திருச்சி ‘பா’ரதன்

திருச்சியின் அடையாளங்கள் -11

0
Full Page

திருச்சி பாலக்கரை எடத்தெருவில, 30-09-1934ம் ஆண்டு கோ.இரங்கசாமி-காமாட்சிஅம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் பாரதன். இயற்பெயர் தங்கவேலன், பள்ளிக்கூட வயதிலேயே இலக்கியங்கள் படைக்கும் ஆற்றல் உள்ளவராக விளங்கியதால், இவரின் முதல் படைப்பு 1946-ல் பாலர்மலரில் வெளியானது.

எழுத்தின் மீதான ஆர்வத்தில், 12வயதிலேயே கையெழுத்துப் பத்திரிகை ஒன்றையும் நடத்தினார். அந்த இதழுக்கும் உறுதுணையாக தனது நண்பரான ஐ.சண்முகநாதனை இணைத்துக்கொண்டார். அவர் வேறு யாருமில்லை புகழ் பெற்ற நாவல் ஆசிரியர் நாதன்தான் அவர்.தங்கவேலன் திருச்சி பாரதன் ஆனது எப்படி


இரத்தக்கண்ணீர் படத்தில் ‘‘குற்றம் புரிந்தவன்” ராஜராஜன் படத்தில் “நிலவோடுவான் முகில்” மங்கையர்க்கரசி படத்தில் ‘‘காதல் கனிரசமே…” பாடல் உள்ளிட்ட காலத்தால் அழியாத பல பாடல்கள் இயற்றிய கு.சா.கி. எனப்படும் கு.சா.கிருஷ்ணமூர்த்தி மீதுள்ள பற்றினால் தன்னுடைய எழுத்துலகின் மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டார். அவர் எழுதும் படைப்புகளை எல்லாம் கு.சா.கி.தாசன் என்ற புனைப் பெயரில் பத்திரிகைகளில் வெளியிட்டு வந்தார்.

குருவும் சீடரும் ஒருவரை ஒருவர் பார்க்காமலே நட்புப் பாராட்டினார்கள். பின்னொரு நாளில் இருவரும் நேரில் சந்தித்தார்கள். ‘‘யாரும் யாருக்கும் தாசனாக வேண்டாம்” என்று அன்புக் கட்டளையிட்டு கு.சா.கியே ‘‘ திருச்சி பாரதன்” எனும் பெயர் சூட்டினார். தனது எழுத்துலக குருவால், பெயர் சூட்டப்பட்ட திருச்சி பாரதன், அந்தப் பெயரிலேயே குழந்தைகளுக்கான பாடல்கள், கதைகள், நாடகங்கள், முருகப்பக்திப்பாடல்கள், தமிழிசைப்பாடல்கள் பல படைப்புகளை தந்துள்ளார்.

மேலும் மேல்நாட்டு மருமகள், கந்தர்அலங்காரம், தோடிராகம், ராகபந்தங்கள் ஆகிய சில திரைப்படங்களில் பாடல்கள் எழுதிப் புகழ் பெற்று கலைமாமணி பட்டமும் வாங்கிய திருச்சி பாரதன், தமிழ்இலக்கியவரலாற்றில் தனக்கெனத் தனிஇடம் பெற்றார்.

தனது பள்ளிகாலத்தில் 10-ம் வகுப்பு முடித்த இவர், திருச்சி வெல்லமண்டியில் சில மாதங்கள் கணக்கராகப் பணிபுரிந்தார் பிறகு, தனது நண்பர் ஐ.சண்முகநாதன் வேண்டுகோளின் பேரில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நடத்திய “தினந்தந்தி” இதழில் செய்தி ஆசிரியராக பணி செய்தார்.
தினந்தந்தி நாளிதழில் பணியாற்றுபவர்கள் அவ்வளவு எளிதில் மற்ற கலைத்துறையில் ஈடுபட முடியாதபடி கட்டுப்பாடுகள் நிறைய உண்டு. இதையெல்லாம் கடந்து சி.பா.ஆதித்தனாரின் அன்பும் அறிவுரையும் பெற்ற பாரதன், சிறப்பு அனுமதியுடன் கலைத்துறையில் கால்பதித்துச் சாதனைகள் பல புரியத்துவங்கினார்.

இவர் எழுதிய ‘‘ பலாப்பழம் ’’ நாடக அரங்கேற்றத்திற்கு சி.பா.ஆதித்தனார் தலைமையேற்று ‘‘கலைத்துறை வாயிலாகவும் தமிழ் அருமையை உணர்த்தவேண்டும் என்று கூறும் பாரதிதாசனின் நோக்கத்தை நிறைவேற்றுவதாக இந்நாடகம் உள்ளது’’ என்றும் பாராட்டினார். தான் ஏற்றுக்கொண்ட தினந்தந்தி செய்தி ஆசிரியர் பணியில் 32 ஆண்டுகள் திறம்பட பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றார்.

1965 ஆம் ஆண்டு திருச்சிபாரதன் எழுதிய ‘‘ அப்பாவின் ஆசை ’’ எனும் இது குழந்தைகளுக்கான நாடகம் டி.கே.சண்முகம் கலைக்குழுவினரால் அரங்கேற்றப்பட்டு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் வெற்றிகரமாக வலம் வந்தது. இந்தியாவிலேயே முதல்முதலில் தொழில்முறையில் குழந்தைகளுக்கான நாடகம் அரங்கேற்றிய பெருமை டி.கே.சண்முகம் கலைக்குழுவினருக்கும், நாடகம் எழுதிய பெருமை திருச்சிபாரதனுக்கு உண்டு.

பேரறிஞர்அண்ணா இந்நாடகத்தை நேரில் கண்டு புகழ்ந்தார். இந்நாடகத்தில் ‘‘உழைத்துப் பிழைக்க வேண்டும்….’’என்னும் பாடல் ஒரு காட்சியில் அம்புலி பாடி பதிவு செய்யப்பட்டது.

Half page

முக்கிய கதைப்பாத்திரம் ஏற்று நடிக்கும் ஒரு சிறுவன் வாயசைத்து நடிப்பது வழக்கம். ஒருநாள் ஒலிநாடா அறுந்து விட, சிறுவனோ சமயோசிதமாக பின்னாலிருந்து இசைக்கப்படும் இசைக்குழுவினரின் இசைக்கேற்ப பாடி அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினான். அன்று முதல் அச்சிறுவன் மேடையில் பாடும் நடிகராகவும் பெயர் பெற்றார்.

அந்தச் சிறுவன் வேறு யாருமில்லை திரையுலகை கலக்கிக்கொண்டிருக்கும் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்.
இவருடைய படைப்புகளில் ஒன்றான ‘‘கந்தன் காவியம்’’ நாட்டிய நாடகம் 700முறைக்குமேல் அரங்கேற்றப்பட்டது. இந்நாடகத்தின் 100வது அரங்கேற்றத்திற்கும் 500வது அரங்கேற்றத்தில் கலந்துகொண்ட முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன், ‘‘ஆயிரம்முறை பார்த்தாலும் கந்தன் காவியம் நாட்டிய நாடகம் அலுக்காது’’ என்றும் புகழ்ந்தார்.

திருச்சி பாரதனின் இலக்கியப் பணியைப் பெரும்பாலும் வளர்த்த இதழ்களில் முதன்மையிடம் பெறுவது புரட்சிக்கவிஞரின் ‘‘குயில்’’ இதழின் தொடர்ச்சியாக விளங்கும் கலைமாமணி பொன்னடியாரின் பொன்விழா காணும் ‘‘முல்லைச்சரம்’’ இதழ் ஆகும். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் உருவாக்கிய சென்னைத் தமிழ்க்கவிஞர் மன்றத்தின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்.

திருச்சிபாரதன் தமிழிலக்கியத்தில் காலத்திற்கேற்ப புதுமைகளைச் செய்ய வேண்டும் என்பதில் தனியாத ஆர்வம் உடைய இவர், சிவனுக்கு திருவெம்பாவை, திருமாலுக்கு திருப்பாவை போல முருகனுக்காக ‘‘முருகுப்பாவை ” என்னும் நூலையும் சங்க இலக்கிய நூல்களான அகநானூறு, புறநானூறு போல முருகனுக்காக ‘‘குகநானூறு ” ,‘‘சுகநானூறு” ஆகிய இருநூல்களையும் நீதி நூலான இன்னாநாற்பது போல ‘‘தமிழ்நாற்பது” நூலையும் எழுதினார்.

திருவள்ளுவரின் திருக்குறளை அடியொற்றி திருக்குறள் இசைப்பாடல் நூலையும் அருணகிரிநாதர் போல முருகன் மீது 1340 இசைப்பாடல்கள் கொண்ட ‘‘குகன் கீதாஞ்சலி” நூலையும் எழுதிவெளியிட்டார்.
திருப்புவனம் ஜி.ஆத்மநாதன்,சீர்காழி கோவிந்தராஜன் உள்ளிட்ட புகழ்பெற்ற பாடகர்கள், திருச்சிபாரதன் பாடல்களை மட்டுமே பாடக் கூடிய முழுஇசைக்சேரிகள் 180க்கும் மேல் நடந்துள்ளன. இவருடைய பல படைப்புகளைப் பல்வேறு பல்கலைக்கழகங்கள் ஆய்வுக்கு ஏற்றுக்கொண்டன.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் ‘‘ குகநானூறு ” நூலைச் சிறந்த நூலாக அறிவித்து 5000ரூபாய் பரிசு வழங்கியது. இவர் எழுதிய நூல்களுக்கு அணிந்துரை வழங்கிய அறிஞர் பெருமக்கள் எண்ணிக்கையில் நூறுக்கும் மேல் உள்ளார்கள்.

தமிழகஅரசின் கரும்பலகைத்திட்டத்தின் கீழ் கவிஞர் எழுதிய ‘‘பூந்தோட்டம்’’ நூலினை 6000 பிரதிகள் வாங்கிக்கொண்டார்கள். குழந்தைகள், சமூகம், கவிதை, இசை, நாட்டியம், நகைச்சுவை, தத்துவம்,வரலாறு,மேடைநாடகம் என ஒன்பது வகையான தமிழ் நாடகங்களையும் 2500க்கும் மேற்பட்ட தமிழிசைப்பாடல்களையும், 75 நூல்களையும் உலகிற்குத் தந்தார்.

திருவையாறு தமிழிசை மன்றத்தில் தொடர்ந்து பல ஆண்டுகள் துணைத்தலைவராகவும் இருந்தவர், பக்தவச்சலம்,பேரறிஞர் அண்ணா,மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் போன்ற முதல்வர்களால் பாராட்டுப்பெற்றவர். கடந்த 26-11-2008ம் ஆண்டு 75வயதில் அவர் மறைந்தார்

65ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து சாதனைகள் பல செய்தவர் கலைமாமணி கவிஞர் திருச்சி பாரதன் நூல்களை நாட்டுடைமையாக்கியும் அவர் வாழ்ந்த வீட்டினை நினைவு இல்லமாக்கவும்,அவரது பற்றாளர்கள் முயன்று வருகின்றனர்.

– கவிஞர் முனைவர் மா.தாமோதரகண்ணன்

Quarter page

Leave A Reply

Your email address will not be published.