எம்.ஜி.ஆர் எப்போதும் விரும்பிய திருச்சி

0
1 full

தி.மு.க.வின் ஆரம்பகால வளர்ச்சிக்கு எம்.ஜி.ஆரும், அவரது ரசிகர்களும் முக்கிய பங்காற்றினார்கள். கடந்த 1969-ம் ஆண்டு அண்ணாதுரை இருந்தபோதும், அவர் மறைவுக்கு பிறகு கருணாநிதி தமிழக முதல்வராகக் பொறுப்பேற்க எம்.ஜி.ஆரின் உழைப்பு மிக பெரியது. ஒருகட்டத்தில் திமுக கருத்து வேறுபாட்டால் உடைந்த, கடந்த 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆருக்கு பின்னால் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் திமுகவில் இருந்து விலகினர்.

திமுக தேர்தலில் முதன்முதலில் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்த ஊர் திருச்சி என்றால், எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கக் கோரி முதல்முறையாக திருச்சியில்தான் ஆர்ப்பாட்டம், ஊர்வலங்கள் நடந்தன.எம்.ஜி.ஆர். அனுமதி இல்லாமலேயே, தி.மு.க. கொடிகள் இறக்கப்பட்டு கறுப்பு சிவப்பு தாங்கிய திமுக கொடியின் இடையில் தாமரைப் பொறித்த கொடிகளை எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் ஏற்றி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சற்று தயக்கத்தோடு இருந்தார். ஆனால் திருச்சி ஆரமித்த ரசிகர்களின் ஆர்வம் தமிழகம் முழுவதும் பரவியது. இதனை பார்த்த எம்.ஜி.ஆர் நம்பிக்கையுடன் முடிவெடுத்து கடந்த 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார்.

2 full

எம்.ஜி.ஆர் கட்சி ஆரமிக்க முதன்முதலில் ஆர்பாட்டம் நடத்தியதுபோல் தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆருடன் திருச்சியில் இருந்து கே.சவுந்தர்ராஜன், தேவதாஸ், கரு.அன்புதாசன், குழ.செல்லையா, வடிவேலு, பாப்பாசுந்தரம், முசிறி புத்தன் உள்ளிட்ட ஏராளமானோர் தி.மு.க.வில் இருந்து விலகினார்கள்.

அதிமுகவை ஆரம்பித்த எம்.ஜி.ஆர் முதன் முறையாக 1972-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி திருச்சி மன்னார்புரம் பொதுக்கூட்டத்தில் பேசினார். பல ஆயிரக் கணக்கானவர்கள் கலந்துகொண்ட அந்த கூட்டத்தில் நாஞ்சில் மனோகரன், எஸ்.டி.சோமசுந்தரம், கே.சவுந்தர்ராஜன், சவுந்தர பாண்டியன், தேவதாஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எம்.கல்யாண சுந்தரம் ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய எம்.ஜி.ஆரின் பேச்சில் அனல் தெரிந்தது.

அடுத்து கடந்த 1973-ம் ஆண்டு அதிமுக போட்டியிட்ட முதல் தேர்தலான திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலுக்காக நிதி திரட்ட திருச்சி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். அந்தகூட்டத்தில் எஸ்.எம்.என். அமிர்தீன் எம்.ஜி.ஆரிடம் முதன்முதலில் தேர்தல் நிதியை வழங்கினார்.

அடுத்து தி.மு.க. அரசை எதிர்த்து எம்.ஜி.ஆர். அறிவித்த உண்ணாவிரதப் போராட்டம் மெயின்கார்டுகேட் காமராஜ் வளைவில்தான் நடந்தது. இதுமட்டுமல்ல எம்.ஜி.ஆர் அ.தி.மு.க. உருவாகிய பிறகு நடந்த முதல் பொதுக்குழுவும், முதல் மாநில மாநாடும் திருச்சியில்தான் நடந்தது.

கடந்த 1974-ம் ஆண்டு ஏப்ரல் 23,24 ஆகிய இரு நாட்கள் பாப்பாக்குறிச்சி காட்டூரில் நடந்த இந்த மாநில மாநாடு தமிழகத்தில் அ.தி.மு.க.வின் மாபெரும் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட மாநாடு என்று சொல்லலாம்.
இம்மாநாட்டிற்கு பிறகுதான் எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை செண்டிமெண்டாக எடுத்துக்கொண்ட எம்.ஜி,ஆர் அவர் உருவாக்கிய வரலாற்று சிறப்பு மிக்க “கைக்குழந்தைகளுக்கான சத்துணவுத் திட்டத்தை, மாநாடு நடந்த அதே பாப்பாக்குறிச்சி காட்டூரில் கடந்த 1982-ம் ஆண்டு எம்.ஜி.ஆரே நேரில் வந்து துவக்கி வைத்தார். அதேபோல் கடந்த 1977-ம் ஏற்பட்ட வெள்ளத்தில் திருச்சி நகரம் மட்டுமல்லாமல், சுற்றுப்புற கிராமங்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், சேதமடைந்த பயிர்களையும், ஹோலிகிராஸ் கல்லூரியில் ஏற்பட்ட சேதங்களையும், முதல்வர் எம்.ஜி.ஆர். பார்வையிட்டு உடனடியாக நிவாரணங்கள் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

அதுமட்டுமல்லாமல் அ.தி.மு.க.வின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளராக ஜெயலலிதா நியமிக்கப்பட்ட பிறகு அவர் முதன்முதலில் கலந்துகொண்ட கூட்டம் திருச்சி ஒத்தக்கடையில் நடந்தது.
தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி திருச்சியில் நடத்த இருந்த பச்சை துண்டனிந்த விவசாயிகளின் பேரணி முதல்வர் எம்.ஜி.ஆரின் கடுமையான நடவடிக்கைகளால் ரத்து செய்யும் நிலை ஏற்பட்டது.

தமிழகத்தில் உள்ள போதிய வருவாய் இல்லாத சிறு கோயில்களுக்கு முதல்வர் எம்.ஜி.ஆரின் ஆலோசனையின் பேரில் இந்து அறநிலையத் துறையின் சார்பில் நிதியுதவி அளித்து ஒரு கால பூஜைக்கு வகைசெய்யும் திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தை சமயபுரத்தில் முதல்வர் எம்.ஜி.ஆர். துவக்கி வைத்தார்.

இதேபோல் தமிழகத்தின் ஒரு முனையில் இருக்கும் சென்னையின் தலைமைச் செயலகத்துக்கு, தமிழ்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மக்கள் வருவது சிரமாக உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தலைமைச் செயலகத்துக்கு எளிதாக வர தமிழகத்தின் நடுமையத்தில் இருக்கக்கூடிய திருச்சியை தலைநகரமாக மாற்றவேண்டும் என்று எம். ஜி. ஆர் கருதினார். இதற்காக 1983-ம் ஆண்டு திருச்சியை தலைநகரமாக்கும் திட்டத்தை அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதையும் மீறி, திருச்சியை தலைநகராக்குவதில் எம்.ஜி.ஆர்., உறுதியாக இருந்தார். திருச்சி அண்ணாநகர் நவல்பட்டிலும், திருச்சி முசிறி அருகேவும் தலைமைச் செயலகம் அமைக்க இடம் பார்க்கப்பட்டது.

இதுமட்டுமல்லாமல் எம்.ஜி.ஆர் தனது இறுதிகாலத்திலும் திருச்சியில் தங்கவேண்டும் என ஆசைப்பட்டார்.

அதற்காக திருச்சி குடமுருட்டி ஆற்றங்கரை அருகே காவிரிக்கரையில் இருந்து உறையூர் செல்லும் சாலையில் சுமார் 2ஏக்கர் தோட்டங்களுடன் பங்களா வீட்டை சோமரசம்பேட்டையைச் சேர்ந்த பாதிரியார் ஆரோக்கியசாமி என்பவரிடம் கிரையத்துக்கு வாங்கினார்கள். அந்த பங்களாவை நேரில் பார்த்த எம்.ஜி.ஆர் சில மாற்றங்களைச் செய்யச்சொன்னார். அவர் சொன்னபடி மாற்றம் செய்யப்பட்டது.

இதை பார்வையிட வந்த எம்.ஜி.ஆர் எல்லாத்தையும் சரியா பார்த்துக்கங்க. திருச்சியை தலைநகராமாக மாற்றினால் மக்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என தனது திருச்சி சகாக்களிடம் சொல்லிவிட்டு விமானத்தில் அமெரிக்கா கிளம்பினார். அமெரிக்காவில் திடீரென அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

அதன்பிறகு மாறிய அரசியல் சூழ்நிலை, இந்திராகாந்தி மரணம், திடீர் தேர்தல் போன்ற காரணங்களினால், திருச்சியை தலைநகராகும் திட்டம் கைவிடப்பட்டது. எம்.ஜி.ஆர்., நினைத்து, அது நிறைவேறாத மாபெரும் திட்டம் என்றால் திருச்சி தலைநகர் திட்டம் மட்டும் தான் இருக்கும் என்கிறார்கள் திருச்சி மாவட்ட அ.தி.மு.கவினர்.
சாகும் வரை திருச்சி மீது மட்டுமல்லாமல் திருச்சி மக்கள் மீதும் பிரியம் உள்ளவராக வாழ்நாள் முழுக்க வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் கனவை நிறைவேற்றும் வகையில், ஜெயலலிதா திருச்சியை தமிழகத்தின் தலைநகரமாக்க வேண்டும் என்று பலவருடங்களாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இப்படியிருக்க, திருச்சிக்கும் ஜெயலலிதாவிற்கும் நெருங்கிய உறவு உள்ளது.
திருச்சியில் எப்போது பேசினாலும் ஜெயலலிதா திருச்சிக்கும் எனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. எனது குடும்பத்தினரின் பூர்வீகம், திருச்சியில் உள்ள ரங்கம் ஆகும். திருச்சிக்கு வருவது, சொந்த ஊருக்கு வருகிற உணர்ச்சியை பெறுகிறேன்.
திருச்சி எனது சொந்த ஊர் என்பார். அந்தளவுக்கு திருச்சி மீது பாசமும் பற்றும் உள்ளவர் ஜெயலலிதா. அதன்விளைவாக திருச்சி ஶ்ரீரங்கத்தில் போட்டியிட்டு திருச்சிக்கு பல திட்டங்களை அறிவித்தார்.
திமுக வரலாற்றில் மட்டுமல்ல அதிமுக வரலாற்றிலும் மிகப்பெரிய திருப்புமுனையாக விளங்கியிருக்கிறது திருச்சி. இதனை நம்ம திருச்சி இதழ் பதிவு செய்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறது.
நம்ம ஊர் வரலாறு தெரியாமல் உலக வரலாறு பேச முடியாது இல்லையா.

3 half

Leave A Reply

Your email address will not be published.