆசிரியப்பணியே என் உயிர் மூச்சு என வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் நான், என்று பேச துவங்கினார்.

நான் பஞ்சாபி சிங் சமூகத்தை சேர்ந்தவள், குறிப்பாக ராஜா தேசிங்கு பரம்பரையை சேர்ந்த பெண். எங்கள் சமூகத்தில் பொதுவாகவே பெண்களை அதிகளவில் படிக்க வைக்க மாட்டார்கள். எனவே நான் என் பெற்றோரிடம் அடம்பிடித்து திருச்சி உறையூா் மெத்தடிஸ்ட் ஆசிரியா் பயிற்சி பள்ளியி்ல் விண்ணப்பித்து, ஆசிரியா் படிப்பை முடித்தேன். 1996ஆம் ஆண்டு அரசு வேலை கிடைத்தது. எனக்கு முதல் பணியிடம் முசிறி தாலுக்காவில் உள்ள கிராமத்து அரசு பள்ளியில் சேர்ந்தேன் 2 மாதங்கள் முடிவடைந்த நிலையில் உஸ்காம்பட்டி என்ற பள்ளிக்கு என்னை மாற்றினார்கள்.

1997ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி அன்று பள்ளிக்கு திருச்சியிலிருந்து பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது, சமயபுரம் அடுத்து கரியமாணிக்கம் என்ற இடத்தில் நான் பயணம் செய்த பேருந்தும், எதிரே வந்த மற்றொரு பேருந்தும் சரியாக காலை 6.45 மணிக்கு நேருக்கு நேர் மோதிக் கொண்டது. ஓட்டுநா் இருக்கைக்கு பின் வரிசையில் அமர்ந்திருந்தேன். நானும் என் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு ஆசிரியையம் இடிபாடுகளுக்கிடையே சிக்கிக் கொண்டோம். எங்கு பார்த்தாலும் மரண ஓலம்… ரத்த வெள்ளம்… என் முகத்தில் இரத்தம் வழிந்துக் கொண்டிருக்கிறது… முகத்தை துடைக்கலாம் என்று எண்ணி முயற்ச்சித்தேன்… முடியவில்லை… கைகள் அசைவற்று இருந்தது…

2 full

எலும்புகள் முறிந்திருந்தது… கால்களை பார்த்தேன் இடிபாடுகளுக்கிடையே சிக்கி இருந்தது… மரண வலி என் கண் முன்னே பலா் இறந்திருந்தார்கள்… பலருக்கு படுகாயங்கள் எனக்கோ மயக்கம் வருவது போல் இருந்தது… நானும் செத்துடுவோனோனு நினைச்சேன் பலா் என்னை வெளியே எடுக்க முயற்சித்தனா்… முடியவில்லை நிஜமாகவே நான் எப்படியும் உயிர் பிழைக்க வேண்டும் என்ற மன உறுதி எனக்குள் எழுந்ததது.

தண்ணீா் தாகமாக இருந்தது சும்மா சொல்லக்கூடாது உண்மையாகவே கரியமாணிக்கம் ஊா் மக்கள் இடிபாடுகளுக்கிடையே சிக்கி இருந்த எனக்கு ஒருசிறு பையனை உள்ளே நுழைத்து மோர், கூழ் தண்ணீா் குடிக்க கொடுத்தார்கள்… பேச்சு கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்… ஊக்கம் கொடுத்தார்கள்… ஆறுதல் அளித்தார்கள்… நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. அன்றைய திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்(எஸ்பி) ரமேஷ் குடவாலா வந்து. இடிபாடுகளுக்கிடையே இருந்த என்னை பார்த்து விசாரித்தார்…

தகவல் கேட்டறிந்தார்.. சுமார் 2.30 மணிக்கு வெல்டிங்இயந்திரம் வரவழைக்கப்பட்டு, இரும்பு ராடுகளையும், கம்பிகளையும் வெட்டி எடுத்து என்னை பேருந்திலிருந்து வெளியே எடுத்தார்கள். பாதி மயக்கத்தில் இருந்த என்னை ஆம்புலன்சில் ஏற்றினார்கள். இறந்தவா்களை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கும், உயிர் ஒட்டிக்கொண்டு இருந்தவா்களை திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைப்பதாக பேசிக் கொண்டிருந்தது என் காதில் விழிந்தது…. இதை கேட்டவுடன் என் உள்ளுணா்வு என்னை கண் விழிக்க செய்தது… கண் விழித்து பார்த்தேன் ஆம்புலன்ஸ் போகும் பாதையை கண்ணாடி ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தேன்…

தில்லை நகரை கடந்து செல்வதை உணா்ந்தேன்… அப்பாடி நான் உயிரோடு இருக்கிறேன் புத்தூா் அரசு மருத்துவமனைக்கு தான் என்னை கொண்டு செல்கிறார்கள் என்ற உணா்வுடன் மீண்டும் மயக்கமானேன்…
சுமார் 2 மாதங்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். எலும்புகளில் பல முறிவுகள் இருப்பதாக கூறினார்கள். அறுவை சிகிச்சைகள் முடிந்து சில நாட்கள் கழித்து கண் விழித்தேன்… நான் உயிரோடு இருப்பதை உணா்ந்தேன்… கை, கால்களை அசைக்க முடியவில்லை… நடமாட பல நாட்கள் ஆகும் என்றார்கள்.
கண்களில் கண்ணீர் வழிந்தோடியது…

அதன் பிறகு தனியார் மருத்துவமனைகளில் எடுத்துகொண்டேன் இதுவரை மொத்தம் 18 அறுவை சிகிச்சைகள் கால் முட்டி மடக்க முடியாது கை, கால்களில் இரும்பு ராடுகள் தான்… நான் பள்ளிக்கு சுமார் 1 வருடம் ஊதியம் இல்லாவிடுப்பு எடுத்தேன். கருணை அடிப்படையில், என்னை திருச்சி எடலைப்பட்டிபுதூா் ஊராட்சி நடுநிலைப்பள்ளிக்கு பணி மாறுதல் செய்தார்கள், மீண்டும் ஆசிரியப்பணியில் சோ்ந்தேன்… 1997 முதல் 2017 வரை இதே பள்ளியில் 5ஆம் வகுப்பு ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என்றார்.

விபத்து, அறுவை சிகிச்சை, உயிர் பிழைப்பு என்று பல கட்டங்களை தாண்டி மீண்டும் ஆசிரியப்பணியில் இணைய இறைவன் எனக்கு மறுஜென்மத்தையும், புதிய வாழ்க்கையையும் கொடுத்திருக்கிறார். சரிவர நடமாட முடியாவிட்டாலும், இயங்க முடியாவிட்டாலும். இந்த ஆசிரியா் பணி ஒன்று தான் எனக்கு மிக்பெரிய ஆறுதல்…

என் வகுப்பு பிள்ளைகளை பார்த்தவுடன் என் மனவலி எல்லாம் பறந்து போய்விடும்… என் 5ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு என்னால் இயன்ற அனைத்தையும் சொல்லித்தருவேன். இந்த 20 ஆண்டுகளில் என் 5ஆம் வகுப்பு மாணவா்கள் என்றுமே எதிலும் சோடை போனது கிடையாது… பாட்டு, நடனம், ஆங்கிலம் பேசுதல், எழுதுதல், உச்சரிப்பு, பேச்சு போட்டி, சமூக சேவை, சிந்தனை என எல்லாவற்றிலும் சிறந்து விளங்கும்படியாக நான் செயலாற்றி வருகிறேன். இதுமட்டுமல்லாமல், என்னால் இயன்ற வரை எனக்கு நன்கு அறிமுகமானவா்களிடம் என் வகுப்பு மாணவா்களுக்கு கல்விக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்திருக்கிறேன் நோட்டு புத்தகங்கள், அகராதி, விளையாட்டு பொருட்கள், அவ்வப்போது பரிசுகள் என என் வகுப்பு பிள்ளைகளை ஊக்கப்படுத்தி கொண்டே இருப்பேன்…

உடல்நிலை சரியாக இல்லாவிட்டாலும், பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல் எப்படியாவது வந்து விடுவேன்.. எனக்கு என் உடன் ஆசிரியா்களும், தலைமை ஆசிரியா் அவா்களும் எப்போதுமே உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.

என் வகுப்பு மாணவா்கள் கலந்து கொள்ளாத போட்டிகளே கிடையாது… வாங்காத பரிசுகளே கிடையாது ஒவ்வொரு குடியரசு மற்றும் சுதந்திர தினத்தன்றும் மாநகராட்சியில் நடைபெறும் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசு வாங்காமல் வரமாட்டார்கள்… இது தான் சார் என்னை இன்னும் நடமாட செய்கிறது என்றார்..

ஒரு தாயாக செவிலியாக, நண்பனாக இருக்கும் என் கணவா் பாலாஜி சிங் அவா்களால் தான் என் மகன் 5ஆம் வகுப்பு படிக்கும் போது, எனக்கு இந்த விபத்து ஏற்பட்டது. படுத்தபடுக்கையாக இருந்த காலக்கட்டத்திலிருந்து, என் நிலைமையை புரிந்துக் கொண்டு என் கணவா் மற்றும் பெற்றோரின் அறிவுரைப்படி தானாகவே படித்து. தற்போது இளங்கலை பொறியியல் முடித்து மேற்படிப்பு படிக்கிறார். திருச்சி ரயில்வே பிரிண்டிங் பிரஸ்சில் கிளார்க்காக பணியாற்றும் என் கணவா் தான் எனக்கு எல்லாமே….

உயிர் மட்டும் தான் என்னிடம் இருக்கிறது… உடைந்த கை, கால்களுக்கு கால்களாகவும், கையாகவும், சிதைந்த மனதிற்கு மருந்தாக இருந்து கொண்டிருக்கிறார்… இன்னும் சொல்லப்போனால், பல நல்ல உள்ளங்கள் எனக்கு உறுதுணையாகவும், ஆறுதலாகவும், இருந்து வருகிறார்கள் என்றார்.

எல்லா ஆசிரியா்களும் உற்சாகப்படுத்துவாங்க… பெற்றோர்கள் வந்து என் பையன்கிட்ட இப்போ ரொம்ப மாறுதல் தெரியுது என்பார்கள். பல சமூக அமைப்புகள் விருது, நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்… இதற்கெல்லாம் மணிமகுடமாய் சென்ற ஆண்டு (2016) சிறப்பான ஆசிரியா் பணிக்காக டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு பாராட்டு விருது நற்சான்றிதழ் வாங்கும் போதும், இறைவன் எனக்கு உயிர் பிழைக்க வைத்தது காரணமில்லாமல் இல்லை… இந்த ஆசிரியா்கள் பணியை அா்ப்பணிப்போடு செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக தான் என்று எனக்குள் மகிழ்வேன் கடவுள் எனக்கு கொடுத்த பரிசு. தான் இந்த ஆசிரியா் பணி என்றார்.

தற்போது பணியாற்றும் திருச்சி எடமலைப்பட்டிபுதூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியைச் சுற்றி பார்த்துவிட்டு, அவருடைய 5ஆம் வகுப்பையும் பார்த்துவிட்டு அவருடன் பணியாற்றும் சக ஆசிரியா்களையும் சந்தித்துவிட்டு, ‘ntrichy.com’ வார இதழ் சார்பாக நல்வாழ்த்துக்கள் கூறி விடைபெற்று வந்தோம்.

3 half

Leave A Reply

Your email address will not be published.