வறுமைக்கு நிறம் இல்லை

0
1 full

இந்த தலைப்பிற்கு பின்னால் ஒரு சாமானியனின் உழைப்பும் அந்த உழைப்பின் பயனை தற்போது அனுபவித்து கொண்டிருக்கும் ஒரு 80 வயதை கடந்த சாதனையாளரை பற்றியது தான் இந்த கட்டுரை

திருச்சி ரங்கம் ராகவேந்திர மண்டபத்திற்கு அருகில் ஒரு பழமையான வடிவமைப்பில் உள்ள வீட்டிற்க்குள் உணவகம் நடத்தி வரும் கோபால அய்யங்காரை சந்தித்தோம்.

80 வயதை கடந்து தெளிவான வார்த்தை, தடுமாறாத பேச்சு, தளராத நடை என்று இன்று இளமையோடு காட்சியளித்தார். நம்ம திருச்சி இதழுக்காக நேரில் சந்தித்து பேசியபோது அவா் கூறிய தகவல்கள் நம்மை சற்று உணா்வு பூர்வமாக தாக்கியது.

2 full

அவருடைய வாழ்க்கை பயணம் கிளியநல்லூர் கிராமத்தில் ஆரம்பித்தது. வெங்கட்ராமன் அய்யங்கார் மிராசுதாரா இருந்தாரு விவசாயம் தான் பிரதான தொழில், சம்பாதித்து சேத்து வைத்த சொத்து எல்லாவற்றையும் மக்களுக்கு தானம் தருமம் பண்ணி செலவு செய்தாரு எங்களுக்குனு எந்த சொத்தும் சேத்து வைக்கவில்லை. உடன் பிறந்தவா்கள் 3 தம்பிகள் அவா்கள் எல்லாம் படிச்சு வேலைக்கு போய்டாங்க. நான் மட்டும் தான் சொந்த தொழில் துவங்கி நடத்தி வருகிறேன்.

இந்த இடத்திற்கு வருவதற்கு முன்பு நான் ஒரு இடத்தில் வேலைகாரன் தான், எனக்கு படிப்பு மீது ஆர்வம் இல்லை, படிக்கவும் விருப்பம் இல்லை, 13 வயதில் வீட்டை விட்டு வெளியே வந்தேன். என்ன பண்ணுறதுனு யோசிச்சப்ப மாருதி மருத்துவமனைக்கு அருகில் ஓலை குடிசையில் ஒரு ஹோட்டல் இருந்துச்சு அங்க வேலைக்கு சேர்ந்து முதன் முதலா 50 பைசா சம்பளம் வாங்கினேன். அங்கு 2 வருடங்கள் கடந்து போனது. அங்கிருந்து தென்னூா் கபே கடைக்கு போனேன் அங்க தான் முதன்முதலா மணி அய்யரிடம் தொழில் கத்துகிட்டேன், 3 வருடம் அங்க வேலை பாத்தேன்,

அதன்பிறகு தஞ்சை மணிஸ் கபேல வேலைக்கு சேர்ந்தேன் அங்கு 2 வருடம் நாராயண சாமி அய்யா் உதவி புரிந்தார், மதுரை உடுப்பி கிருஷ்ணன் ஹோட்டல் 3 வருடம், மதுரை மனோரமா ஹோட்டல் 3 வருடம், கிட்டதட்ட 30 வருடங்கள் மதுரையில் உள்ள பல கடைகளில் வேலைகாரனாக இருந்துருக்கேன்.

திருமணம்
ஊரெல்லாம் சுற்றி திரிந்து மீண்டும் திருச்சிக்கு வந்தேன் 24 வயதில் சொந்தமா தொழில் துவங்கினேன், அதன்பிறகு அதில் நட்டம் ஏற்பட்டதால் இங்கிருந்து மீண்டும் மதுரைக்கு புறப்பட்டு சென்றேன். 1967 ல் எனக்கு வயது 29 பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் திருமணம் நடந்தது. காதல் திருமணம் தான், அதுவும் எங்களுடைய சமூகத்தை சேர்ந்த பெண் தான், ஆனா எங்கள் வீட்டில் அதுக்கும் எதிர்ப்பு இருந்துச்சு, திருமணமாகி நான் மதுரையில வேலை பார்த்துகிட்டு இருந்தேன். வறுமை கோட்டின் கீழ் வாழ்வது என்ற வரிகளை வெறும் புத்தகத்திலும், புள்ளி விவரங்களிலும் தான் பார்த்திருப்பார்கள் நான் அதை முழுமையாக அனுபவித்தேன்.

அந்த வறுமை கோடு என்பதை தாண்டி சென்ற ஒரு நபா் என்றால் அது நான் தான். ஆனால் அந்த காலகட்டத்தில் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து கொண்டிருந்த போது மதுரையில் சொந்தமாக தொழில் செய்ய முயற்சி செய்த போது தாஜ் ஆப்டிக்கல்ஸ் நடத்திவந்த பாஹவுதீன் என்ற இஸ்லாமிய நண்பா் என்னுடைய தொழிலுக்கு முழுமையாக உதவி செய்தார். அன்று முதல் இரண்டு குடும்பங்களும் இணைந்தே வாழ்ந்தோம். என்னுடைய மூத்த மகன் ரமேஷ் அவருடைய வீட்டில் தான் வளா்ந்தார்.

அவருடைய பிள்ளைகள் என்னுடைய வீட்டில் வளா்ந்தனா். இப்படியே 30 வருடங்கள் மதுரையில் காலம் கடந்து 50 பைசாவில் ஆரம்பித்த சம்பளம் 25, 100 என்று சம்பளம் வாங்கினேன். அனைத்து சமையல்களையும் ஏகலைவனாக பார்த்து கற்றுக்கொண்டேன்.

திருச்சியில் கோபால அய்யாங்கார்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் குடியேறிய நான் ராகவேந்திர குடில் அருகில் சிறிய குடிசையில் 1987 ல் முதலில் சுக்கு மல்லி காபி, டீ, வடை போட்டு விற்பனை செய்தேன், அதனை தொடர்ந்து அந்த கடையில் மதிய உணவு பொட்டலங்கள் செய்து விற்பனை செய்தோம்.

அதன்பிறகு வெளியே சமைத்து கொடுக்க ஆரம்பித்தோம். நாளுக்கு நாள் தொழில் விருத்தியடைந்ததால், அங்கிருந்து பெரிய அளவிலான இடத்திற்கு எங்களுடைய தொழிலை மாற்றினோம் 1995ல் தற்போது உள்ள இந்த இடத்திற்கு வந்தோம். என்னுடைய சிறப்பு என்றால் நான் வைக்கும் சாம்பார் தான். நாங்கள் ருசியாக சமைத்து வழங்க எனக்கும் வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை கூடியது. தற்போது இந்த ஹோட்டலை எனது மகன் ஹோட்டலை நிர்வகித்து வருகிறார். எனக்கு 3 மகன்கள், 2 மகள்கள், மனைவி ஜெயலட்சுமியும் இணைந்து தொழிலை கவனித்து வருகிறார்.

உணவு மட்டுமின்றி பொடி வகைகள், ஊறுகாய், உள்ளிட்டவைகள் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனா்.

மதநல்லிணக்கம்…
என்னுடைய வறுமையில் எனக்கு உறுதுணையாக இருந்த பலரில் முக்கியமானவா் பாஹவுதீனும் அவரது மனைவி கபியாபேகம் தான்.
அவர் மறைவுக்கு பிறகு இன்றும் நாங்கள் குடும்ப நண்பா்களாகவே தொடருகிறோம். ரம்ஜான் பண்டிகைக்கு ரமேஷ்க்கு அவர் முதன் முதலாக கொடுத்த 5 ரூபாய் நோட்டுகளை நான் இன்றும் அவருடை படத்துடன் பிரேம் செய்து வைத்துள்ளேன். மதம் முக்கியமில்லை மனம் தான் முக்கியம், தற்போது ஹோட்டலில் அவருடைய படமும் அவருடைய மனைவியின் படமும் வைத்துள்ளோம். ஒவ்வொரு வருடமும் அவருடைய நினைவு நாளை நினைவு கூறுவோம்.

நான் மறக்க முடியாத வலி என்றால் என்னுடைய வறுமையை போக்க நான் ஓடிய ஓட்டம் தான் என்னுடைய நினைவுக்கு வருகிறது.

என்னுடைய மகிழ்ச்சி என்றால் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக வறுமை என்னை தொடராமல் இருக்க தொடர்ந்து ஓடி இன்று நான் ஓய்ந்து இருக்கிறேன். இந்த ஓய்வு என்பதை நான் மகிழ்ச்சியானதாக கருதுகிறேன். அதிலும் என்னுடைய பேரன், பேத்திகளுடன் வாழ்வது தான் எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.

3 half

Leave A Reply

Your email address will not be published.