அரிஜன மக்களுக்காக போராடிய பா. வெங்கடாசலம் பிள்ளை

திருச்சியின் அடையாளங்கள் - 22

0
D1

திருச்சியின் அடையாளம். தமிழகத்தின் இரண்டாம் தலைநகரான திருச்சி, பல அடையாளங்களுடன் நிமிர்ந்து நின்றுள்ளது. இங்கே வாழ்ந்தவர்கள் ஏராளம். மக்கள் மனதில் நிலைத்து நின்ற பலர் திருச்சியின் அடையாளங்களாக விளங்கினார்கள். அந்த அடையாளங்ளை “நம்ம திருச்சி வார இதழ்” மூலம் திரும்பிப் பார்ப்போம்.

இந்தவாரம் திருச்சியின் அடையாளமாக விளங்கிய வெங்கடாசலம் பிள்ளை .

தியாகி பா. வெங்கடாசலம் பிள்ளை, அப்போதைய திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டம், அரியலூரை அடுத்த உடையார் பாளையம் அருகிலுள்ள வானதிரையன் பட்டிணத்தில் 1903ஆம் ஆண்டு பிறந்தார்். பெற்றோர் பாலசுப்பிரமணியம்-செம்பகம் அம்மாள். சட்டம் பயின்று அரியலூரில் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டாலும் இளமையிலேயே நாட்டு விடுதலையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.

D2

1933ல் அரிசன சமூகத்தின் முன்னேற்றத்திற்கான மாநாடு நடத்தியவர். கிராம பஞ்சாயத்துக்களின் வளர்ச்சியில் பெரிதும் பங்காற்றி அரியலூர் தாலுக்காவில் பல பஞ்சாயத்து போர்டுகளை நிறுவியவர். 1944-ம் ஆண்டில் அரியலூரில் மாநில காங்கிரஸ் கட்சியின் மாபெரும் மாநாடு ஒன்றினை எஸ்.கே.பாட்டீல் தலைமையில் நடத்திய பெருமைக்குரியவர்.

N2

1935 முதல் ஜில்லா போர்டு உறுப்பினராகவும் 1942 முதல் 1948 வரை ஜில்லா போர்டு தலைவராகவும், சென்னைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும் இருந்தவர். 1942-ல் இவர் மாவட்ட கூட்டுறவுப் பண்டகச்சாலை தொடங்கிட காரணமாயிருந்தார். 1942 முதல் 1952 வரையிலும் 1952 முதல் 1969 வரையிலும் இவர் பொறுப்பில் இருந்தபோதுதான் மாவட்ட கூட்டுறவு பண்டகச்சாலைக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் வாங்கி அதற்கென கட்டிடங்கள் கட்டினார்.

மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக 25 ஆண்டுகள் 1965 முதல் 1969 வரை அதன் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். மாவட்ட கூட்டுறவு நூற்பாலை தொடங்க முக்கிய பங்கு வகித்ததுடன், அதன் நிர்வாகக் குழு உறுப்பினராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். மாவட்ட மார்க்கெட் கமிட்டித் தலைவராக 11 ஆண்டுகளும், மாவட்ட மெட்டல் ரோலிங் மில்லின் தலைவராகவும் சிறப்பாக தொண்டாற்றினார்.

1937-ல் தாலுக்கா காங்கிரஸ் தலைவராகவும் 1937 ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி உறுப்பினராக அரியலூரில் வெற்றி பெற்றுள்ளார். ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துக் கொண்டு 6-மாத சிறை தண்டனை அனுபவித்துள்ளார். 1946-ல் மீண்டும் அரியலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அப்போது பிரகாசம் அமைச்சரவையில் பொதுப்பணித்துறையில் அமைச்சரின் பேரவைச் செயலாளராக சீரிய முறையில் பணியாற்றினார். அரியலூர் தாலுக்காவில் பல வளர்ச்சிப் பணிகளை செய்தும், மாவட்டத்தில் கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடியாகவும் விளங்கிய வெங்கடாசலம் பிள்ளை 1986இல் இயற்கை எய்தினார்.

மீண்டும் அடுத்தவாரம்
இன்னொரு ஆளுமை குறித்து தெரிந்துகொள்வோம்.

N3

Leave A Reply

Your email address will not be published.