பச்சமலை மங்களம் அருவியில் நீர்வரத்து தொடங்கியது

0

பச்சமலையில் பெய்த தொடர் மழையின் காரணமாக மங்களம் அருவியில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே 527.61 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பச்சமலை அமைந்துள்ளது. இங்கு 35 காப்புக் காடுகளும், வண்ணாடு, தென்பர நாடு, ஆத்திநாடு, கோம்பை ஆகிய 4 மலை நாடுகளுக்கு உட்பட்ட ஏராளமான கிராமங்களும் உள்ளன.

இங்கு பெய்யக்கூடிய மழைநீர், மலைகளின் வழியாகப் பயணித்து சின்ன பக்களம் அருகே ‘மங்களம் அருவி’யாக மாறி கீழ்நோக்கிப் பாய்கிறது.

பச்சமலையின் பிரதான சுற்றுலாத் தலமான டாப் செங்காட்டுப்பட்டியில் இருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த அருவியில் ஆண்டுதோறும் அக்டோபர் மாத இறுதியில் தொடங்கி நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி வரை நீரோட்டம் இருக்கும். எனவே திருச்சி, நாமக்கல், பெரம்பலூர், சேலம் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் இங்கு வந்து குளித்து மகிழ்வர்.

 

food

இந்நிலையில், பச்சமலை பகுதியில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. குறிப்பாக தென்பர நாடு பகுதியில் கடந்த 20-ம் தேதி 13 மி.மீ, 23-ம் தேதி 13.மி.மீ, 25-ம் தேதி 25 மி.மீ மழையளவு பதிவானது. மற்ற நாட்களிலும் தொடர்ச்சியாக ஓரளவு மழை பெய்ததால் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததுடன், மலைப் பகுதிகளிலுள்ள பாறைகளில் ஆங்காங்கே நீர்க்கசிவு ஏற்பட்டது.

இவற்றின் காரணமாக மங்களம் அருவியில் தற்போதே நீர்வரத்து தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்களும், சுற்றுலாப் பயணிகளும் அங்கு செல்லத் தொடங்கியுள்ளனர். எனினும், செம்மண் நிறத்தில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அதில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் தயக்கம் காட்டும் நிலை காணப்படுகிறது.

இதுகுறித்து வனத் துறையினர் கூறியபோது, ‘‘வழக்கமாக ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழையையொட்டி அக்டோபர் மாத இறுதியில்தான் இந்த அருவியில் நீர்வரத்து அதிகரிக்கும். ஆனால், தற்போது பெய்த தொடர்மழையால் இப்போதே நீர்வரத்து தொடங்கிவிட்டது. இன்னும் ஓரிரு தினங்களுக்குச் செம்மண் நிறத்தில்தான் தண்ணீர் வரும். அதற்குப்பின் தெளிந்த நீராகிவிடும்.

இனி, வடகிழக்குப் பருவமழை தொடங்கும் காலம் என்பதால், இந்த அருவியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தொடர்ச்சியாக நீர்வரத்து இருக்கலாம் என எதிர்பார்க்கிறோம். மலையேற்றம், சுற்றுச்சூழல் ஆராய்ச்சி, பள்ளி மற்றும் கல்லூரிகளிலிருந்து கல்விச் சுற்றுலா போன்றவற்றுக்காக கடந்த ஆண்டுகளைவிட, நடப்பாண்டில் பச்சமலைக்கு அதிகளவில் சுற்றுலா வருகின்றனர். அவர்கள் இந்த அருவிக்கும் வர வாய்ப்புள்ளதால், அதற்கேற்ப அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்’’ என்றனர்.அருவிக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படுமா?

சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் கடந்த 2014-ம் ஆண்டில் நுழைவுவாயில், படிக்கட்டுகள் அமைத்தல், நீர்வீழ்ச்சிக்கு அருகே இரும்புத் தடுப்புகள் அமைத்தல் போன்ற மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், சின்ன பக்களம் பிரதான சாலையில் இருந்து மங்களம் அருவிக்குச் செல்வதற்கான சாலை வசதி ஏற்படுத்தி தரப்படவில்லை. மேடு, பள்ளங்கள் நிறைந்த கரடு முரடான சாலையாக இருப்பதால் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வரும் சுற்றுலாப் பயணிகளால் இங்கு செல்ல முடியவில்லை. இருசக்கர வாகனங்களில் சென்றால் கூட தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே, கார் உள்ளிட்ட வாகனங்களை பிரதான சாலையிலேயே நிறுத்திவிட்டு சுமார் 1.5 கி.மீ தூரம்நடந்து அருவிக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதைத் தவிர்க்க மங்களம் அருவிக்குச் செல்ல தார்ச்சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

திருச்சி – அ.வேலுச்சாமி  

gif 4

Leave A Reply

Your email address will not be published.