‘புரட்சித் தலைவி’ பட்டம் கொடுத்த திருச்சி

0
1

“ஸ்ரீரங்கம் எனது பூர்வீக ஊர். என் குடும்ப முன்னோர்கள் இங்குதான் வாழ்ந்தார்கள். ஸ்ரீரங்கத்துக்கு நான் வந்து செல்வது, எனது குடும்ப வீட்டுக்கு வந்து செல்வது போன்ற உணர்வைத் தருகிறது. ஸ்ரீரங்கம் திருச்சிக்குள் வருவதால் இது எனக்கு பிடித்தமான ஊர்” மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த சிலவருடங்களுக்கு முன் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் பேசிய வரிகள் இது. ஜெயலலிதா தனது வாழ்நாள் முழுக்க திருச்சிக்கும் அவருக்கு மிக நெருங்கிய பிணைப்பு உண்டு.

ஜெயலலிதாவும் திருச்சியும்…

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தது, கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மேல்கோட்டை ஊர் என்றாலும் திருச்சி ஶ்ரீரங்கம்தான் அவரது மூதாதையருக்கு சொந்த ஊர். கீழ சித்திரவீதியில் உள்ள கோமலவிலாஸ் எனும் வீடுதான் அவர்கள் வாழ்ந்த வீடு. வறுமையினால் ஊரைவிட்டு கர்நாடகாவிற்கு பிழைக்கப்போன இடத்தில் பாட்டி கோமலவள்ளியின் மகள் சந்தியா என்கிற வேதவள்ளிக்கும்-ஜெயராம் என்பவருக்கும் திருமணமானது. ஜெயலலிதாவுக்கு இரண்டு வயது அவரது தந்தை ஜெயராம் இறந்தார்.

பெங்களூர் பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்த ஜெயலலிதா, அடுத்து சென்னை சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் படித்தார். வழக்கறிஞர், மருத்துவம் என பல படிப்புகள் படிக்க ஆசைப்பட்ட ஜெயலலிதா, தாயைப்போல் நடிகை ஆனார். வெண்ணிற ஆடை எனும் படத்தின் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.

அம்மு to புரட்சித் தலைவி…
127 திரைப்படங்களில் நடித்த மிகப்பெரிய நடிகை. திருச்சி மருத்துவக் கல்லூரி கட்டுவதற்காக ஜெயலலிதா நடனமாடியதால் 25 லட்சத்திற்கும் மேல் நிதி வசூலானது. சின்னவயதில் கோமலவள்ளியான ஜெயலலிதாவை “அம்மு’’ என அழைத்தனர். சினிமாவில் எதிர்பாராதவிதமாக நுழைந்ததைபோலவே அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். அவர் அ.தி.மு.க.வின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு அவர் முதன்முதலில் கலந்துகொண்ட கூட்டம் திருச்சி ஒத்தக்கடையில்தான் நடந்தது.

2

அதேபோல் எம்.ஜி.ஆர் முன்னிலையில், மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதாவிற்கு வெள்ளி செங்கோல் வழங்கி “புரட்சி தலைவி” என பட்டம் வழங்கியது திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.செளந்தர்ராஜன்தான். அதன்பிறகு 1991 சென்னை உட்லன்ட்ஸ் ஹோட்டலில் நடந்த கூட்டத்தில் ‘‘புரட்சி தலைவி’’ என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான பிறகு ‘‘அம்மு’’ அதிமுக தொண்டர்களுக்கு “அம்மா” ஆனார்.

பெண் போலீஸாருக்கு
1991ல் முதல்வரான ஜெயலலிதா தமிழகத்திலேயே முதன்முதலாக பெண்களின் உரிமையை பாதுகாக்க திருச்சி கண்டோன்மென்ட் காவல்நிலைய வளாகத்தில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தை துவங்கி வைத்தார். அதன்பிறகுதான் தமிழகம் முழுவதும் அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் திறக்கப்பட்டன.

நிறைவேறாத வாக்குறுதி
1982-ம் ஆண்டில் அரசியலில் நுழைந்த ஜெயலலிதா, அதன்பின் சுமார் 29 ஆண்டுகளுக்குப் பிறகே, ரங்கம் தொகுதியைத் தேர்வு செய்தார். 2011-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்த ஜெயலலிதா, அன்று மாலையே ரங்கம் ராஜகோபுரம் முன் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார்.அந்த தேர்தலில் 41,488 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் தொகுதி முழுவதும் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நன்றி கூறினார். அப்போது, குறைந்தபட்சம் 6 மாதத்துக்கு ஒருமுறை ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வருவேன் என்றார். ஆனால் அதை அவரால் நிறைவேற்ற முடியவில்லை.

அதன்பிறகு எதிர்பாராத விதமாக சொத்துக் குவிப்பு வழக்கில் 4ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் கடந்த 2014செப்டம்பர் 27-ம் தேதி முதல்வர் பதவியையும், ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பதவியையும் ஜெயலலிதா இழந்தார். அடுத்து அவர் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டிடாலும் ஸ்ரீரங்கத்துக்கு அவர் வழங்கிய திட்டங்களைவிட குறைவுதான். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல், சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என தேர்தல் பிரச்சாரத்திற்கு திருச்சி வந்த ஜெயலலிதாவின் பேச்சில் இது எனது ஊர் என்றே பேசினார்.

வாழ்நாள் முழுக்க தவ வாழ்க்கை வாழுவதாகவும் எனக்கென யாருமில்லை. தமிழக மக்கள்தான் எனது உறவு என முழங்கிய அந்த ஆளுமை மிக்க ஜெயலலிதாவின் மறைவு பெண் ஆளுமைகளுக்கான பேரிழப்பு.

3

Leave A Reply

Your email address will not be published.