மருத்துவர்களே நோயாளிகளிடம் அதிகமாக பேசுங்கள்

0
D1

ஒவ்வொரு வாரமும் ஒரு சாதனை பெண்களை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை நம்ம திருச்சி இதழ் பதிவு செய்து வருகிறது. இந்த வாரம் திருச்சியில் மிகவும் பிரபலமான மகப்பேறு மருத்துவர் ரமணிதேவி நம்மிடம் பகிர்ந்து கொண்ட சில தகவல்கள் உங்களுக்காக…
குடும்பம்…

நான் அடிப்படையிலேயே மருத்துவர்கள் குடும்பத்தில் இருந்து வந்தவள். 1960களில் அப்பா பொது மருத்துவராகவும், அம்மா மகப்பேறு மருத்துவராகவும் இருந்தார்கள். அவர்கள் எனக்கு கொடுத்த பயிற்சி தான் இன்றுவரை எனக்கு நற்பெயரை பெற்று தருகிறது. அதிலும் அப்பாவிடம் கற்றுகொள்வது என்பது எனக்கு கிடைத்த வரம்,

நான் 3ஆம் ஆண்டு மருத்துவம் படித்து கொண்டிருந்த காலத்தில் என்னுடைய அம்மாவுடன் சேர்ந்து எப்படி சிசேரியன் செய்வது, நோயாளிகளை எப்படி அணுகுவது என்று ஒவ்வொரு நாளும் பல புதிய விஷயங்களை தெரிந்து கொண்டேன். என்னுடைய அம்மாவும், அப்பாவும் ஒருபுறம் எனக்கு உறுதுணை என்றால் என்னுடைய கணவர் எனக்கு எப்போதுமே உறுதுணையாளர் தான் அவருக்கு நான் கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும்.

D2

விருதுகள்…
முதன் முதலாக 1989ல் மகப்பேறு மருத்துவராக திருச்சியில் அறிமுகமாகி ஜனனி என்ற பெயரில் மருத்துவமனையை துவங்கி பணியாற்றி வந்த காலகட்டங்களில் இருந்து இன்றுவரை பெண்களுக்கான சிறந்த மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகிறேன். என்னுடைய தொடர் முயற்சியால் திருச்சியில் முதன்முதலாக மகளிர் மருத்துவா்கள் சங்கத்தை துவங்கி செயல்படுத்தி சிறந்த சங்கத்திற்கான விருதை 5முறை பெற்றுள்ளேன்.

அதேபோன்று நான் இந்திய மருத்துவ சங்கத்தில் 2 வருடங்கள் செயலாளராக இருந்ததோடு, அனைத்திந்திய மருத்துவ சங்கத்தில் சிறந்த செயலாளா் என்ற விருதையும், தமிழ்நாடு மருத்துவ சங்கத்தில் தலைவராக பணியாற்றி மாநில அளவிலான சிறந்த மருத்துவ சங்க தலைவர் என்ற விருதும் பெற்றுள்ளேன்.

பெண்களுக்கான மருத்துவ பணி…
திருச்சியில் மொத்தம் 25 மகளிர் சங்கங்கள் உள்ளது. இங்குள்ள எல்லா சங்கங்களிலும் பெண்கள் உடல்ரீதியாக சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி உள்ளோம். குறிப்பாக பெண்கள் சந்திக்கும், மார்பக புற்றுநோய், மாதவிடாய் பிரச்சனை, கர்ப்பப்பை கோளாறு, பிரசவ காலங் களில் பின்பற்றபட வேண்டிய சில வழிமுறைகள் என்று அனைத்தும் பெண்களை சார்ந்து மட்டுமே என்னுடைய பணிகள் உள்ளது.
குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் பிரசவ காலங்களில் இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நான் மருத்துவ பயிற்சியை ஆரம்பித்த காலகட்டங்களில் 1 லட்சம் பிரசவிக்கும் பெண்களில் 600 பேர் இறக்கும் நிலை இருந்தது. அனைத்திந்திய அளவில் கேரளா தான் குறைவான இறப்பு விகிதம் உள்ள மாநிலம், தமிழகத்தை பொறுத்தவரை குறைந்த இறப்பு விகிதம் உள்ள மாவட்டம் என்றால் அது திருச்சி தான். அதேபோன்று குழந்தையை அறுவைசிகிச்சை மூலம் பெற்று கொள்வது என்பது அன்றை காலகட்டத்தில் 1 சதவீதம் இருக்கும். ஆனால் இன்று அது 25 முதல் 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. இன்றைய நவீன கால பெண்களில் 5ல் ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. அதேபோன்று உடல்பருமன் என்பது பெண்களின் பொதுவான பிரச்சினையாகிட்டது. அதற்கு காரணம் பெண்களில் பலர் முக்கியத்துவம் கொடுப்பது அவர்களின் வேலைவாய்ப்பிற்கு தான் அதன்பிறகு தான் குடும்பம், குழந்தை எல்லாம் என்ற மனநிலைக்கு மாறிவிட்டனா்.

என்னுடைய அம்மா காலத்தில் பெண் கர்ப்பம் தரித்துவிட்டாள் என்றால் முதல் ஓரிரு மாதங்களுக்கு மட்டும் தங்களை பாதுகாத்து கொள்வார்கள் அதன்பின் எல்லாவிதமான வேலைகளையும் அவர்களே இழுத்துபோட்டு செய்வார்கள். அதனால் உடலில் தேவையில்லாத கொழுப்பு குறைந்து, குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துக்களும் சரிவிகிதத்தில் கிடைத்தது. ஆனால் இன்றைய பெண்கள் கா்ப்பம் தரித்தவுடன் எந்த வேலையும் செய்வதில்லை. பெற்றோர்கள் அவா்களை அமரவைத்து வாய்க்கு ருசியான அனைத்தையும் கொடுத்து அவர்களின் உடல் எடையை பெருக்கி விடுகின்றனா்.

N2

பொதுவாகவே இடமகள் அகப்பை படலம் என்று கூறுவார்கள். கர்ப்பப்பையில் இருக்க வேண்டிய திசுக்கள் கர்ப்பப்பையிலிருந்து வெளியே வந்து மற்ற உறுப்புகளை சேதமடைய செய்யும். இதனால் கருப்பையில் நீர் கட்டிகள் அதிகளவில் உருவாகும். இன்றைய பள்ளி மாணவிகளில் 70 சதவீதம் பேர் உடல் பருமனாக தான் இருக்கிறார்கள். அதோடு பள்ளி பருவத்திலேயே பல்வேறு பாதிப்புகளை சந்திக்கிறார்கள். குறிப்பாக பள்ளியில் பயன்படுத்தும் சுத்தமில்லாத கழிவறைகள், மாசுநிறைந்த தண்ணீர், அவா்கள் பயன்படுத்தும் நாப்கின்ஸ் உள்ளிட்ட பல காரணிகளால் பெண் குழந்தைகள் பாதிக்கபடுகின்றனா்.

அதிலும் தற்போது கடைகளில் விற்பனையாகும் நாப்கின்ஸ்களில் டைஆக்ஸைடு என்ற வேதிபொருள் பெண்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் காரணியாக உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்துள்ளது. 20 சதவீதத்துக்கும் அதிகமாக பெண்களுக்கு பலவித காரணங்களால் மலட்டுதன்மை ஏற்படுகிறது. அதற்காக தான் செயற்கை கருத்தரிப்பு என்ற புதிய மருத்துவ முறை கண்டுபிடிக்கப்பட்டு குழந்தையில்லா தம்பதிகளை உருவாக்கி வருகிறது. ஆனால் அதிலும் சிறிய பிரச்சனைகள் உள்ளது. திருச்சியில் தற்போது 15 செயற்கை கருத்தரிப்பு மையங்கள் உள்ளது.

அந்த மருத்துவமனைகளுக்கு செல்லும் தம்பதிகள் தங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துவிட்டால் முழுமையாக அந்த மருத்துவரை நம்புகின்றனா். ஆனால் பல மருத்துவமனைகளில் சிகிச்சையில் வெளிப்படைதன்மை இல்லாமல் போனதால் தான் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அதற்க்கு காரணம் எந்த மருத்துவரும் தங்களை தேடிவரும் நோயாளிகளிடம் அதிகம் பேசுவதில்லை. நானும் ஆரம்பத்தில் அப்படி இருந்தேன் தற்போது நான் எல்லா நோயாளிகளிடமும் பேச ஆரம்பித்துவிட்டேன்.

நான் பேச ஆரம்பித்தவுடன் அதிகளவில் நோயாளிகள் பல பிரச்சனைகளையும் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தனா். அதனால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு எதனால் என்பதை அறிய முடிந்தது.
எப்போதும் வருந்தும் ஒரு நிகழ்வு…

சரியாக 2014ஆம் ஆண்டு வைகுண்ட ஏகாதசி அன்று இரவு ஒரு பெண் பிரசவ வலியோடு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். அதே நேரத்தில் மற்றொரு பெண்ணுக்கு பிரசவத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்த நேரம், அடுத்த 5 நிமிடங்களில் புதிதாக வந்த அந்த பெண்ணின் கர்ப்பப்பை வெடித்து குழந்தை வெளியே வந்துவிட்டது.பல மணி நேரம் போராடியும் அந்த பெண்ணை காப்பாற்ற முடியவில்லை. அதிகளவில் உதிரப்போக்கு ஏற்பட்டு அதை நிறுத்த முடியாமல் சிரமப்பட்டோம். இறுதியாக அவா் எங்களுடைய முயற்சியையும் தாண்டி உயிரழந்தார். ஒவ்வொரு வைகுண்ட ஏகாதசிக்கும் அந்த பெண்ணை நினைத்து பார்ப்பேன் அது என் வாழ்நாளில் ஒவ்வொரு வைகுண்ட ஏகாதசியன்றும் நினைத்து பார்த்து வருத்தப்படுவேன். இங்கு எந்த மருத்துவரும் ஒரு நோயாளியை கொல்ல வேண்டும் என்று நினைப்பதில்லை. எல்லா உயிர்களும் காப்பாற்றபட வேண்டும் என்ற நோக்கில் தான் மருத்துவா்கள் நினைப்பார்கள்.

என்னை பாதித்த இந்த இறப்பினால் நான் ஒவ்வொரு பெண்களுக்கும் சொல்வது. வருடத்திற்கு ஒருமுறையாவது உங்களுடைய உடலை முழுமையாக மருத்துவபரிசோதனை செய்து கொள்ளுங்கள் குறிப்பாக தம்பதிகள் தங்களுடைய திருமண நாளில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு கணவனும் தங்கள் மனைவிக்கு பரிசு கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் மனைவியை முழு உடல் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்று அவா்களின் பிரச்சனைகளை புரிந்துகொள்ள முயலுங்கள். அதுவே நீங்கள் உங்கள் மனைவிக்கு கொடுக்கும் விலைமதிக்க முடியாத பரிசாகும் என கூறி முடித்தார்.

-லோக்நாத்

N3

Leave A Reply

Your email address will not be published.