அன்று ஷு வாங்கக் கூட காசில்லை – இன்று தமிழகத்தின் தங்க மகன்கள்

சாதித்த திருச்சி இளைஞர்கள்

0
1

தமிழகத்துக்கு தடகள வீரர் – வீராங்கனைகளை உருவாக்குவதில், திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டங்களுக்கு எப்போதும் முக்கிய பங்கு உண்டு. புதுக்கோட்டை சாந்தி, திருச்சி ரயில்வே துறையில் பணியாற்றும் சூர்யா, ஆசியத் தடகளப்போட்டியில் தங்கம் வென்ற முதல் தமிழர் லட்சுமணன், லால்குடி ஆரோக்கிய ராஜிவ் எனச் சாதனையாளர்கள் பட்டியல் நீண்டுகொண்டே உள்ளது. வெற்றிகளைக் குவித்த பிறகே அவர்களைப் பற்றி பேசுகிறோம். ஆனால் இந்த வெற்றிக்காக இவர்கள் சந்தித்த கஷ்டங்கள் ஏராளம்.

பள்ளிக்கூட சத்துணவும்-பழைய ஷூவும்தான் ஜெயிக்க வைத்தது
கடந்த ஆசிய தடகளப்போட்டியில் திருச்சி லால்குடியைச் சேர்ந்த ஆரோக்கியராஜிவ் 4 * 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் தங்கமும் ,400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.

மேலும் கடந்த 2015-ம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய கிராண்ட் ஃபிரி தடகள போட்டியில், 400மீட்டர் ஓட்டத்தில் 45.85 வினாடிகளில் இலக்கினை அடைந்து சாதனை படைத்தார். இந்தச் சாதனைகளுக்காக அவர் சந்தித்த சோதனைகள் அதிகம்.

2

சொந்தகிராமத்தில் குடியிருந்த குடிசை வீடும் இடிந்துபோக, பக்கத்துக் கிராமமான மணக்காலில் வாடகை வீடெடுத்து தங்கினர் இவரின் குடும்பத்தார். ஆரோக்கியராஜிவ்-ன் அப்பா சௌந்தர்ராஜன், தாய் லில்லி சந்திரா, தம்பி ரஞ்சித் நீளம் தாண்டும் வீரர், தங்கை எலிசபத் ராணி கைப்பந்து வீராங்கனை.

”அப்பா ஒரு ஸ்போர்ட்ஸ் மேன், அவர் மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்டார். தன்னைப்போல நீங்களும் விளையாட்டுடில் ஜெயிக்க வேண்டும் என அவர் கொடுத்த ஆர்வம்தான் எங்களை விளையாட வைத்தது.

முதன்முதலில் கிராமத்தில் நடந்த பொங்கல் விளையாட்டு போட்டியில் ஓடி பரிசு வாங்கிய ஆரோக்கியராஜிவ், லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும்போது, நீளம் தாண்டுதல், டிரிபிள் ஜம்ப் போட்டிகளில் கலந்துகொண்டார். ஆனால் ஜெயிக்கல. அவரின் ஆர்வத்தைப் பார்த்த பயிற்சியாளர் ராமச்சந்திரன், பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார்.

அதுவரை ஷூ போட்டுக்கொண்டுதான் ஓடவேண்டும் என்று தெரியாத ஆரோக்கியராஜிவ். குடும்ப கஷ்டத்தால் பயிற்சியாளர் சொல்லும் உணவுகள் வீட்டில் கிடைக்காது. அம்மா தினமும் வாங்கிக் கொடுக்கும் ஒரு லிட்டர் பால்தான் சத்தான உணவு. பள்ளிக்கூட நாட்களில் தினமும் மாலையில் பயிற்சி இருக்கும். அதனால் தினமும் மதியம் பள்ளிக்கூடத்தில் போடும் சத்துணவு சாப்பாட்டைக் கொஞ்சம் கூடுதலாக சாப்பிட்டுவிட்டுதான் ஓடுவார்.

அவரின் நண்பர்களான, நிர்மல் மத்தியானந்த், விஜயபாலன், மார்ஷல், கார்த்திக் இவர்களோடு சாப்பிடும் ஆரோக்கியராஜிவிடம், அவரின் நண்பர்கள் தனது சாப்பாட்டைக் கொடுத்து சாப்பிடச் சொல்வார்கள். இதுபோன்ற நண்பர்கள் இல்லைன்னா நான் அப்போது பயிற்சி எடுத்துக்கொள்ளவே முடியாது.

அவரின் குடும்ப சூழலை புரிந்துகொண்ட பயிற்சியாளர் ராமச்சந்திரன், அவருக்கு உதவ ஆரம்பித்தார். போட்டிகளில் கலந்துகொள்ள ஷூவாங்க காசில்லாமல் அவரின் பழைய ஷூவை கொடுத்து ஓடிதான் ஜெயிக்க ஆரம்பித்தார் ஆரோக்கியராஜிவ்.

விளையாட்டில் இருந்த ஆர்வம், படிப்பில் வராததால், விளையாட்டில் அதிகம் கவனம் செலுத்தினார். அடுத்து திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.ஏ வரலாறு படித்த இவருக்கு, அந்தக் கல்லூரியில் சீனியராக இருந்த குமார் என்பவர் அறிவுரையை ஏற்று, ஸ்போர்ட்ஸ் பிரிவில் நீளம் தாண்டுதல், டிரிபில் பிரிவில் ஹவில்தார் பணியில் சேர்ந்தார்.

அங்குச் சேர்ந்தபிறகு, ஆரோக்கியராஜிவ் தான் இதுநாள்வரை சாப்பிட்ட சாப்பாட்டுக்கும் ஒரு தடகள வீரனின் உணவுக்கும் உள்ள வித்தியாசம் புரிந்தது. அங்கிருந்த ராம்குமார் என்பவர் அறிவுரையின்படி, அதுவரை டிரிபிள் ஜம்ப் போட்டியில் கவனம் செலுத்தியவர், 400 மீட்டர். ஓட்டத்தின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

கடந்த 2012ல் சென்னையில் நடந்த தேசிய ஓபன் தடகளப் போட்டியில் தங்கம், அடுத்து 2013ல் தாய்லாந்து மற்றும் இலங்கையில் நடந்த ஆகிய கிராண்ட்ப்ரீ போட்டிகளில் இரண்டு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் என அடுத்தடுத்து ஜெயித்தார்.

இந்நிலையில் ஆரோக்கிய ராஜிவின் காலில் தசை பிடிப்பு காரணமாக சரியாக ஓடாததால், காமன்வெல்த் போட்டியில் ஜொலிக்க முடியவில்லை. அதோடு அடுத்து அவரின் வலதுகால் பின்னந்தொடையில் தசை விலகியிருந்தது. நீண்ட முயற்சிக்குப் பிறகு அதில் இருந்து தேறினார்கள்.

அடுத்து ஆசிய கிராண்ட் பிரியில் தங்கம் வெல்ல அந்தச் சோதனைகள் தான் காரணம். அடுத்து ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லனும்னு பயிற்சி எடுத்துக்கொண்டேன். ஆனால் ஒலிம்பிக்கில் தகுதி பெற்றும் ஜெயிக்க முடியவில்லை.

இவரின் இடிந்துபோன வீட்டைப் பார்த்த மாவட்ட நிர்வாகம். கடந்த வருடம் திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆரோக்கிய ராஜிவ்க்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி வீடுகட்டிக் கொடுத்தது. இப்போது லால்குடி ஆங்கரையில் ஆரோக்கியராஜிவ்-ன் குடும்பம் குடி புகுந்துள்ளது. தற்போது ஆசிய தடகளப்போட்டியில் 4 * 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் தங்கமும் ,400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.

ஷூ வாங்க பணமில்லாமல் தவித்த லெட்சுமணன்.
தடகள வீராங்கனையும், திருச்சி ரயில்வேயில் பணியாற்றும் சூர்யாவின் தந்தையும் முன்னாள் தேசிய தடகளச் சாம்பியனான புதுக்கோட்டை லோகநாதன் கவிநாடு பயிற்சி மையத்தை நடத்தி வருகின்றார். இங்குப் பயிற்சி எடுத்துக்கொண்ட வீராங்கனைகள் பல சாதனைகளை படைத்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், செக்கூரணி கிராமம்தான் லட்சுமணனுக்குச் சொந்த ஊர். அவரின் அப்பா கோவிந்தன் விபத்து ஒன்றில் பலியானார். இவரது தாய் ஜெயலட்சுமிதான் கூலி வேலைப் பார்த்து தன் ஐந்து குழந்தைகளையும் வளர்க்க ஆரம்பித்தார். அம்மாவின் உழைப்பில் பிள்ளைகள் சாப்பிடவே வழியில்லாத நிலையிலும், தடகளப்போட்டிகளில் லட்சுமணன் கலந்துகொள்ள ஆரம்பித்தார். 16வயதில் கவிநாடு விளையாட்டுக் கழகத்தில் சேர்ந்தார். ஷூ வாங்க வசதியில்லை. வெறுங்காலுடனே பல கிலோ மீட்டர் ஓட ஆரம்பித்தார்.

பத்தாம் வகுப்புக்கு மேல் அவரது குடும்பத்தில் யாரும் படிக்கவில்லை. பத்தாம் வகுப்பு முடித்த லெட்சுமணனுக்கு, இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக பணி கிடைத்தது.

2016-ல் நடந்த ஏசியன் டிராக் அண்ட் ஃபீல்டுல 5,000-மீட்டர்ல வெள்ளியும், 10,000மீ ஓட்டத்தில் வெண்கலம் ஜெயித்தார். அடுத்து நடந்த நேஷனல் போட்டியில் தங்கம். அடுத்து லட்சுமணன் கலந்துகொண்ட 5,000 மீ, 10,000 மீட்டர்ல போட்டிகளில் சாதனைப்படைத்தார். இப்போது 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். கடந்த 1983 ஆண்டுக்குப் பிறகு, உலகத் தடகளப் பேட்டியில் எந்த இந்திய வீரரும் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்றதில்லை.

இப்போது அதிலும் லட்சுமணன் சாதிக்கவே, ஆகஸ்ட் மாதம் லண்டனில் நடக்கும் உலகத் தடகளப் போட்டியில் கலந்துகொள்ளும் தகுதி பெற்றுள்ளார். வெற்றி குறித்து லட்சுமணன், உலகத் தடகளப் போட்டியிலும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே என் லட்சியம்” என்றார்.

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக அரசு, லட்சுமணனுக்கு ரூபாய் 20 லட்சமும், ஆரோக்கிய ராஜிவுக்கு ரூபாய் 15 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளது..

இளம்வயதில் வாட்டிய வறுமை, இவர்களின் திறமையால் விலக ஆரம்த்துள்ளது.

ஏழ்மையில் சாதித்த இவர்களை நாமும் வாழ்த்துவோம்!

3

Leave A Reply

Your email address will not be published.