திருச்சியில் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் உயிருடன் மீட்பு

கடந்த 17ம் தேதி உய்யகொண்டான் கால்வாயில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரை போலீஸார் மீட்டனா்.
திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே உய்யகொண்டான் கால்வாய்க்கு மேல் பாரதிதாசன் சாலை பாலம் உள்ளது. இது முக்கிய சாலை என்பதால் பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அதன் வழியாக அதிக உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அரசு தலைமை மருத்துவமனை பகுதியிலிருந்து வந்த இளைஞா் ஒருவா் பாரதிதாசன்சாலை பாலத்திலிருந்து உய்யகொண்டான் கால்வாயில் விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் கண்டோன்மென்ட் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து, கண்டோன்மென்ட் காவல்நிலைய ஆய்வாளா் செந்தில்குமார், பாரதிதாசன் சாலை ரவுண்டானாவில் இருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளா் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, நீச்சல் தெரிந்த தன்னார்வ இளைஞா்கள் முகமது, மன்சூா், சிபியோன் மற்றும் தீயணைப்புத்துறை வீரா்கள் உதவியுடன் அந்த இளைஞா் பத்திரமாக மீட்டனர்..
அந்த இளைஞர் கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறைச் சோ்ந்த பிரபு (38) என்பதும், மதுபோதையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
