திருச்சியில் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் கணவன் மீது வழக்கு தொடுத்த சப் இன்ஸ்பெக்டர் மகள்

0
D1

 

திருச்சியில் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் கணவன் மீது வழக்கு தொடுத்த சப் இன்ஸ்பெக்டர் மகள்

திருச்சி சிந்தாமணி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவர், திருச்சியில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகள் தமிழ்ச்செல்வி (வயது 24). பி.இ. சிவில் என்ஜினீயரிங் படித்தவர். தமிழ்ச்செல்விக்கு, அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள அணைகுடம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி-ராணி தம்பதியின் மகன் யோகராஜ் (30) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

D2

கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி தமிழ்ச்செல்வி-யோகராஜ் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது சீர்வரிசையாக வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவை பெண் வீட்டார் தரப்பில் வழங்கப்பட்டது. திருமணம் முடிந்த பின்னர் கணவர் மற்றும் மாமனார், மாமியாருடன் கூட்டு குடும்பமாக தமிழ்ச்செல்வி வசித்து வந்தார்.

50 பவுன் நகை, ரூ.5 லட்சம் ரொக்கம்

N2

திருமணம் முடிந்த ஒரு வாரம் கழித்து, சென்னை ஆவடியில் வசித்து வரும் அண்ணன் வீட்டிற்கு தமிழ்ச்செல்வி தனது கணவர் யோகராஜுடன் விருந்துக்கு சென்றார். சென்னையில் யோகராஜ், அவரது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது நண்பர்களுடன் அமர்ந்து கொண்டு யோகராஜ், தமிழ்ச்செல்விக்கு செல்போனில் அழைப்பு விடுத்து ஆபாசமாகவும், தகாத வார்த்தையாலும் பேசியதாக கூறப்படுகிறது.

கணவரின் இத்தகைய பேச்சால் தமிழ்ச்செல்வி மிகவும் மனமுடைந்தார். பின்னர் அவர்கள் இருவரும் உடையார்பாளையத்தில் உள்ள வீட்டிற்கு வந்தனர். அங்கு கணவர் யோகராஜ், மாமனார் கிருஷ்ணமூர்த்தி, மாமியார் ராணி ஆகியோர் சேர்ந்து வரதட்சணையாக 50 பவுன் நகை, ரூ.5 லட்சம் ரொக்கப்பணத்தை பெற்றோரிடம் வாங்கி வருமாறு தமிழ்ச்செல்வியிடம் கூறி கொடுமை செய்து வீட்டைவிட்டு துரத்தி விட்டதாக கூறப்படுகிறது.

திருச்சி சிந்தாமணியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு தமிழ்ச்செல்வி வந்து, அங்கு நடந்ததை கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார். பின்னர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து அவர் புகார் கொடுத்தார். இதுகுறித்து திருச்சி கோட்டை அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை எடுக்க கமிஷனர் உத்தரவிட்டார்.

அதன்பேரில், தமிழ்ச்செல்வியை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக, யோகராஜ், அவரது பெற்றோர் கிருஷ்ணமூர்த்தி, ராணி ஆகிய 3 பேர் மீதும் கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் வரதட்சணை கேட்டு கொடுமை செய்த சம்பவம் அரியலூர் மாவட்டம் அணைகுடம் கிராமத்தில் நடந்ததால் அரியலூர் அனைத்து மகளிர் போலீசுக்கு வழக்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

N3

Leave A Reply

Your email address will not be published.