திருச்சி தில்லை நகரில் கலாமுக்கு கோயில்

0
D1

அப்துல் கலாம் மீதுள்ள ஈடுபாட்டின் காரணமாக அப்துல் கலாமுக்கு கோயில் கட்டி, வெள்ளிதோறும் சிறப்பு வழிபாடுகளை நடத்தி வழிபட்டு வருகிறார் இளைஞர் ஒருவர்.

திருச்சி, தில்லைநகர் 10-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். டிப்ளமோ படிப்பு படித்த புஷ்பராஜ், கம்பெனியை நடத்திக்கொண்டே தன்னால் இயன்ற அளவு சமூக சேவைகளைச் செய்து வருகிறார். அப்துல் கலாம் மீது மிகுந்த விருப்பம் கொண்டிருந்த புஷ்பராஜ், அவர் மறைவுக்குப் பின்னர் அவரது நினைவாக கோயில் கட்ட முடிவெடுத்தார்.

இதற்காக தான் வசித்து வரும் பகுதியில் 12 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட கோயில் கட்டி, அதில் 2 அடி உயரமுள்ள அப்துல்கலாம் சிலையை அமைத்திருக்கிறார்.

D2

 

N2

இந்தக் கோயிலில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடக்கிறது. அப்துல்கலாமின் சிலைக்கு கீழே, ‘கலாம் 2020. கனவு காணுங்கள். கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பதல்ல. உன்னை தூங்க விடாமல் செய்வது எதுவோ அதுவே (இலட்சிய) கனவு’ என பொறிக்கப்பட்டுள்ளது. சிலைக்கு பக்கவாட்டில் நமது தலைமுறையின் உயிர் நாடி தண்ணீர், மரம் நமக்கு கிடைத்த வரம் காப்பாற்றலாமே! என்கிற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

கோயிலைக் கட்டிய புஷ்பராஜை நேரில் சந்தித்துப் பேசினோம். “டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் எழுதிய இந்தியா 2020 என்கிற புத்தகத்தில், இந்தியா வல்லரசு நாடாக மாறுவதற்கான திட்டங்களைக் கூறி உள்ளார். கடந்த ஐந்து வருடங்களாக அய்யாவின் புத்தகங்களை வாசிக்க வாசிக்க அவா்மீது எனக்கு ஈர்ப்பு அதிகமானது. அதன் அடிப்படையில் முதற்கட்டமாக என்னால் முடிந்த சமூக சேவையினை செய்ய ஆரம்பித்தேன்.

ஆரம்பத்தில் இருந்தே, அப்துல்கலாம் அவர்களின் படத்தை எனது பூஜை அறையில் வைத்து வணங்குவேன். அவர் மறைவுக்குப் பிறகு ஒரு கட்டத்தில் இப்படிப்பட்ட மாமனிதரை, இனிவரும் தலைமுறையினா் தெரிந்துகொள்ள அதற்கு நாம் எதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். இந்தியாவுக்கு அப்துல்கலாம் அய்யாதான் கடவுள். அவருக்கு கோயில் கட்டினால் என்ன என தோன்றியது. நீண்ட ஆலோசனைக்குப் பிறகுதான் அவருக்கு ஒரு கோவில் கட்ட முடிவெடுத்தேன். இதுகுறித்து எனது மனைவி, எனது மகள்களிடம் கூறி, அவர்கள் சம்மதத்தைப் பெற்று, தில்லை நகர் பகுதியில் உள்ள எங்கள் கம்பெனி முன்புறம் கோவில் கட்டும் வேலைகளை ஆரம்பித்தேன்.

சுமார் ஒரு லட்சம் செலவில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. பல தலைவா்களின் சிலைகள் பராமரிக்கப்படாமல் கிடப்பதைப்போல் இதுவும் ஆகிவிடக்கூடாது என்பதால், தினமும் பராமரிக்க ஏற்பாடு செய்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வழிபாடு நடத்தி வருகிறோம்.
அய்யா இஸ்லாமியராக இருந்தாலும் அவர் இந்தியர்களான எங்களில் ஒருவா். எங்கள் தலைமுறையினரின் வழிகாட்டியாக விளங்குகிறார் அதன் அடிப்படையில்தான் இந்தகோயிலைக் கட்டியுள்ளோம்.

இது வெறும் கோயிலாக இல்லாமல் அய்யாவின் கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்று லட்சியமுள்ள இளைய சமுதாயத்தை உருவாக்குவதாக அமைய வேண்டும்,” என்றார்.

N3

Leave A Reply

Your email address will not be published.