அன்னமிட்டால் தலைமுறையே வாழும் – தாள் வணங்குகிறோம்…

அன்னதாதா சுகி பவ (அன்னத்தை வழங்குபவா் சுகமாக வாழ்வார்) என்ற மூதுரையும், அற்றார் அழி பசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி (226 திருக்குறள்) உதரம் (வயிறு) நிறைந்து, உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் ஈரேழு ஜென்மங்களையும் தொடர்ந்து வரும். அன்னதானம் மட்டுமே செய்தவரை மட்டும் சென்றடையாமல், செய்தவரின் சந்ததியினரையும் காத்துத் தொடரக் கூடியது. அன்னதானம் செய்தால் மட்டுமே போதும் என்ற சொல்லை தானமாகப் பெறுபவரிடமிருந்து கொண்டு வரும்.
அப்படிபட்ட அன்னதானத்தை கடந்த 26 வருடங்களாக பொன்மலையைச் சேர்ந்த ரவீந்தரக்குமார் செய்து வருகிறார். இவர் முன்னாள் ரயில்வே ஊழியர்.
மதியம் சரியாக 12 மணி ஆனால் போதும் திருச்சி அரசு மருத்துவமனையின் எதிர்புறம் உள்ள மடத்திற்குள் வாகனம் வந்து நுழையும், இந்த வாகனத்தின் வருகைகாக காத்திருக்கும் முதியவா்கள், பொதுமக்கள் என அனைவரும் வரிசையில் நின்று உணவை பெற்று கொண்டு தங்களுக்கான இடத்தில் அமர்ந்து உணவருந்திவிட்டு வாகனத்தில் கொண்டு வரப்படும் தட்டுகளை கழுவி வைத்துவிட்டு செல்வார்கள்.

ஒருநாள் அரசு மருத்துவமனையில் ரவீந்திரகுமாரின் தந்தை கோவிந்தராஜூ உறவினரை நலம் விசாரிக்க வந்த போது அவா் மருத்துவமனைக்கு உள்ளே நடந்து சென்று கொண்டிருந்த போது நோயாளிகளுடன் இருக்கும் உறவினா்களில் பலர் பெண்கள் தான். அவா்கள் சுடு தண்ணீருக்காக பல இடங்களுக்கு அலைந்து திரிந்து வருவதை பார்த்த அவருக்கு நம்மால் இவா்களுக்கு என்ன செய்ய முடியும் என்று யோசித்து கொண்டே வந்த அவா் மறுநாளே அவர் தண்ணீரை காய்ச்சி எடுத்துவந்து மருத்துவமனை வாசலில் வைத்து அவா்களுக்கு வெந்நீா் கொடுத்துள்ளார்.
அது நாளுக்கு நாள் வளா்ந்து தன்னுடைய வயலிலேயே உற்பத்தி செய்யப்படும் அரிசியை வைத்து கஞ்சி காய்ச்சி கொடுத்தார். தந்தை மகன் இருவரும் இணைந்தே செய்ய துவங்கினார்கள்.
இவா்களுடைய சேவையை பார்த்த தனவான்கள் தங்களால் முடிந்த பொருளுதவி செய்ய ஆரம்பித்தார்கள் அவா்களின் முழு ஒத்துழைப்போடு இன்றுவரை தடையில்லாமல் இந்த அன்னதானம் நடைபெற்று வருகிறது.
கடந்த சில வருடங்களுக்கு முன், தந்தை கோவிந்தராஜ் இறந்து விட, ரவிக்குமாருக்கு தந்தை தொடங்கிய திட்டத்தை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ரவீந்தரக்குமார் தனது ரயில்வே பணியை ராஜினாமா செய்து விட்டார்.
மாதம் 50 ஆயிரம் சம்பளம் வாங்கி கொண்டிருந்த எனக்கு இரண்டு பணிகளை செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. எனவே தானத்தைவிட வேறு எதிலும் அந்த சந்தோஷம் கிடைக்கவில்லை. அதனால், வேலையை ராஜினாமா செய்தேன். கிடைக்கிற பென்சன் குடும்பம் நடத்த போதும்’’ என்றார் ரவீந்தரக்குமார்.
நோயாளிகளுக்கு கஞ்சி கொடுத்தால் தெம்பு கிடைக்கும் என்பதால் 6 மணிக்கு கஞ்சி காய்ச்சி எடுத்துட்டு போய் கொடுப்பேன். மதியம் 12 மணிக்கு தினமும் மதியம் வரும் வாகனத்தில் நோயாளிகள் அனைவருக்கும் சாம்பார் சாதம், புளி சாதம் போன்ற உணவு, வேண்டிய அளவு பரிமாறப்படுகிறது. மனம் குளிர, மர நிழலில் அமர்ந்து அருந்துகின்றனர். யாருக்கும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கி சாப்பிடலாம்.
அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பெரும்பாலும் கிராம புறங்களில் இருந்து இங்கு வந்து தங்கி சிகிச்சை பெற்று வருவார்கள். அவா்களை கவனித்துகொள்ள வரும் உறவினா்கள் எத்தனை நாட்கள் கடைகளில் வாங்கி உணவருந்த முடியும்? கொண்டு வந்த காசு தீர்ந்து என்ன செய்வது என்று பசியோடு நிற்க கூடாது அதற்காக தான் நான் மருத்துவமனைக்கு அருகிலேயே அவா்களுக்காக உணவு வழங்குகிறோம்
என்றார்.
பலரும் திருமணம், பிறந்தநாள் போன்ற தினங்களில் எங்களுக்கு நன்கொடை தருவார்கள். இருந்தாலும் மாதத்தில் 15 நாட்கள் உணவு வழங்குவதற்கு பொருளாதார ரீதியாக சிரமத்தை சந்திக்கிறோம். ஆனால், எத்தகைய பொருளதார இடையூறு வந்தாலும் எனது அன்னதான சேவை நிற்காது” என்கிறார் அதே மன உறுதியுடன்.
