மக்களால் நேசிக்கப்பட்ட எளிய தொண்டர்-எஸ்.வி.சாமியப்பன்
திருச்சியின் அடையாளங்கள்-23

திருச்சியின் அடையாளம். தமிழகத்தின் இரண்டாம் தலைநகரான ஒருங்கிணைந்த திருச்சி, மாவட்டம் பல அடையாளங்களுடன் நிமிர்ந்து நின்றுள்ளது. இங்கே வாழ்ந்தவர்கள் ஏராளம். மக்கள் மனதில் நிலைத்து நின்ற பலர் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டங்களின் அடையாளங்களாக விளங்கினார்கள். அந்த அடையாளங்ளை “நம்ம திருச்சி வார இதழ்” மூலம் திரும்பிப் பார்ப்போம்.
இந்தவாரம் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் அடையாளமாக விளங்கிய எஸ்.வி.சாமியப்பன் பற்றி பார்போம்.
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியான கரூர் பகுதியில் திமுகழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் 1932ஆம் ஆண்டு பிறந்தார். அக்காலத்தில் இண்டர்மீடியட் வரை பயின்றவர். மாணவப் பருவத்திலேயே தந்தை பெரியாரின் தொண்டராக பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்புவதில் முனைப்பாக இருந்தவர். தஞ்சை மாவட்டத்தில் பிறந்தாலும் கரூரில் தான் பொதுப் பணியாற்றி வந்தார்.

தொடக்க காலத்தில் பஸ், லாரி போக்குவரத்து உரிமையாளராக இருந்தார். தி.மு கழகத்தின் வளர்ச்சிக்காகத் தம் தொழிலை விட கட்சிப் பணியே பெரிதென வாழ்ந்தவர். அறிஞர் அண்ணா, அன்பில் தர்மலிங்கம் ஆகியோரின் அன்பைப் பெற்றவர். கரூரில் கைத்தறி, நெசவுத் தொழிலாளர்களின் இன்னல்களைப் போக்க பல போராட்டங்களை சந்தித்தவர். தி.மு கழகத்தின் மாவட்ட மாநாடுகளை நடத்துவதில் பெரும்பங்காற்றியவர். கரூரில் 1984இல் மாவட்ட மாநாட்டினை வெற்றிகரமாக நடத்திய பெருமைக்குரியவர்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குநராகவும், கரூர் பால்வளச் சங்கத்தின் தலைவராகவும் பல ஆண்டுக்காலம் பணியாற்றியவர், கரூர் தி.மு.கழகத்தின் நகரச் செயலாளராகப் பணியாற்றிய போது விலைவாசிப் போராட்டம் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றவர்.
தி.மு.கவிலிருந்து பிரிந்து வைகோ தொடங்கிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் கரூர் மாவட்ட செயலாளராகத் தொடர்ந்து பணியாற்றியவர். கரூர் நகர மன்றத்தையும் மற்றும் குளித்தலை உள்ளிட்ட பகுதிகளிலும் மதிமுக உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதற்கு எஸ்.வி.சாமியப்பன் அவர்களின் கடுமையான உழைப்பே காரணமாகும்.
கட்சித் தொண்டர்கள் மட்டுமன்றி பொது மக்களிடத்திலும் அன்பாகப் பழகி நற்பெயர் பெற்ற இவர் 1995ஆம் ஆண்டு சாலை விபத்தில் மரணமடைந்தார். கரூர் பகுதியில் கட்சி வேறுபாடின்றி அனைத்து மக்களாலும் நேசிக்கப்பட்ட எளிய தொண்டரான எஸ்.வி.சாமியப்பனின் பணிகள் இன்றும் மக்களால் பேசப்படுகிறார்.
