பத்திரிக்கையாளர் கே.ஜி.மகாதேவா

0
1

திருச்சியின் அடையாளம். தமிழகத்தின் இரண்டாம் தலைநகரான ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் பல அடையாளங்களுடன் நிமிர்ந்து நின்றுள்ளது. இங்கே வாழ்ந்தவர்கள் ஏராளம். மக்கள் மனதில் நிலைத்து நின்ற பலர் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டங்களின் அடையாளங்களாக விளங்கினார்கள். அந்த அடையாளங்களை ntrichy.com வார இதழ் மூலம் திரும்பிப் பார்த்து வருகிறோம் அந்த வரிசையில்….

பத்திரிக்கையாளர் கே.ஜி.மகாதேவா இலங்கை மட்டக்களப்பில் பிறந்தவர். யாழ்ப்பாணம் சுன்னாகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ஈழகேசரி பத்திரிக்கையில் மகாதேவாவின் சித்தப்பா வித்துவான் வி.சீ.கந்தையா கிழக்குத் தபால் என்று கடிதம் அனுப்பிக் கொண்டிருந்ததைப் பார்த்து தனக்கும் எழுத வேண்டும் என்று ஆர்வம் வந்ததால் பதினொரு வயதில் ஈழகேசரி மாணவர்மலர் எழுதத் தொடங்கியவர் கல்லூரி முடிக்கும் வரையில் இதைத் தொடர்ந்திருக்கிறார்.

மட்டக்களப்பில் கல்லூரியை முடித்து யாழ்ப்பாணம் ஸ்டான்லி வித்தியாலயத்தில் படிக்கத் தொடங்கியவுடன் இலங்கையின் முன்னணி பத்திரிக்கைகளான “தினக்குரல்” வீரகேசரியிலும் எழுதத்தொடங்கியிருக்கிறார்.

2


1959ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து வாரப்பத்திரிக்கையாக வெளிவந்து கொண்டிருந்த “ஈழநாடு” பத்திரிக்கை சிலகாலத்திற்குப் பிறகு வாரமிருமுறையாக மாற்றப்பட்டு பின்பு 1961 முதல் தினசரியாக வெளிவரத் தொடங்கியது. இதில் முதல் பத்திரிக்கையாளனாக கே.ஜி.மகாதேவா சேருகிறார். இங்குதான் தன்னை ஒரு சிறந்த பத்திக்கையாளனாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

சிறுகதை, நாவல், கவிதை எழுதுவரை விட செய்தி எழுதுவதையே அதிகம் விரும்பியிருக்கிறார். செய்தி எழுதுவரையே தனக்கு உற்சாகம் தருவதாக குறிப்பிட்டுள்ளார். “ஈழநாட்டில்” பணியாற்றிக் கொண்டிருந்தபோது கண்டியிலிருந்து “செய்தி” என்ற பத்திரிக்கையை வெளியிட்டுவந்த ரா.மு. நாகலிங்கத்திடமிருந்து அழைப்பு வந்ததைத் தொடர்ந்து 10 ஆண்டுகள் செய்தி இதழில் பணியாற்றியிருக்கிறார்.

4

இக்காலக்கட்டத்தில் சிலம்புச்செல்வர் ம.பொ.சி., கலைமகள் கி.வா.ஜகந்நாதன், நாராயணத்துரைக்கண்ணன், ஔவை டி.கே.சண்முகம் போன்றோரின் தொடர்பு ஏற்பட்டு பல செய்திகளை செய்தி இதழில் எழுதியிருக்கிறார்.

1976ல் தி.மு.க. அரசு கலைக்கப்பட்ட போது கலைஞர் அவர்களை அவரது கோபாலபுரம் வீட்டில் சந்தித்து நேர்காணல் செய்திருக்கிறார். 1981ஆம் ஆண்டு ஜுன் மாதம் யாழ் “ஈழநாடு” அலுவலகக் கட்டிடம் அரச கமாண்டோ படையினரால் எரிக்கப்பட்டபோது மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறார். பிறகு மீண்டும் 1988ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய அமைதிப் படைக்கு ஆதரவாக செயல்பட்டார் என தெரிவிக்கப்பட்ட குற்றம் காரணமாக விடுதலைப் புலிகளால் “ஈழநாடு” பத்திரிக்கையின் முழு அலுவலகமும் குண்டு வைத்து தாக்கப்பட்ட போதும் தப்பித்துள்ளார்.

இப்படித் தொடர் போராட்டங்களுக்குப் பிறகு இனக்கலவரத்தின் தீவிரத்தால் தனது குடும்பத்துடன் தமிழகத்திற்கு புலம் பெயர்ந்து வந்து இங்கிருந்தபடி இருபத்தைந்து ஆண்டுகளாக இலங்கை பத்திரிக்கைகளில் எழுதிவந்துள்ளார். தனது சுயசரிதையை “நினைவலைகள்” என்ற நூலாகவும் “ஈழ நாடு” பத்திரிக்கையில் “ஊடுருவி” எனும் பெயரில் தினமும் “இப்படியும் நடக்கிறது” எனும் தலைப்பில் எழுதியவற்றை “கதையல்ல நிஜம்” என்ற நூலாக வெளியிட்டுள்ளார். மேலும் தமிழக அரசியல்வாதிகள், இலக்கிய ஆர்வலர்கள், தமிழ் அமைப்பினர் என பலருடைய நேர்காணல்களை தொகுப்பு நூலாக வெளியிட்டுள்ளார்.

தனது இறுதி மூச்சு வரையில் திருச்சி கருமண்டபம் பகுதியில் இருந்தவாறு எழுதி வந்த வந்த மகாதேவா 11.09.2016ல் உடல் நலக்குறைவினால் தனது எழுத்துப்பணியையும் மூச்சையும் நிறுத்திக்கொண்டார்.
மீண்டும் அடுத்தவாரம் இன்னொரு ஆளுமை குறித்து தெரிந்துகொள்வோம்…

ஒருங்கிணைந்த திருச்சியின் அடையாளங்கள் பற்றின முந்தைய தொகுப்புகளை ஆன்லைனில் http://nammatrichyonline.com இணையதளத்தில் பார்த்து படித்து கொள்ளலாம்.

3

Leave A Reply

Your email address will not be published.