
தமிழகத்தின் இரண்டாம் தலைநகரான ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் பல அடையாளங்களுடன் நிமிர்ந்து நின்றுள்ளது. இங்கே வாழ்ந்தவர்கள் ஏராளம். மக்கள் மனதில் நிலைத்து நின்ற பலர் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டங்களின் அடையாளங்களாக விளங்கினார்கள். அந்த அடையாளங்களை நம்ம திருச்சி வார இதழ் மூலம் திரும்பிப் பார்த்து வருகிறோம்
அந்த வரிசையில்….
பெரம்பலூர் வட்டம் நக்க சேலம் கிராமத்தில் 1911ஆம் ஆண்டில் முத்துரெட்டியார், காமாட்சி அம்மாளுக்கு பிறந்த ராமசாமி ஆர்மோனிய ராமசாமி என்று புகழ் பெற்று அப்பகுதியில் விளங்கினார். இளமையில் ஆர்மோனியம் பெட்டியோடு பெரியாரின் பகுத்தறிவு கருத்துக்களை என்.எஸ். கிருஷ்ணன், எம்.ஆர். ராதா இவர்களின் திரைப்படப் பாடல்களை ஊர்தோறும் பாடி சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பி வந்தார்.
பெரம்பலூர் வட்டத்தில் பெரும்பான்மையாக இருந்த ரெட்டியார் சமூகத்தில் இவர் ஒரு புரட்சிக்காரராக தாழ்த்தப்பட்ட மக்களோடு ஒன்றி வாழ்ந்தவர். 1953-54இல் திருவாரூர் கே.தங்கராசு கூட்டத்தை பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் நடத்தி, பெரியாரின் ஆணைப்படி அரசியல் சட்டத்தைக் கொளுத்தி இதனால் சிறையில் பல மாதங்கள் இருந்துள்ளார்.

நக்கசேலத்தில் பெரியாரின் காரில் கல்லெறியப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த ராமசாமி அவர்கள் பெரியாரின் கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்தி அவருக்கு எடைக்கு எடை வெங்காயம் வழங்கினார்.

தன் முதல் மனைவி இயற்கை எய்திவிட்ட பின்னர் சிவகாமி என்ற விதவைப் பெண்ணை மறுமணம் செய்து கொண்டது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உழைப்பினால் முன்னேற வேண்டும் என்ற துடிப்போடு இவர் மோட்டார் என்ஜின்கள் பழுதுபார்க்கும் தொழிலை மேற்கொண்டு, பெரும்பொருள் ஈட்டினார்.
தனது மூன்று மகன்களையும் தொழில் நுணுக்கத்தோடு கல்வி புகட்டி அவர்களுக்குத் தந்தை பெரியார் தலைமையிலும், வே.ஆனைமுத்துத்தலைமையிலும் திருமணம் நடத்தி வைத்தார். பெரம்பலூர் பகுதியில் திராவிடக் கழகம் பொதுக்கூட்டங்கள் நடத்திடவும், பகுத்தறிவு கொள்கைகளை பரப்பிடவும் பெரும் பொருளை கொடுத்து உதவியர் ராமசாமி, திராவிட கழக மாநாடுகள் எங்கு நடந்தாலும் இவர் பொருளுதவி செய்வதில் தவறியதில்லை.
பெரியாரின் தொண்டர்களுக்கு பெரும் துணையாக இருந்த ஆர்மோனிய ராமசாமி 4.1.1990இல் இயற்கை எய்தினார். இவரது மகன்கள் ஜெயபால், கிருஷ்ணமூர்த்தி தந்தையின் வழியில் சிறந்த தொழில் வல்லுநர்களாக வள்ளலார் போர்வெல்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். ஜெயபிரகாஷ் அரசுப் பணியில் பொறியாளராக உள்ளார்.
மீண்டும் அடுத்தவாரம் இன்னொரு ஆளுமை குறித்து தெரிந்துகொள்வோம். ஒருங்கிணைந்த திருச்சியின் அடையாளங்கள் பற்றின முந்தைய தொகுப்புகளை ஆன்லைனில் http://nammatrichyonline.com இணையதளத்தில் பார்த்து படித்து கொள்ளலாம்.
