
குளத்தங்கரை அரச மரம் என்னும் தமிழின் முதல் சிறுகதையை வ.வே.சு. ஐயர் 1915-ம் ஆண்டு எழுதினார்.
அதற்கு முன்னரே உலக சிறுகதை வரலாற்றில் தமிழ்ச் சிறுகதைகளுக்கு சிறப்பிடம் உண்டு என்கிறார் எழுத்தாளர் பிரபஞ்சன், ஆறில் ஒரு பங்கு என்ற கதையை 1910-ல் பாரதியார் எழுதினார்.
ஆனால், தமிழ்ச் சிறுகதை வரிசையில் குளத்தங்கரை அரசமரம் என்ற பெயரில் முதலில் சிறுகதையை எழுதியவர் வ.வே.சு.அய்யர்.

தமிழுக்கு முதல் ஞானபீடம் பெற்றுத்தந்த அகிலன் திருச்சி மாவட்டத்தில் பிறந்து ரயில்வே சர்வீஸில் பணிபுரிந்தவர். வெகுஜன உலகின் இலக்கிய சிகாமணி கல்கி கிருஷ்ணமூர்த்தி திருச்சி இஆர்ஐ பள்ளியில்தான் படித்தார்.

கள ஆய்வுப் படைப்பாளியான ராஜம் கிருஷ்ணன் திருச்சி முசிறியைச் சேர்ந்தவர். பெண்களின் உள்ளம் கவர்ந்த நாவலாசிரியர் லக்ஷ்மி திருச்சி தொட்டியத்தைச் சேர்ந்தவர் இப்படி பல எழுத்தாளர்கள் வாழ்ந்த ஊர் திருச்சி.
தமிழ்ச் சிறுகதையை நூறுவருடங்களுக்கு முன் எழுதிய வ.வே.சு ஐயரின் வாழ்க்கையை நம்ம திருச்சி இதழில் திருச்சி அடையாளங்கள் பகுதியில் வெளியிடுவதில் பெருமை அடைகிறோம்.
திருச்சி வரகனேரி வேங்கடேச சுப்பிரமண்ய ஐயர் எனும் பெயரின் சுருக்கமே வ.வே.சு.ஐயர், திருச்சி வரகனேரியைச் சேர்ந்த இவர் 1881-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி பிறந்தார். இவரது பெற்றோரான வேங்கடேச ஐயர்-காமாட்சி ஆகியோர், மூத்த மகனான வ.வே.சு ஐயரை, பள்ளி படிப்பு முதல் கல்லூரிவரை திருச்சி ஜோசப் கல்லூரியில் படிக்க வைத்தனர். 1895-ம் ஆண்டு “மெட்ரிகுலேஷன்” தேர்வில், மாநிலத்தில் ஐந்தாவது மாணவராகத் தேர்ச்சி பெற்றார். 1897-ல் தனது அத்தைமகள் பாக்கியலட்சுமியைத் திருமணம் செய்த இவருக்கு இரு மகள்கள், ஒரு மகன் என குழந்தைகள் பிறந்தனர்.
அதன்பிறகும் கல்லூரி படித்த வ.வே.சு ஐயர், 1899ல் வரலாறு, பொருளாதாரம், இலத்தீன் உள்ளிட்டவற்றில் பி.ஏ., பட்டம் பெற்றார். இலத்தீன் மொழியில் முதன்மைச் சிறப்பும் பெற்ற இவர், 1902இல் “பிளீடர்” என்னும் வக்கீல் தேர்வை எழுதி, திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.

இவரின் வாதம் திருச்சி நீதிமன்ற வரலாற்றில் முக்கியமானவை, இவரின் வழக்கை நீதிமன்றமே ஆவலுடன் எதிர்பார்க்கும். அடுத்து 1906 ல் பர்மா, இரங்கூனில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். அடுத்து 1907ம் ஆண்டு இலண்டனில் “பாரிஸ்டர்” பட்ட மேற்படிப்பில் சேர்ந்தார்.
லண்டனில் தங்கியிருந்தபோது, சாவர்க்காரைச் சந்தித்தார். அடுத்து சாவர்க்காரின் வலக்கரமாக மாறினார். இலண்டன், பாரீஸ், பெர்லினில் இயங்கிய இந்திய தேசிய புரட்சி வீரர்கள் குழுவில் இணைந்தார். விடுதலைக்கான பாரிஸ்டர் பட்டத்தையும் துறந்தார்.
1908-ல் இலண்டன் ஹைகேட் யூனிடேரியன் சர்ச்சில் முதன்முதலாக கம்பராமாயணத்தை ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றினார். 1909-ம் ஆண்டு மே 29ஆம் தேதி, புதுச்சேரியில் இருந்து வெளிவந்த “இந்தியா” (ஆசிரியர் பாரதியார்) இதழில், ஜுஸப் கரிபால்டி (Giuseppe Garibaldi) சரித்திரம் என்ற கட்டுரைத் தொடரை எழுதினார் வ.வே.சு.ஐயர். இதைத்தொடர்ந்து இந்தியா இதழில், மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.
வ.வே.சு.ஐயர் எழுதிய “இலண்டன் கடிதங்கள்” குறிப்பிடத்தக்கவை. தேசிய – சர்வதேசிய அரசியல் நடப்புகள், சமூகம், வரலாற்றுக் குறிப்புகள், தமிழ், தமிழ்ப் பண்பாடு என பலவற்றை எழுதினார்.
தொல்காப்பியம், சங்க இலக்கியம் கண்ட மூவேந்தர் மரபை, பாரதியார் போன்று வ.வே.சு.ஐயரும் நெஞ்சாரப் புகழ்ந்துள்ளார். தமிழ் தேசியமும், திராவிட தேசியமும் மூவேந்தர் மரபைப் போற்றிப் புகழ்வதற்கு முன்னோடியாக வ.வே.சு.ஐயர் திகழ்ந்தார் என்பது வரலாற்று உண்மையாகும்.
“திருவள்ளுவரையும், கம்பரையும் வ.வே.சு.ஐயர் தமது வழிபடு தெய்வங்களாகவே கொண்டாடினார். பாரதி நடத்தி வந்த இந்திய இதழில் தொடர்ந்து பல கட்டுரைகளையும் எழுதினார். சுதந்திர தாகத்துடன் இலக்கிய சேவையும் செய்து வந்த வ.வே.சு. ஐயர் 1925ம் ஆண்டு ஜீன் 3ம் தேதி தன்னுடைய 44வது வயதில் பாபநாசம் கல்யாண தீர்த்த அருவியில் தவறி விழுந்த தன்னுடைய மகளை காப்பாற்ற முயன்ற போது சுழலில் சிக்கி இறந்தார்.
வரகனேரி உள்ள அவருடைய வீட்டை திமுக ஆட்சி காலத்தில் 05.05. 1999 ஆம் ஆண்டு அமைச்சர்கள் முல்லைவேந்தன், கே.என்.என்.நேரு. செங்குட்டுவன் ஆகியோர் அமைச்சர்களாக இருந்த போது அவர்கள் தலைமையில் அவருடைய இல்லத்தை நினைவகமாக மாற்றி திறப்பு விழா செய்தனர். தற்போது அரசாங்க நூலகமாக செயல்பட்டு வருகிறது. தினமும் அந்த பகுதியிலிருந்து 40 பேர் முதல் 50 பேர் வரை வந்து நூலகத்தை பயன்படுகிறார்கள்.
தனது வாழ்நாள் முழுவதும் தமிழை நேசித்தவர் வ.வே.சு ஐயர் அவரை பதிவு செய்வதில் நம்ம திருச்சி பெருமை கொள்கிறது.
அடுத்த வாரம் இன்னொரு ஆளுமையுடன்…
