டோல்கேட் கொள்ளை

0
1 full

சுங்கச்சாவடிகளின் செயல்பாடுகள் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் மோசமாகத் திட்டியுள்ளனர்.

மதுரை மேலூரைச் சேர்ந்த பழனிகுமார் என்பவர், தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலை 67-ல் பெட்டவாய்த்தலை முதல் குளித்தலை வரை மணல் குவாரிகள் சாலையின் இருபுறமும் நிறுத்தப்படுவதால் தேசிய நெடுஞ்சாலையில் கட்டணம் செலுத்தி பயணம் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த ஜூன் 17-ம்தேதி அந்த வழியாகப் பயணம் செய்தபோது சுமார் 10கிலோ மீட்டர் தொலைவில் 700-க்கும் அதிகமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த லாரிகள் அனைத்தும் காவிரி ஆற்றிலிருந்து மணல் அள்ளுவதற்காக நிறுத்தப்பட்டிருந்தன. சாலையைப் பயன்படுத்த, பணம் வசூலித்துக் கொண்டு லாரிகளை நிறுத்த அனுமதிப்பது சட்டப்படி தவறு. அதனால் பெட்டவாய்த்தலை முதல் குளித்தலை வரையிலான தேசிய நெடுஞ்சாலை பகுதியில் லாரிகளை நிறுத்த அனுமதிக்கக் கூடாது என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணையில், டோல்கேட் மையங்களின் தேசிய நெடுஞ்சாலைதுறையின் திட்ட இயக்குநர்கள் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

2 full

இந்நிலையில் அந்த மனு, கடந்த 13-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது, இந்தமனுவை விசாரித்த, நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, தேசிய நெடுஞ்சாலைத்துறையின் தலைமை பொதுமேலாளர் நேரில் ஆஜராகி, சுங்கச் சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அதைக்கேட்டுக் கடுப்பான நீதிபதிகள், பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் ரவுடிகளும், சமூக விரோதிகளுமே பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயணிகளை அச்சுறுத்துவதுபோல் நடக்கிறார்கள் எனக் கூறினர், மேலும், தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடும் சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? என்றார்கள். சுங்கச்சாவடி ஒப்பந்தங்களைப் பெரிய நிறுவனங்களிடம் வழங்கிவிட்டு தற்போது நடவடிக்கை எடுக்காத நிலையில் அரசு இருப்பதாகக் கூறிய நீதிபதிகள், தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் இயங்க முறையான திட்டங்கள் இல்லை என்றதுடன், கேரளாவில் சுங்கச்சாவடிகளில் தவறு நிகழ்ந்தால் அந்த மாவட்ட ஆட்சியரே நடவடிக்கை எடுப்பார். அப்படியான நடைமுறை திருச்சியில் இல்லை. மேலும் சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ் செல்லத் தனி வழி இல்லை என்றும் நோயாளிக்கு ஒவ்வொரு நொடியும் முக்கியமானது எனக் கூறிய நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.

அப்போது, சுங்கச்சாவடிகளில் மிக நீண்ட வரிசையில் நிறைய நேரமாகக் காத்திருக்கும் வாகனங்கள் 3 நிமிடங்களுக்கு மேல் நின்று கொண்டிருந்தால், அந்த வாகனம் சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்கிற விதியைச் சுங்கச்சாவடிகளில் பயன்படுத்தப்படுகிறதா என்கிற கேள்வியை முன்வைத்தார்கள்.
இப்படியான சூழலில், தஞ்சை-திருச்சி வாழவந்தான்கோட்டை சுங்கச்சாவடியில் இருக்கும் 4டிராக்குகளில் இரண்டை மூடிவைத்து செயற்கையாக நெரிசலை உருவாக்குவதாகக் குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.
இனி பேப்பர் பில் இல்லை

‘சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையாக நின்று கட்டணம் செலுத்தும் முறை முடிவுக்கு வர இருக்கிறது. இதன் முதற்கட்டமாக நாடு முழுவதும் உள்ள 360 சுங்கச்சாவடிகளில் காகிதமற்ற முறையில் சுங்க கட்டணம் செலுத்தும் வகையில் மின்னணு சுங்க கட்டண முறை வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்தக் கட்டண முறை படிப்படியாக அனைத்து சுங்கச்சாவடிகளுக்கும் கொண்டு வரப்படும். இதற்காக இரண்டு வங்கிகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.

மேலும், தற்போது 96 ஆயிரம் கி.மீ. ஆக உள்ள தேசிய நெடுஞ்சாலையின் தூரத்தையும், அடுத்த 3 மாதத்திற்குள் 1.52 லட்சம் கி.மீ.ஆக உயர்த்தவும் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது” என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்.

அதேபோல் இந்தியா முழுவதும் நான்கு வழிச்சாலைகளில் 60 கிலோ மீட்டருக்கு ஒன்று என்ற கணக்கில் 386 டோல்கேட்டுகள் உள்ளன. இந்த டோல்கேட்டுகளில் சிலவற்றைத் தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் நேரடியாகவும் பல டோல்கேட்டுகளை தனியாரும் வசூல் செய்கிறார்கள்ச அதிலும் தமிழகத்தில் மொத்தம் 41 சுங்கச்சாவடிகள் உள்ளன.

அவற்றில், தனியார் வசம் 29 சுங்கச்சாவடிகளும் நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 12 சுங்கச்சாவடிகளும் இயங்கி வருகின்றன. கடந்த வருடம் செப்டம்பர் மாதம், 25 சுங்கச்சாவடிகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இப்போது, மீதமுள்ள 16 சுங்கச்சாவடிகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. முறையே தேசிய நெடுஞ்சாலைகள் கட்டணம் (நிர்ணயம் மற்றும் வசூல்) விதிகள் 2008 என்ற விதிகளின்படியே சுங்கக்கட்டணம் திருத்தி அமைக்கப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு ஆணையின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் அந்தக் கட்டணம் தானாகத் திருத்தப்படும் எனத் தேசிய நெடுஞ்சாலை கூறுகிறது.

எல்லா டோல்கேட்களிலும் எடை நிலையம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எங்கும் அது செயல்படுத்தப்படவில்லை. இதற்குக் காரணம், டோல்கேட் ஒப்பந்தம் எடுத்திருக்கும் நிறுவனங்களின் லாரிகள்தான் அதிகமான பாரங்களை ஏற்றிச்செல்கின்றன.

இதை நடைமுறைப்படுத்தினால் அவர்களுக்குப் பிரச்சினை ஏற்படும். தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் இணையதளத்தில் டோல்கேட்டுகளை நிர்வகிக்கும் நிறுவனத்தின் பெயர், திட்டத்தின் தகவல்கள், பொறுப்பாளர் பெயர்களை வெளியிட வேண்டும் என்கிற சட்டத்தை பெரும்பாலான நிறுவனங்கள் மதிப்பது இல்லை.

மேலும் திருச்சி சுற்றியுள்ள சுங்க சாவடிகளின் தில்லாலங்கடிகள் இதோ.
தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சியை சுற்றி, திருச்சி –சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி சமயபுரத்திலும், திருச்சி –தஞ்சை நெடுஞ்சாலையில் துவாக்குடியிலும், திருச்சி- மதுரை சாலையில் பூதகுடி என்னும் இடத்திலும் திருச்சி –திண்டுக்கல் சாலையில் வையம்பட்டியை அடுத்துள்ள பொன்னம்பலபட்டிகளில் டோல்பூத்கள் அமைந்துள்ளது.

அதோடு, பெரம்பலூரை அடுத்த திருமாந்துறை,, உளுந்தூர் பேட்டை அடுத்த செங்குறிச்சி ஆகிய இடங்களிலும் டோல்பூத் இயங்குகின்றன.
உயிர் பயத்தில் திருச்சிவாசிகள்.

திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையாக மாற்றும் பணியை ஆந்திராவைச் சேர்ந்த திருச்சி–தஞ்சை எக்ஸ்பிரஸ் வே லிமிட் எனும் நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் பணிகளை லூயிஸ் பெர்கர் குரூப் இன்டஸ்ட்ரி நடைமுறைப் படுத்தி வருகின்றது.

இந்த நிறுவனம் பணி முடிவடைந்து விட்டது என்று கடந்த ஓராண்டுக்கு மேலாக துவாக்குடி அருகே சுங்கச்சாவடி அமைத்து வாகனங்களுக்குக் கட்டணம் வசூல் செய்து வருகிறது. திருச்சி திருவெறும்பூர் பகுதிதான் திருச்சிக்கு தொழில் மையமான இடம், இங்குதான் திருச்சி பெல் நிறுவனம், துப்பாக்கித் தொழிற்சாலை, தொழில்நுட்பப் பூங்கா, தேசிய தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்ட தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள் இருக்கின்றன.

இப்படி முக்கியமான பகுதியாக விளங்கும் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பணிகள் இதுவரை முடியவில்லை. திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைக்கவில்லை. சாலையில் ஹெல்ப்லைன் வசதிகள் கூட இல்லை.

திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி முதல் பழைய பால்பண்ணை வரை சர்வீஸ் சாலை இல்லாததால் ஒவ்வொரு நிமிடமும் மக்கள் வாகனத்தில் பயணம் செய்யும்போது உயிரைப் பிடித்துக்கொண்டுதான் செல்கிறார்கள். தினமும் திருச்சி பால்பண்ணை, துவாக்குடிவரை உள்ள 15கிலோமீட்டருக்குள் 10க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துவிடுகின்றன. கடந்த 2007ம் ஆண்டு திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் மற்றும் விபத்துகளைக் குறைக்க, நான்குவழிச் சாலையாக மாற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் இன்று சர்வீஸ் சாலை பணிகள் கூட முடியவில்லை. மேலும் இந்த நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையாக மாற்றிய பிறகுதான் விபத்துகள் அதிகமாகியுள்ளது. இதுவரை 8ஆயிரத்திற்கும் அதிகமான விபத்துக்கள் நடந்துள்ளது. அதில் 3ஆயிரம் பேர் இறந்துள்ளார்கள். பல கை,கால்களை இழந்து வாழ்க்கையைத் தொலைத்துள்ளார்கள். சர்வீஸ் ரோடு அமைக்க முதல்வர் ஜெயலலிதா ரூ.84.50 கோடி நிதி ஒதுக்குவதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வந்து 6 ஆண்டுகளுக்கு சர்விஸ் சாலைகள் கிடப்பில்தான் கிடக்கின்றன.இதற்காக மக்கள் பலவிதமான போராட்டங்கள் நடத்தியும் கிடப்பில் உள்ளது மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. கட்டணம் வசூல் செய்வதில் குறியாக உள்ளது திருச்சி –தஞ்சை எக்ஸ்பிரஸ் வே லிமிட் நிறுவனம் என்கிறார்கள்.

மேலும் திருச்சி சமயபுரத்தில் உள்ள டோல்பூத்தை ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்து நவயுகா இன்ப்ரா புராஜக்ட்ஸ் பி லிமிட் எனும் நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. அடுத்து ஸ்மித் இன்டியா எனும் நிறுவனமும் இந்தப் பகுதிகளுக்கான பணிகளைச் செய்கின்றன. 140 பேர் பணியாற்று இந்த டோல்பூத்தில் ஆட்களைத் தேர்வு செய்யும்போதே கோஷ்டி சேரக்கூடாது,வேலை உறுதி செய்ய கோரி, கோஷம் போடவோ, போராட்டத்தில் ஈடுபடவோ கூடாது என எழுதி வாங்கிக்கொண்டுதான் வேலையில் சேர்த்துள்ளார்கள்.

ஒருவருடத்திற்கு ஒரு முறை பணி செய்பவர்கள் உடனாட ஒப்பந்தம் ரினிவல் செய்யவேண்டும் என்பதால், பணியாளர்களைக் கண்காணித்து சம்பள உயர்வு கேட்பவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள் என்றும், ஒருவருட ஒப்பந்தத்தை ஆறுமாதமாக மாற்றி இந்து நவயுகா இன்ப்ரா நிறுவனம் வஞ்சிப்பதாகத் தொழிலாளர்கள் புலம்பல் கேட்கிறது.

கூடவே தமிழகம் முழுவதும் வாகனங்களுக்காக டோல் கட்டணங்கள் குறைத்தபோது சமயபுரம் டோல்பூத்தில் மாத கட்டணம் மட்டும் குறைக்கப்பட்டது,

ஆனால் தனி நபர் வாகன கட்டணம் குறைக்கவில்லை. டோல்கட் ஒட்டியுள்ள இனாம் சமயபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட ஒத்தக்கடை,மாணிக்கபுரம், செளமியா நகர், ராகவேந்திரா நகர், ச.புதூர் வாகனங்களுக்குக் கூட கட்டணம் வசூலிப்பதால் அந்தப் பகுதி மக்கள் தங்கள் ஊருக்குக் கட்டண விலக்கு வேண்டும் எனக் கோரிக்கை வைத்து மனுக்கள் கொடுத்த காத்திருந்தாலும் கேட்பதற்கு நாதியில்லை எனப் புலம்புகிறார்கள்.

இதுவரை ஆயிரக்கணக்கான மேற்பட்ட விபத்துக்கள் நடந்தும் கூட 255 விபத்துக்கள் இந்து நவயுகா இன்ப்ரா புராஜக்ட்ஸ் பி லிமிட் நிறுவனம் சொல்கிறது. தினமும் கோடிக்கணக்கான வருவாயைச் சம்பாதிக்கும் இவர்கள் உள்ளூர்க்காரர்களுக்கு கூட கட்டணவிலக்கு அளிக்க மறுக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் மாற்றுத்திறனாளி ஒருவரின் வாகனத்தைக் கட்டணம் செலுத்தவில்லை என மறித்துக்கொண்டார்கள்.

மாற்றுத்திறனாளிகளின் வாகனத்திற்குக் கட்டண விலக்கு உண்டு என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் எந்த அரசு உத்தரவையும் மதிக்காமல் அந்த நபரை அலைக்கழித்தார்கள். இவர்களுக்கு எதிராக எந்த மனுகொடுத்தாலும் நடவடிக்கை இருக்காது என அந்தப் பகுதி வாசிகள் புலம்புவதை கேட்க முடிந்தது.

நீதிமன்றங்கள் எத்தனை முறை உத்தரவுப் போட்டாலும், இந்த டோல் பிளாசாக்கள் திருந்தப் போவதில்லை. இதை அரசுகளும் கண்காணிக்கப்போவதில்லை.

-ப.பிரியதர்ஷன்

3 half

Leave A Reply

Your email address will not be published.