திருச்சியில் 32 வருட பழமையான பலகாரக்கடை

“வெற்றிக் கதை சொல்லும் வயதான தம்பதியினர்!”

0
full

உறையூர், நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் சீனிவாசன் – பர்வதம் தம்பதியினர். இவர்களுக்கு மகேஸ்வரி, காயத்ரி, ஜெயம் என மூன்று பெண் பிள்ளைகள். தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்த கூடலூரை பூர்வீகமாக கொண்டவர்கள், திருமணமான பிறகு திருச்சியில் குடியேற்யிருக்கின்றனர்.

மூன்றுமே பெண் பிள்ளைகள் என்பதால் அவர்களை எப்படியாவது கறையேற்றிவிட வேண்டும் என நினைத்த சீனிவாசன் கவரிங் நகைகளுக்கு பயன்படுத்தப்படும் கல் தயாரிக்கும் பட்டறையில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அவரது மனைவி பர்வதமோ, அக்கம் பக்கத்து வீடுகளுக்கு வீட்டு வேலை செய்து கிடைக்கின்ற காசில் குடும்பத்தை சிரமத்துடன் நடத்தி வந்துள்ளார்.

கல் பட்டறை தொழில் கொஞ்சம் கொஞ்சமாக டல்லடிக்கவே, அந்த வேலையை விட்டிருக்கிறார் சீனிவாசன். இதற்கிடையே, உடல்நிலை மோசமாக, கிட்டத்தட்ட ஒரு வருடம் படுத்த படுக்கையாக சீனிவாசன் கிடக்க, அவரது மனைவி பர்வதம் தான் குடும்பத்தை காப்பாற்றி வந்திருக்கிறார்.

poster

ஒருகட்டத்தில், என்றைக்கும் சொந்தமாக நாம் செய்யும் வேலை தான் நம்மை காப்பாற்றும் என நினைத்து, உறையூர் டாக்கர் ரோட்டில், நிற்கவே இடமில்லாத இடத்தில் ஒரு பெஞ்சை வைத்து வடை, போண்டா, பஜ்ஜி என பலகாரக்கடை வைத்திருக்கின்றனர். இப்படி ஆரம்பித்த இந்த பலகாரக்கடை தான் 32 வருடங்களாகியும் இன்று வரை அதே பழமையுடனும், சுவையுடனும் வெற்றிகரமாக அதே இடத்தில் இயங்கி வருகிறது.

வயதான இந்த தம்பதியினர் கடந்து வந்த பாதையையும், அவர்களுடைய அனுபவத்தையும் தெரிந்து கொள்ள ஒரு அழகான காலையில் அவர்களுடைய வீட்டில் சந்தித்தோம்.

“32 வருஷமா இந்த பலகாரக் கடையை நடத்திக்கிட்டு வர்றோம். இந்த கடையில நாங்க சம்பாதிச்ச பணத்தை வச்சி தான் என்னோட மூணு பொம்பளைப் புள்ளைங்களை நல்லபடியா கல்யாணம் முடிச்சி வச்சிருக்கோம்” என்ற பெருமித்தோடு பேச்சை ஆரம்பித்தார் பர்வதம்.
“எங்க வீட்டுக்காரர் கல்லு பட்டறையில வேலைக்குப் போனப்ப மாச சம்பளம் 35 ரூபாய் தான். நான் வீட்டு வேலைக்கு போய் மாசம் 15 ரூபாய் சம்பாதிப்பேன். இந்த 50 ரூபாய் சம்பளத்தை வச்சிக்கிட்டு தான்

ukr

குடும்பத்தை நடத்துனோம். பல சிரமத்தையும், மனக் கஷ்டத்தையும் தாண்டி சொந்தமா ஒரு தொழில் தொடங்குனா என்ன?ன்னு தான் இந்த பலகாரக் கடையை ஆரம்பிச்சோம். 32 வருஷத்துக்கு முன்னாடி இந்த கடையை ஆரம்பிக்குறப்ப மசால் வடையும், மசால் போண்டாவும் நாலணா! பஜ்ஜி எட்டணா. இப்போ, பஜ்ஜி ஒரு ரூவா, மசால் வடையும், மசால் போண்டாவும் ரெண்டு ரூபா.

கடை போட்ட புதுசுல ஒரு நாளைக்கு எல்லா செலவும் போக 5 ரூபாய் மிஞ்சும். இப்படி ஒத்த ஒத்த பைசாவா சேர்த்து தான் என் மூணு புள்ளைங்களையும் நல்ல படியா கட்டிக்குடுத்து, இன்னைக்கு நிம்மதியா வாழ்ந்துட்டு இருக்கோம். கடை ஆரம்பிச்சப்ப என்ன சைஸ்ல, தரத்துல கொடுத்தோமோ அதையே தான் இன்னைக்கு வரை கொடுத்துக்கிட்டு இருக்கோம்.
இன்னைக்கு கடைங்கள்ல வடையோ, பஜ்ஜியோ 5 ரூவாய்க்கு மேல விக்குது. அவங்களை மாதிரி நாங்களும் காசுக்காக பெருசாவும், விலையை அதிகமாவும் செய்யறதில்லை. இப்ப நாங்க போடுற அளவுல செஞ்சா தான் நல்ல மொறுமொறுப்பாவும், நல்லா வெந்தும் டேஸ்டா இருக்கும்” என்றார்.
“இன்னைக்கு மிக்ஸி, கிரைண்டர்னு பல வசதிகள் இருந்தாலும், கையில தான் இன்னும் வடைக்கான மாவை ஆட்டுறோம்.

அதுமட்டுமில்லாம, வீட்டுல இருந்து எவ்வளவு மாவை எடுத்துட்டு போறோமோ, அது முடிஞ்சதுக்கு அப்புறம் கடையை காலி பண்ணிடுவோம். காசுக்காக மாவை போட்டு அங்க ஏனோ தானோன்னு ரெடி பண்றதுல்ல. அப்படி பண்ணுணா, பொருளோட தரம் சரியா இருக்காது. அடுத்த நாள் நம்மளை தேடி வரமாட்டாங்க” என செய்யும் தொழில் மீது தனக்குள்ள பக்தியையும், நேர்மையையும் சீனிவாசன் கூறினார்.

இடைமறித்த பர்வதமோ, “ஒரு நாளைக்கு நாங்க கடை போடுலனா, அடுத்த நாள் கடைக்குப் வர்றவங்க, ‘ஏன்! நேத்து கடை போடலை, உடம்பு ஏதும் சரியில்லையா!ன்னு அக்கறையா விசாரிப்பாங்க. அப்படி என்ன தான் நீங்க இந்த வடையில சேர்க்குறீங்க, இவ்ளோ டேஸ்டா இருக்கு! என என் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஆதரவும், உற்சாகமும் கொடுத்திட்டு வர்றாங்க.

போன வாரம், என் கடைக்கு வந்த ஒரு பொண்ணு, ‘சின்ன வயசுல இருந்து நான் உங்க வடையை சாப்பிடுறேன்னு சொல்லுச்சு!’ இப்படி மனசார நாம ஒரு தொழிலை செஞ்சுக்கிட்டு வர்றோமுன்னு நினைக்கையில மனசுக்கு ரொம்ப சந்தோஷமாவும், திருப்தியாவும் இருக்கு”. என்றார்.

வயதான காலத்திலும் செய்யும் தொழிலில் நேர்மையையும், தரத்தையும் கடைபிடிக்கும் இந்த தம்பதிகள் இன்னும் பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்.

half 1

Leave A Reply

Your email address will not be published.