நூற்றாண்டை நோக்கி பயணிக்கும்… திருச்சி பொன்னையா மேல்நிலைப்பள்ளி

0
1 full

அன்ன சத்திரம் ஆயிரம் கட்டல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.

என்ற பாரதியின் பாடலை மனதில் ஏற்று அரசால் மதிய உணவுத்திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பே வயிற்றுப் பசியும் அறிவுப் பசியும் ஒரு சேரத் தீர்த்திட்ட பள்ளி பொன்னையா மேல்நிலைப்பள்ளி.
இப்பள்ளி இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த காலத்தில் மாணவர்களை மேம்படுத்தும் நோக்கத்தோடு துவங்கப்பட்டது. திருச்சி பொன்னையா மேல்நிலைப்பள்ளியைப் பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு முன்பு இப்பள்ளியின் நிறுவனர் அமரர் W.பொன்னையா பிள்ளை என்பவரைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

எனவே இந்தப் பதிவின் மூலம் அவரைப் பற்றிய தகவல்களை வாசகர்களுக்கு எடுத்துரைப்பதில் நம்ம திருச்சி பெருமை கொள்கிறது. திருச்சி நகராட்சியாக இருந்த காலக்கட்டத்தில் மூன்று முறை நகர்மன்றத் தலைவராகப் பதவி வகித்து மக்கள் பணியாற்றியவர் W.அமரர் பொன்னையா பிள்ளை. கல்வி என்பது அனைவருக்கும், குறிப்பாக ஏழைகளுக்கு அரிதாக இருந்த காலத்தில் மிகவும் பின்தங்கிய பகுதிகளாக இருந்த இருதயபுரம், வரகனேரி, பாலக்கரை, மல்லிகைபுரம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் உள்ள பிள்ளைகள் கல்வி பயில வேண்டும் என்பதற்காக மையப் பகுதியான இருதயபுரத்தில் 1924 ஆம் ஆண்டு பொன்னையா பிள்ளை அவர்கள் புனித அந்தோணியார் தொடக்கப்பள்ளியைத் தோற்றுவித்தார்.

2 full

சிறந்த முறையில் 6 ஆண்டுகள் கல்விப் பணியாற்றிய இப்பள்ளி 1930ஆம் ஆண்டு திருச்சி பொன்னையா உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது 8 வகுப்புகளுடன் 10 ஆசிரியர்களைக் கொண்டு செயல்பட்டு வந்தது.

இரயில்வே ஒப்பந்ததாரராக இருந்த பொன்னையா பிள்ளை பள்ளியை நடத்துவதற்காக முதலில் ஒரு பெரிய அரங்கைக் கட்டி திருமணங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த வாடகைக்கு விட்டார். நகரில் இருந்த முக்கியமான அரங்குகளில் இதுவும் ஒன்றாக இருந்தாலும் எதிர்பார்த்த அளவில் பெரிய நிகழ்ச்சிகள் ஒன்றும் நடைபெறவில்லை. அரசின் சார்பில் இலவசக் கல்வி என்பது அன்று வழங்கப்படாத சூழ்நிலையில் மாணவர்கள் கட்டணம் செலுத்திப் பயிலும் நிலையே இருந்தது.

ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் கொடுப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. எனவே சமாளிக்க முடியாத நிலையில் பள்ளியை விற்றுவிடும் முடிவை எடுத்து விற்பனை செய்ய முயற்சி செய்தார். அது இரண்டாம் உலகப்போர் நடைபெற்று வந்த காலம். 1946ஆம் ஆண்டு 2-ஆம் உலகப் போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வழிபாட்டுக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு கேரள மாநிலம் பத்தனாபுரத்திலுள்ள ஆர்த்தோடாக்ஸ் சிரியன் கிறிஸ்துவத் திருச்சபையின் பேராயரும், மவுண்ட் டாபர் டயாராவின் நிறுவனருமாகிய ஆண்டகை அருட்திருமேனி மார்த்தோமா டயனீஷியஸ் அவர்கள் வருகை தந்தார்கள்.

இப்பள்ளியைப் பற்றியும், அது விற்பனைக்கு வருவதையும் அறிந்த பேராயர், தாம் அதனை ஏற்று தொடர்ந்து நடத்திட எண்ணி 01-07-1946 அன்று பொன்னையா பிள்ளையிடமிருந்து வாங்கி தமது நிர்வாகத்தின்கீழ் கொண்டு வந்தார். அவர் 02.12.1972 வரை தொடர்ந்து 26 ஆண்டுகள் சிறந்த முறையில் பள்ளியின் வளர்ச்சிக்காக பாடுபட்டு சிறந்த நிர்வாகியாகச் செயல்பட்டு கல்விப் பணியாற்றினார்.

1954ல் பள்ளியின் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்ற அருட்தந்தை சி.டி.தாமஸ் அடிகளார் பள்ளியின் வளர்ச்சியில் பல பாராட்டத்தக்க செயல்களைச் செய்தார். அவர் தாம் பதவியேற்றபோது 11ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் பெற்றிருந்த வெறும் 11 விழுக்காடு தேர்ச்சியை அடுத்த ஆண்டிலேயே 44 விழுக்காடாக உயர்த்தி பள்ளி வரலாற்றில் சாதனை படைத்தனர்.

பள்ளித் தலைமையாசிரியராகவும், அருட்தந்தையாகவும் பணியாற்றிய சி.டி.தாமஸ் அடிகளார், பேராயராக உயர்ந்து ஆண்டகை அருட்திருமுனி தாமஸ் மார் திமோத்தியோஸ் என்ற சிறப்புப் பெயருடன் 1972 ஆம் ஆண்டு முதல் நிர்வாகியாகவும், தாளாளராகவும் பொறுப்பேற்று சிறப்புடன் பணியாற்றினார்.

இவருடைய காலத்திலேயே அருட்தந்தையாகவும், பின்னாளில் பேராயராகவும் விளங்கிய ஆண்டகை அருட்திருமேனி சக்கேரியா மார் டயனீஷீயஸ் அவர்களின் தலைமையில் பள்ளி பல முன்னேற்றங்களைப் பெற்று சாதனைகளையும் செய்தது. தாளாளர் அருட்திருமேனி தாமஸ் மார் திமோத்தியோஸ் அவர்களின் பெருமுயற்சியால் 1978ஆம் ஆண்டு இப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 1980ஆம் ஆண்டு பேரருட்திரு ரம்பான் பி.எம்.செரியன் அடிகளார் தலைமையாசிரியராகப் பணியாற்றியபோது 50ஆம் ஆண்டு நிறைவு விழா பொன்விழாவாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

50 ஆண்டுகளைக் கடந்து பழமையடைந்து விட்டதாலும், மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் 1999ஆம் ஆண்டு 38 அறைகளுடன் கூடி மூன்றடுக்குக் கட்டிடம் அனைத்து வசதிகளுடன் கட்டிமுடிக்கப்பட்டு, சென்னைத் திருமண்டலப் பேராயர் ஆண்டகை அருட்திருமேனி டாக்டர் யாக்கோப் மார் ஐரேனியஸ் முன்னிலையில், நிர்வாகி ஆண்டகை அருட்திருமேனி தாமஸ் மார்திமோத்தியோஸ் அவர்களால் மாணவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

அத்துடன் செயின்ட் மேரீஸ் ஆங்கில வழிப்பள்ளி ஒன்றும் துவக்கப்பட்டு பொன்னையா மேல்நிலைப்பள்ளி வளாகம் முப்பள்ளிகளை உள்ளடக்கிய பெரிய கல்விக் கூடமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் 2005 முதல் மாணவிகளும் சேர்க்கப்பட்டு இருபாலர் பள்ளியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஈன்ற பொழுதினும் பெரிது உவக்கும் மகிழ்ச்சியைப் பெற்றோர்க்கு அளிக்கும் வகையில்

1946ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஆண்டகை அருட்திருமேனி பார்த்தோமா டயனீஷியஸ், ஆண்டகை அருட்திருமேனி தாமஸ் மார்த்திமோத்தியோஸ், ஆண்டகை அருட்திருமேனி சக்கேரியா மார்டயனீஷீயஸ், பேரருட்திரு.ரம்பான் டி.எம்.சாமுவேல், பேரருட்திரு.ரம்பான் பி.எம்.செரியன், பேரருட்திரு.ரம்பான் டி.வி.சாமுவேல், பேரருட்திரு.ரம்பான் சி.ஓ.ஜோசப் ஆகியோர் தாளாளர்களாகவும், தலைமையாசிரியர்களாகவும் பணியாற்றி பள்ளியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர்களாவர். மேலும் 1946ஆம் ஆண்டு முதல் இன்று வரை 23 தலைமையாசிரியர்கள் சிறப்பான பணி செய்து இப்பள்ளியை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றவர்களாவர்.

1930ஆம் ஆண்டு 270 மாணவர்களோடு 15 ஆசிரியர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளி இன்று 1100க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளையும், 42 ஆசிரியர்களையும் 10 அலுவலக ஊழியர்களையும் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க இப்பள்ளி தனது 75வது ஆண்டு நிறைவை 27.01.2005ல் பவளவிழாவாகக் கொண்டாடி சாதனைகள் செய்த முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு வழங்கியது. பவளவிழா நினைவாக அறிவியல் ஆய்வகக் கட்டிடம் ஒன்றும் பள்ளிக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இப்பள்ளிக்கென்று தனிச்சிறப்புகள் உண்டு. காமராஜர் முதல்வராக இருந்தபோது அறிவித்த ஏழை மாணவர்களுக்கான மதிய உணவுத்திட்டத்திற்கு முன்பே, இப்பள்ளியில் மதிய உணவுத்திட்டம் சிறப்பாக நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 32 ஆண்டுகள் தினத்தந்தியில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய கலைமாமணி கவிஞர் திலகம் திருச்சி பரதன், நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் இளைய சகோதரர் வி.சி. சண்முகம், திரைப்பட நடிகர் மற்றும் மேஜிக் நிகழ்ச்சியில் கின்னஸ் சாதனையாளரான டாக்டர்.அலெக்ஸ் போன்றவர்களோடு எண்ணற்ற மருத்துவ நிபுணர்கள் பொறியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்களை முன்னாள் மாணவர்களாகக் கொண்ட சிறப்பைப் பெற்றது

இப்பள்ளி. எத்தனையோ புத்தர்களைப் பூமியில் உலவ விட்ட பொன்னையா பள்ளி எனும் போதிமரம் இன்னும் பல மேதைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. கால வெளிச்சத்தால் அவர்கள் கவனிக்கப்படும்போது இதன் சிறப்பு நமக்குப் புலனாகும்.

2013ஆம் ஆண்டு முதல் பள்ளியின் மேலாளர் மற்றும் தாளாளராக பேரருட்திரு. ரம்பான் சி.ஓ.ஜோசப் அடிகளார் பொறுப்பேற்றார். 2015 முதல் அருட்திரு. கீ.வர்கீஸ் மேத்யூ அவர்கள் தாளாளராக பள்ளியின் வளர்ச்சியில் முழு ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார். பள்ளியின் சுற்றுச்சூழல் அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது. மாணவ, மாணவிகளுக்கான குடிநீர் வசதி, இருபாலருக்கும் நவீன கழிப்பறை வசதிகள், சிறப்பான சுகாதாரப் பராமரிப்பு மற்றும் அனைத்து அறைகளுக்கும் மின்வசதி செய்து குழல் விளக்குகள், மின்விசிறிகள் அமைத்து பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளை சிறப்பாக மேம்படுத்தி வருகிறார். மேலும் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச பஸ் வசதி, பேராயர்கள் பெயரில் அறக்கட்டளை நிறுவி பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆய்வுக்கூடத்திற்கு அருகே அனைவரையும் கவரும் வண்ணம் அழகிய மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. பெரிய விளையாட்டு மைதானம், 15 ஆயிரம் நூல்களைக் கொண்ட நூல்நிலையம் போன்றவை மாணவர்களின் உடல் மற்றும் மனத்திறன்களை வளர்த்துக் கொள்ள உதவுகின்றன. மாலை நேரங்களில் மற்றும் சனிக்கிழமைகளில் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதால் இப்பள்ளி தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சியுடன் நகரத்தில் ஒரு சிறந்த பள்ளியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

மேலும் மாணவர்களின் பல்வேறு திறன்களை வெளிக் கொணரும் வகையில் பல்வேறு மன்றங்கள், தேசிய மாணவர்படை, சாரணர் இயக்கம், இளையோர் செஞ்சிலுவைச் சங்கம், பசுமைப்படை போன்றவை சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சேவை-காத்தல்-தியாகம் என்ற தாரக மந்திரத்தோடு இப்பள்ளியை வழி நடத்தும் ஆர்த்தோடாக்ஸ் சிரியன் கிறிஸ்தவத் திருச்சபை, மவுண்ட் டாபேர் டயாரா, கேரளா மாநிலம் மற்றும் தமிழ்நாட்டில் இப்பள்ளியுடன் சேர்த்து, இரண்டு கல்லூரிகள் உட்பட மொத்தம் 23 கல்வி நிறுவனங்களை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறது. மேலும் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரில் மக்கள் பயன்பெறும் வண்ணம் மவுண்ட் டாபோர் மிஷன் ஹாஸ்பிடல் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

எதிர்கால சமுதாயம் வகுப்பறைகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது என்று ஜவஹர்லால்நேருவின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், புனித அந்தோணியார் துவக்கப்பள்ளி மற்றும் பொன்னையா மேல்நிலைப்பள்ளி ஆகியவை மேன்மேலும் பல சாதனைகள் புரியவும், கல்விப்பணியில் உச்சத்தைத் தொடவும் நம்மதிருச்சி தன் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

3 half

Leave A Reply

Your email address will not be published.