ஏழை நோயாளிகளிடம் காசு வாங்காத மருத்துவர்

கடந்த 77வருடங்களுக்கு முன், ஏழைகளிடம் கன்சல்ட்டிங் ஃபீஸ் வாங்குவதில்லை என்கிற அடிப்படையில் திருச்சியில் துவங்கப்பட்டது ஜி.வி.என் மருத்துவமனை. அதன்படியே இன்றுவரை இயங்கி கொண்டிருக்கிறது.
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் 9மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டமாக இருந்தபோது, மருத்துவப்படிப்பு முடித்த மருத்துவர்கள் இருப்பது என்பதே மிகக்குறைவு. ஆனால் 1939ம் ஆண்டு திருச்சி சிங்காரத்தோப்பில் ஒரு சின்ன இடத்தில் மருத்துவ சேவையை டாக்டர் விஸ்வநாதன் துவங்கினார் .
‘மருத்துவம் என்பது பிசினஸ் இல்லை, அது மக்களுக்கான சேவை’ என்கிற கொள்கையோடு செயல்படதுவங்கி, தங்கள் மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை நோயாளிகளிடம் பணம் வாங்காமல் மருத்துவ சேவை செய்ய ஆரம்பித்தார்.
இவருக்கு துணையாக திருச்சியில் எம்.பி.பி.எஸ் உடன் டி.ஜி.ஓ எனும் மருத்துவ படிப்பை முடித்த முதல் மருத்துவரான அவரது தங்கை சகுந்தலாவும் துணையாக, செயல்பட மருத்துவ சேவையை சிறப்பாக செய்துள்ளனர். அதோடு மருத்துவமனை வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி அடுத்த சில வருடங்களில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் மற்றொரு புதிய மருத்துவமனை ஆரம்பித்தார். இப்போது இந்த மருத்துவமனைகள் வளர்ந்து நிற்கின்றன,.
தங்கள் மருத்துவ பணிகளுக்கு மத்தியில் அவர் வாழ்நாள் முழுவதும் திருச்சியில் உள்ள ராமகிருஷ்ணா குடில், ராமகிருஷ்ணா தபோவனம் ஆகியவற்றில் தொடர்ந்து இலவச மருத்துவ சிகிச்சை வழங்கி வந்தார்.
அதேபோல் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் என சுற்றுவட்டாரங்களில் பெரும்பான்மையான மக்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதை உணர்ந்ததன் அடிப்படையில் ஜி.வி.என் புற்றுநோய் தடுப்பு மையம் உருவானது. புற்றுநோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்க கிராமப்புற பகுதிகளில் அப்போதே நூற்றுக்கணக்கான மருத்துவ முகாம்களை நடத்தியும் உள்ளார்.
அவர் மறைவிற்கு பிறகு டாக்டர்.ஜி.விஸ்வநாதனின் மகன்களாக விளங்கும் டாக்டர் ஜெயபால், சிங்காரத்தோப்பில் உள்ள மருத்துவமனையை கவனித்து வந்தார். இவரது மகன் செந்தில், மருமகள் டாக்டர் கவிதா, மகள் சென்னை மருத்துவமனையில் மருத்துவராகவும் உள்ளார். அடுத்து இன்னொரு மகன் டாக்டர் கனகராஜ் திருச்சி மாம்பழச்சாலையில் டாக்டர் விஸ்வநாதன் சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை நடத்திவருகின்றார்., இவர்கள் மகன் டாக்டர் கோவிந்தராஜ்-டாக்டர் ஹேமமாலினி தம்பதியரும் மருத்துவர்கள்தான். இப்படி அடுத்தடுத்த தலைமுறைகளும் மருத்துவர்களாகவும் திருச்சிக்குள் தனித்தனியே மருத்துவமனையும் நடத்தி வருகின்றார்கள். இப்போதும் ஒரு நாளைக்கு 500பேருக்கு இலவச சிகிச்சையும், உள்நோயாளிகளுக்கு கட்டண சலுகைகளும் வழங்குகிறார்கள். இந்தியாவிலேயே படிப்பறிவு குறைவாக இருந்த காலகட்டத்திலேயே மருத்துவம் படித்துவிட்டு, அந்த மருத்துவத்தை ஏழைகளுக்காக பயன்படுத்திய டாக்டர்.ஜி. விஸ்வநாதன் அவர்களை திருச்சி அடையாளங் கள் பகுதியில் பதிவு செய்வதில் பெருமை கொள்கிறது என் திருச்சி இணைய இதழ்.
அடுத்த இதழில் திருச்சியின் அடையாளமாக விளங்கிய இன்னொரு ஆளுமையின் வரலாறு..
