பன்மொழி அறிஞர் எம்.சுப்புராமன் என்ற எம்.எஸ்.நாடார்

0
D1

“அறம் வழியே பொருள் தேடி இன்பம் பெற்றே அகம்மலர இல்வாழ்வு வாழ என்றும் திறம் பெற்றீர்! பெறற்கரிய இன்ப வாழ்வு!” என்று வாழ்வாங்கு வாழ்ந்தவர் எம்.சுப்புராமன் என்ற இயற்பெயர் கொண்ட எம்.எஸ்.நாடார் அவர்கள். இவர் மீனாட்சி நாடார் காளியம்மையார் தம்பதியரின் மகனாக 28.9.1924ஆம் ஆண்டு பிறந்தார்.

ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் பின்னர் தாம் பயின்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஆந்திர பல்கலைக்கழகம், கர்நாடகப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆங்கிலப் பேராசிரியராகப் பல காலம் பணியாற்றியுள்ளார். ஆங்கில இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, பெர்னாட்ஷா மற்றும் ஷேக்ஸ்பியரின் படைப்புகளை மேடை தோறும் முழங்கியவர். இதன் காரணமாக “ஷேக்ஸ்பியர் நாடார்” என்ற சிறப்புப் பெயரையும் பெற்றவர்.


1945 முதல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து முக்கிய பொறுப்பு வகித்தார். 1962இல் ப.ஜீவானந்தம் தொடங்கிய தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றத்தை திருச்சிராப்பள்ளி நகரில் சிறப்புற வளர்த்த முன்னோடித் தலைவர்களில் எம்.எஸ்.நாடார் அவர்களும் ஒருவர். 1961இல் குமரி தனிப்பயிற்சிக் கல்லூரியை நிறுவி நகரில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குப் பாடுபட்டார். திருச்சிராப்பள்ளியில் இயங்கும் சிறந்த தனிப்பயிற்சி நிறுவனமாக இது விளங்குகின்றது.

D2
N2

நாடார் அவர்கள் பன்மொழி அறிஞராகவும் திகழ்ந்தார். ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், பிரஞ்சு மொழிகளில் புலமை மிகுந்தவர். பேச்சாற்றலிலும் வல்லவர். நகரில் நடைபெற்ற இலக்கிய கூட்டங்கள், கவியரங்கங்கள், பட்டிமன்றங்களில் இவரது பேச்சுவன்மை பலரையும் வியக்க வைத்தது. பல்வேறு மலர்களில் இவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் இவரை மிகச் சிறந்த எழுத்தாளராகவும் படம் பிடித்துக் காட்டியது. சிறந்த நடிகராகவும் திகழ்ந்தார். இவர் நடித்த ஷேக்ஸ்பியர் நாடகங்கள் அறிஞர் பெருமக்களின் பாராட்டுதல்களைப் பெற்றன. கலை இலக்கியப் பெருமன்ற மாநாடுகளில் தொடர்ந்து இவரது நாடகங்கள் இடம் பெற்றுள்ளன.

வானொலியில் ஒலிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இவர் நேர்முக வருணனையாளராக இருந்து நிகழ்ச்சிகளைச் சிறப்பித்துள்ளார்.
கவிஞர் திருலோகசீதாராமனோடு இணைந்து தேவ சபை என்ற அமைப்பைத் தோற்றுவித்து பல இலக்கியக் கூட்டங்களை நடத்தியவர்.

உபநிடதங்களை மொழிபெயர்த்து நல்ல மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கியவர். கலைக்கடல், கல்விக்கடல், பன்மொழிப் புலவர், செந்தமிழ் ஷேக்ஸ்பியர் போன்ற பட்டங்களைப் பெற்ற எம்.எஸ்.நாடார் அவர்கள் 16.3.1999 அன்று மரணமடைந்தார். இவரால் நிறுவப்பட்ட குமரி தனிப் பயிற்சி கல்லூரியை இவரின் மனைவி நடத்தி வருகிறார்.

N3

Leave A Reply

Your email address will not be published.